மதானிக்கு எதிராகப் பொய் சாட்சி..12027529_916797308392994_2950022969428639037_nபெங்களூரு பரப்பன அக்ரகாரச் சிறையில் வாடும் 'மக்கள் ஜனநாயகக் கட்சி' யின் தலைவர் அப்துல் நாசர் மதானி அவர்களுக்கு எதிராகக் கர்நாடகக் காவல்துறையால் முதன்மைச் சாட்சியாக நிறுத்தப்பட்ட ரஃபீக் என்பவர்.


தான் கட்டாயப்படுத்திப் பொய் சாட்சி சொல்ல வைக்கப்பட்டதாக நேற்று நீதிமன்றத்தில் சொல்லியுள்ளார்.


கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் மதானி அவர்களைத் தமிழக போலீஸ் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கோவைச் சிறையில் அடைத்திருந்தது.  குற்றம் நிரூபிக்கப்படாமல் பின் அவர் விடுதலை செய்யப்பட்டார்.


விடுதலையான சில மாதங்களில் மீண்டும் அவர் கர்நாடகப் போலீசால் கைது செய்யப்பட்டார். பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அவர் முக்கிய குற்றவாளியாக நிறுத்தப்பட்டார்.


கடும் நோய்வாய்ப்பட்டிருந்தவரைச் சிகிச்சைக்குக் கூட பிணையில் விட கர்நாடக போலீசார் மறுத்தனர். சிறையில் இருந்தபோது ஒரு முறை நானும் சுகுமாரனும்  பார்த்து வந்து இங்கு ஒரு பதிவு செய்திருந்தது நினைவிருக்கலாம்.


கொடகுப் பகுதியில்  சோமவார்ப்பேட்டையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்த ரஃபீக் என்பவரை இழுத்துச் சென்ற கர்நாடக காவல் துறை அவரை மதானிக்கு எதிரான முக்கிய சாட்சியாக நிறுத்தியது.


சோமாவார்ப்பேட்டையில் தன் சகாக்களுடன் மதானி தொடர் குண்டு வெடிப்புச் சதி  தீட்டியதற்கு  நேரடி  சாட்சியாக  ரஃபீக் நிறுத்தப்பட்டார். நேற்று விசாரணை  நீதிமன்றத்தில்  சாட்சியம் அளித்த இந்த "முதன்மை சாட்சி" ரஃபீக். தான் போலீசாரால் மிரட்டி சாட்சி சொல்ல வைக்கப்பட்டதை ஒத்துக் கொண்டார்.


நீதிமன்ற வளாகத்தில்தான், முதன் முதலாக மதானியைப் பார்த்ததாகவும் சொன்னார். அது மாத்திரமல்ல தன்னிடம் காவல்துறையினர் வெற்றுத் தாள்களில் கையொப்பம் வாங்கிக் கொண்டதையும் நேற்று நீதிமன்றத்தில் வெளிப்படுத்தினார்.


டெஹெல்கா இதழில் பணியாற்றும் ஷஹீனா எனும் இதழாளர் ரஃபீக்கை முன்னதாகப் பேட்டி கண்டு இந்தக் கொடுமையை அம்பலப் படுத்திய போது அவர் மீது கர்நாடகக் காவல்துறையினர் சாட்சிகளைக் கெடுத்ததாகத் தேசத் துரோக வழக்குப் பதிந்தது குறிப்பிடத் தக்கது.


மதானி குற்றமற்றவர் என மீண்டும் விடுதலை செய்யப்படுவது உறுதி. மத வெறியர்களின் தாக்குதலில் ஒரு காலிழந்த, தலித் முஸ்லிம் ஒற்றுமையை உருவாக்கிய  ஒரு  அரசியல் தலைவரை இப்படி ஒரு ஆயுள்தண்டனைக் காலம் சிறையில் அடைத்திருந்த கொடுமையை என்ன சொல்வது.


இப்படி அப்பட்டமான பொய் வழக்குகளைச் சுமத்தி அவரைச் சிறையில் அடைத்த காவல்  கொடூரர்களுக்கு இந்த நீதிமன்றங்கள் தண்டனை அளிக்குமா?


என்னைக் கட்டாயமாகப் பொய் சாட்சி சொல்லச் சொன்னார்கள். வெற்றுத் தாள்களில் கையொப்பம் வாங்கினார்கள் என ஒருவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் கூறியுள்ளார். இதை ஒரு புகாராக ஏற்று தொடர்புடைய கொடியவர்களைக் கைது செய்து வழக்குத் தொடர சட்டத்தில் வழி ஏற்படுத்துவது  எக்காலம்?


தன் மீது தாக்குதல் நடத்தி ஒரு காலை இழப்பதற்குக் காரணமானவனை மன்னித்து அவன் விடுதலை ஆவதற்குக் காரணமானவர் மதானி. அவர் மீது இப்படிப் பொய் வழக்குப்  போடுவதென்றால்  காவல்துறையினருக்கு எத்தனை  இரும்பு  இதயம்  இருந்திருக்க  வேண்டும்?


...மார்க்ஸ் அந்தோனிசாமி.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.