வயிற்றில் துணியை கட்டி, வளைகாப்பும் நடத்தி கர்ப்பம் அடைந்ததாக கணவரை ஏமாற்றிய மனைவி.8258b595-d459-41ce-acd8-1444d695a055_S_secvpf.gifதிருச்சி மேலகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்தவர்  கஜேந்திரன். (வயது 32) இவர் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும்  திருச்சி கீழகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த உறவு பெண்ணான சங்கீதா (25)  என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.


தூத்துக்குடியில் வேலை பார்க்கும் கணவன் கஜேந்திரன் அவ்வப்போது திருச்சியில் உள்ள மனைவி சங்கீதாவை பார்த்து செல்வார். இந்நிலையில் சங்கீதா கர்ப்பம் அடைந்ததாக கூறினார்.


தூத்துக்குடியில் இருந்து கஜேந்திரன் அடிக்கடி மனைவியிடம் போன் செய்து வயிற்றில் குழந்தை நன்றாக வளருகிறதா? சாப்பிட்டாயா? ஆஸ்பத்திரிக்கு சென்று  பரிசோதனை  செய்தாயா?  என்று  அக்கறையோடு  கேட்டு வந்துள்ளார்.


சங்கீதாவும் திருவெறும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்வதாகவும் குழந்தை நன்றாக வளருவதாகவும் கூறினார். 9 மாதங்கள் ஆனதும் சங்கீதாவிற்கு அவரது பெற்றோர் வீட்டில் வளைகாப்பு நடத்தி அழைத்து சென்றனர்.


இந்தநிலையில் சங்கீதாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதாகவும் அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்துள்ளதாகவும் தூத்துக்குடியில் உள்ள கஜேந்திரனுக்கு  சங்கீதாவின்  பெற்றோர்  தெரிவித்தனர்.


கடந்த 10–ந்தேதி சங்கீதாவிற்கு பிரசவம் நடந்ததாக தெரிவித்தனர். உடனே தூத்துக்குடியில் இருந்து குழந்தையை பார்க்கும் ஆர்வத்தில் கஜேந்திரன் திருச்சிக்கு  விரைந்து  வந்தார்.


சங்கீதாவை பார்த்து ஆசையுடன் குழந்தை எங்கே? என்று கேட்க அவர் திரு திருவென விழித்தார். குழப்பம் அடைந்த கஜேந்திரன் மீண்டும் மீண்டும் கேட்டபோது குழந்தை இறந்து பிறந்ததால் புதைத்து விட்டதாகவும், கழிவறைக்கு  சென்ற  போது  விழுந்து விட்டதாகவும் மாற்றி மாற்றி கூறினார்.


சங்கீதாவின்  பெற்றோரும் சரியான பதிலை கூறவில்லை. இதில் ஏதோ மர்மம் இருப்பதை தெரிந்து கொண்ட கஜேந்திரன் பொன்மலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மரகதம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.


போலீஸ்  விசாரணையில்  குழந்தை பிறந்தது பற்றி சங்கீதா முன்னுக்கு பின் முரணாக பேசினார். குழந்தை பிறந்து இறந்து விட்டதாகவும், குறை மாதத்திலேயே கரு கலைந்து விட்டதாகவும் கூறினார். உடனே போலீசார் பிரசவம் நடந்த ஆஸ்பத்திரி, கருக் கலைப்பு நடந்த ஆஸ்பத்திரி விபரம் குறித்தும்,  மருத்துவ  பரிசோதனை  விபரம்  குறித்தும் கேட்டனர்.


அந்த ஆஸ்பத்திரிகளுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்திய போது அது போன்று  எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் சங்கீதாவை கிடுக்குபிடி விசாரணைக்கு மகளிர் போலீசார் உட்படுத்தினர்.


அப்போது சங்கீதா குழந்தை உருவானதாக நாடகமாடியதாகவும், வயிற்றில் துணியை கட்டி ஏமாற்றி வளைகாப்பு வரை அனைவரையும் நம்ப வைத்ததாகவும் கூறினார். இதை கேட்ட போலீசாரும் கணவர் கஜேந்திரன் குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.


எதற்காக சங்கீதா இப்படி நாடகம் ஆடினார் என்பதற்கு சரியான பதிலை கூற வில்லை. கணவரை பிடிக்கவில்லை என்றும், திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை என்றும் மாறி மாறி கூறினார். மனைவி இப்படி ஏமாற்றி விட்டாரே என அதிர்ச்சி அடைந்த கஜேந்திரன் மகளிர் போலீசாரிடம் சட்டப்படி நடவடிக்கை  எடுங்கள்  என  கூறி  விட்டார்.


இதை தொடர்ந்து நாடக மாடிய சங்கீதா மீது மகளிர் போலீசார் இ.பி.கோ.315 மற்றும் 318 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்ததாக பெற்றோர் பொன்னையன், செல்வி மற்றும் அக்காள் செண்பகம், மாமா விக்னேஷ் ஆகியோர் மீதும் இ.பி.கோ  109  பிரிவுகளின்  கீழ் வழக்கு பதிவு செய்தனர்.


கைது செய்யப்பட்ட சங்கீதா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு விரைவில் மருத்துவ பரிசோதனை செய்து மர்மத்தை முடிவுக்கு கொண்டு வர மகளிர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.


இந்த விசித்திரமான வழக்கு திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.