தமிழக அரசு அனுமதியுடன் R.S.S பயிற்சி வகுப்பு...??79834ffd205366348da9c7ee3f22b66f_XLஎன்ன நடந்துகொண்டிருக்கிறது தமிழ்நாட்டில்? ஜெயலலிதா தனது வழக்குக்காக  இன்னும்  என்னவெல்லாம்  செய்யப்போகிறார் ?தமிழ் உள்பட தாய்மொழி களுக்கு கெட் அவுட்டு, ஹிந்தி- சமஸ்கிருத மொழிகளுக்கு கட் அவுட்டு  என்கிற ரீதியில் ஆர்.எஸ். எஸ்ஸின் அப்ரண்டிஸாக செயல் பட்டுக்கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க அரசு, தனது திட்டங்களை தமிழக அரசு அதிகாரிகள் மூலமாகவும் விதைக்கத் தொடங்கிவிட்டது.


முதல்கட்டமாக, அரசுப்பள்ளி ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் வேலையைக்  காட்ட ஆரம்பித்திருக்கும்  அதிர்ச்சித்தகவல் நமக்கு கிடைக்கவே   விசாரணையில்   இறங்கினோம்.


காஞ்சிபுரம் மாவட்ட அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருக்கிறார் அவர். நம்மிடம் பேசியபோது, “""ஜூலை 23 மற்றும் 24 தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, பண்பு மற்றும் கலாச்சார முனைவு மைய அறக் கட்டளை சார்பாக, தாம்பரம் - வள்ளுவர் குருகுலம் உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமுக்கு, பள்ளிக்கு ஓர் ஆசிரியர் வீதம் தவறாமல் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும்னு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (செங்கல்பட்டு) உத்தரவிட்டிருக்காங்கன்னு சொல்லி எங்க பள்ளியிலிருந்து அனுப்பி வெச்சாங்க''  என்றவர்  அந்த  உத்தரவு  நகலையும் காட்டினார்.


தொடர்ந்து அவரே, ""என்னை மாதிரியே காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளிகளிலிருந்து பல்வேறு ஆசிரியர்கள் வந்திருந்தாங்க. முதலில், பெண்களை மதிக்கணும்... காடுகளை அழிக்கக் கூடாது... சுற்றுச்சூழலை பாது காக்கணும்னு பேச ஆரம்பிச்சவங்க மாடு, யானை, பாம்பு உள்ளிட்ட விலங்குகளை  கொல்லக்கூடாது.  இதையெல்லாம் புனிதமா மதிக்கணும்ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.


அப்படின்னா, ஆடு கோழி எல்லாம் புனிதமில்லையான்னு கேட்டதுக்கு பதில் இல்லை. மேலும், ஐ.எம்.சி.டி.எஃப் (Initiative For Moral and Cultural Training Foundation) என்கிற பெயரில் ஒரு கையேடை கொடுத்தாங்க.


அதிலே துவ்ருக்ஷா/நாகா வந்தனம், துளசி வந்தனம், பூமிவந்தனம், பித்ரு வந்தனம், சுவாசினி வந்தனம், பாரத்மாதா/பரம்வீர் வந்தனம்னு ஆறு விதமான சமஸ்காரம்ஸ்களை பண்ணணும்னு சொன்னாங்க.


என்ன சொல்றாங்கன்னு எங்க யாருக்கும் புரியலை. சமஸ்காரம்னா சமஸ்கிருதத்திலே பயிற்சின்னு அர்த்தமாம். அடுத்தக் கொடுமை என்னன்னா தமிழ்த்தாய்  வாழ்த்து,  ஆங்கிலத்துல இருந்தது. கேட்டதுக்கு "ஜனகனமன' வை  புரிஞ்சிக்கிட்டா பாடுறீங்கன்னு கேட்டாங்க.


சலவைக் கடையில் துணிக்கு குறியீடு போடுறமாதிரி மனிதனுக்கு குறியீடு ரொம்ப முக்கியம்னவங்க பிள்ளையார் சுழியோட முக்கியத்துவத்தைப்பற்றி பேசினாங்க. பல மதத்தைச் சேர்ந்த ஆசிரியர்களும் இருக்கிற இடத்தில் ஏன் இப்படி பேசுறாங்கன்னு புரியலை.


அதுக்கப்புறம், ஆடிட்டர் குருமூர்த்தி வந்து பேசினார். "இந்தியாவோட ஒற்றுமை நமக்கு முக்கியம். அதற்கு, இந்துமத கலாச்சாரம்தான் சரியாக இருக்கும். வெளிநாட்டுக்கலாச்சாரங்கள் ஒத்துவராது. விவேகானந்தர், பரமஹம்சர் கொள்கைகளை கடைப்பிடிக்கணும். பாரதநாடு, பாரத மாதாவை போற்றணும்னு பேசினார்.


ராஜலட்சுமின்னு  ஒரு  அம்மா, "சைவ உணவுதான் சாப்பிடணும், சாந்தி மந்திரம் ரொம்ப முக்கியம்'னு  சர்ஃப் எக்சல் போடாத குறையாய் ஆர்.எஸ்.எஸ். ஸ்டைலில் மூளைச் சலவை பண்ணிக்கொண்டிருக்க, சிறுபான்மை  மதத்து ஆசிரியர்களோடு இந்துமத ஆசிரியர்களும் சேர்ந்து முகம் சுளிக்க ஆரம்பிச் சுட்டாங்க.


அப்ப ஒரு ஆசிரியர் பொறுமையிழந்து,  ‘"இது என்ன ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியா? நீங்க என்ன ஆர்.எஸ்.எஸ்.-ன் யூனிட்டா'ன்னு கொந்தளிச்சுப் போய் கேட்க... சலசலப்பு உண்டாகிடுச்சு.


போன ஜூலை 23, 24 என இரண்டு நாட்கள் நடந்த இந்த சமஸ்கிருத மற்றும் இந்துமதக் கொள்கை திணிப்பு நிகழ்ச்சியில் உச்ச பட்சமாக "பள்ளி மாணவர் களுக்கு இதை எல்லாம் சொல்லிக் கொடுக்கவேண்டும்' என்று சொன்னதோடு, "ஒரு பள்ளிக்கு 5 மாணவர்களை தயார் செய்து எங்கள் குருகுலத்துக்கு அழைத்து வாருங்கள்'னு சொல்றாங்க.


மாணவர்கள்  மனதில் மத்திய அரசு திணிக்க நினைக்கும் மதவாதத்திற்கு மாநில அரசின் பள்ளிக் கல்வித்துறை துணைபோகிறது''’என்று கொட்டித் தீர்த்தார்.


"எந்த அடிப்படையில் இந்த மாதிரி பயிற்சிக்கு ஆசிரியர்களை அனுப்பினீர்கள்?' என காஞ்சிபுரம் மாவட்ட சி.இ.ஓ. உஷாவிடம் கேட்டபோது, ""ஜாயிண்ட் டைரக்டர் ஆபீஸ்லயிருந்து கடிதம் வந்ததால அப்படியே ஃபார்வேர்டு பண்ணிட்டோம் சார். என்ன பயிற்சி கொடுத்தாங்கன்னு ஆசிரியர்களிடம் விசாரித்துவிட்டு  உயரதிகாரிகளுக்கு ரிப்போர்ட் பண்றேன் சார்''’ என்றார் அவர் நடந்ததை அறியாத தொனியில்.


தமிழகப் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பனின் கவனத்துக்கு இதனை  கொண்டு சென்றபோது,  ""இனி,  இப்படிப்பட்ட பயிற்சிகளுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்று உத்தரவிடுகிறேன்'' என்றார் உறுதியான குரலில்.


"பா.ஜ.க. -அ.தி.மு.க கூட்டணி ஏற்படுகிறதோ இல்லையோ, தாய்மொழிக்கும் சிறுபான்மையினருக்கும் எதிராக செயல்படுவதில் மோடி அரசும் ஜெ. அரசும் கூட்டணியாகத்தான் இருக்கின்றன.


...ஜோதிமணி சின்னமலை.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.