அபுதாபியில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு..17-1439778494-modi-dubai52 நாள் சுற்றுப்பயணமாக அமீரகம் சென்ற பிரதமர் மோடிக்கு அபுதாபியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


வளைகுடா நாடான அமீரகம் (ஐக்கிய அரபு குடியரசு), இந்தியாவின் 3–வது பெரிய  வர்த்தக கூட்டாளியாக இருந்து வருகிறது.


இரு நாடுகளுக்கும் இடையே ஆண்டுக்கு 59 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3¾ லட்சம் கோடி) அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இங்குள்ள மக்கள் தொகையில் 30 சதவீதத்தினர்,  அதாவது  26 லட்சம் பேர்  இந்தியர்கள் ஆவர்.


இரு  நாடுகளுக்கும் இடையே நீண்ட கால வர்த்தகம் மற்றும் சிறந்த நட்பு நீடித்து வரும் நிலையில், கடந்த 1981–ல் இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு வேறு எந்த  இந்திய  பிரதமரும்  அங்கு  பயணம்  மேற்கொள்ளவில்லை.


இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று அமீரகம் புறப்பட்டு சென்றார். 34 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்திய பிரதமரின் வரலாற்று சிறப்பு மிக்க இந்த சுற்றுப்பயணத்தை, இந்தியர்கள் மட்டுமின்றி  அமீரக  குடிமக்களும்  ஆவலுடன்  எதிர்பார்த்து  உள்ளனர்.


இதற்காக  சிறப்பு விமானம் மூலம் அபுதாபி போய்ச்சேர்ந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பளத்துடன் கூடிய சிறப்பான வரவேற்பு  அளிக்கப்பட்டது. அபுதாபி பட்டத்து இளவரசரும், அமீரக பாதுகாப்பு  படையினரின்  துணை  சுப்ரீம் கமாண்டருமான ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான், தனது 5 சகோதரர்களுடன் விமான நிலையத்தில் மோடியை வரவேற்றார்.


அமீரகத்துக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை பட்டத்து இளவரசர் வரவேற்கும்  மரபு இல்லை. ஆனால்  அந்த  மரபை  மீறி பிரதமர் மோடியை, அபுதாபி பட்டத்து இளவரசர் வரவேற்றார்.  பின்னர் அதிபர் மாளிகையில் மோடிக்கு பாரம்பரிய முறையிலான வரவேற்பு அளிக்கப்பட்டது.


அமீரகத்தில் தனது முதல் நிகழ்ச்சியாக அபுதாபியில் உள்ள ஷேக் ஜாயித் கிராண்ட் பள்ளிவாசலுக்கு மோடி சென்றார். இந்தியாவின் தாஜ்மகாலை ஒத்திருக்கும்   இந்த பள்ளிவாசல், உலகின்  மிகப்பெரிய பள்ளிவாசல்களில் 3–ம் இடத்தில் உள்ளது. முகலாய கட்டடக்கலையில் கட்டப்பட்டிருக்கும்  இந்த  பள்ளிவாசலுக்கான  மக்ரானா கற்கள் இந்தியா மற்றும் இத்தாலியில்  இருந்து  இறக்குமதி  செய்யப்பட்டது  குறிப்பிடத்தக்கது.


பின்னர்  அமீரகத்தின்  நவீன  நகரங்களில் ஒன்றான மஸ்தார் நகருக்கு மோடி சென்றார். அங்கு அவர் உள்ளூர் வர்த்தக தலைவர்களுடன் பேச்சு நடத்தினார். இரவில்  இந்திய  தொழிலாளர்களை  அபுதாபியில்  சந்தித்து உரையாடினார்.


இதற்கிடையே அவர் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களும் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்துகின்றனர். இதில் வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு மற்றும் முதலீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் முக்கியமாக இடம் பெறுகிறது.


அபுதாபியில் தனக்கு வழங்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்காக அமீரக மக்களுக்கு மோடி நன்றி தெரிவித்தார். டுவிட்டரில் அரபு மொழியில் எழுதியிருந்த அவர், ‘நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்த பயணத்தால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் வலுவடையும் என நம்புகிறேன்’  என்று கூறியிருந்தார். மேலும் விமான நிலையத்தில் தன்னை  வரவேற்ற  அபுதாபி  பட்டத்து  இளவரசரையும் அவர் பாராட்டினார்.


மோடியின் அமீரக பயணம், இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகளை முன்னெடுத்து செல்வதற்கான திட்டங்களை வகுக்க சிறந்த வாய்ப்பை  ஏற்படுத்தியிருப்பதாக அமீரக வெளியுறவு மந்திரி ஷேக் அப்துல்லா பின் ஜாயித் அல் நஹ்யான்  கூறியுள்ளார்.


அபுதாபி  நிகழ்ச்சிகளை முடித்து இன்று துபாய் செல்லும் பிரதமர் மோடி, அங்கு அமீரக துணை அதிபர் மற்றும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக்  முகமது  பின்  ராஷித் அல் மக்தூமுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.


மேலும் அங்குள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இந்திய வம்சாவளியினரிடையே  மோடி  உரையாற்றுகிறார். இதில் பங்கேற்க சுமார் 50 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.


முன்னதாக அமீரக பயணம் தொடர்பாக அமீரகத்தில் வெளியாகும் ‘கலீஜ் டைம்ஸ்’ பத்திரிகைக்கு பேட்டியளித்த மோடி, ஐக்கிய அரபு அமீரகத்தை ‘இந்தியாவின் மதிப்புமிக்க பங்காளி’ என வர்ணித்தார். அவர் மேலும் கூறியதாவது:–


தீவிரவாதம், பிரிவினைவாதம் உள்ளிட்ட காரணங்களால் இந்த பிராந்தியத்தில் ஒரே மாதிரியான பாதுகாப்பு பிரச்சினைகளை நாம் சந்தித்து வருகிறோம். எனவே இந்தியாவும், அமீரகமும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் மிகுந்த முக்கியத்துவம்  கொடுத்து  வருகின்றன.


இதே வழியில் தான் நான் அமீரகத்தை பார்க்கிறேன். இந்த வளைகுடா பிராந்தியம் இந்தியாவின் பொருளாதாரம், எரிபொருள் மற்றும் பாதுகாப்பு துறைகளில் முக்கிய பங்காற்றி வருகிறது. அமீரகத்தை இந்தியாவின் முன்னணி வர்த்தகம் மற்றும் முதலீட்டு பங்காளியாக பார்க்க நான் விரும்புகிறேன்.


பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள வழக்கமான மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பை நாம் உருவாக்க வேண்டும். பிராந்திய மற்றும் சர்வதேச சவால்களை நாம் இணைந்து எதிர்கொள்ள வேண்டும். நமது உறவுக்கு எல்லையே இல்லை.


அமீரகத்தில் வாழும் இந்திய சமூகத்தினரை பொறுத்தவரை, இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தும் அமீரகத்திலும் பேசப்படுகின்றன. இதை பார்க்கும்  போது  ஐக்கிய அரபு அமீரகம் ஒரு குட்டி இந்தியா போல உள்ளது. இந்த வழியில் இரு சமூகத்தினரும் இணைந்து செயல்படுவது ஒரு சிறப்பு பிணைப்பை  பிரதிபலிக்கிறது.


இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.