பெல்ஜியம் நாட்டுக்காரர் சென்னை வெள்ளத்தில் சிக்கிய 130 பேரை காப்பாற்றிய சம்பவம். 

சென்னையில் தங்கி இருக்கும் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் வெய்ன் கெய்ட்(வயது 42) என்பவர் தனது குழுவினருடன் சென்று வெள்ளத்தில் தத்தளித்த 130 பேரை காப்பாற்றி உள்ளார்.

இதுகுறித்து, பீட்டர் வெய்ன் கெய்ட், நிருபரிடம் கூறியதாவது:-

 

நான் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்தேன். பாலவாக்கத்தில் தங்கி உள்ளேன். ‘சிஸ்கோ’ நிறுவனத்தில் திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறேன். இந்தியாவில் உள்ள மலை பிரதேசங்கள் மீது எனக்கு அதிக ஈர்ப்பு ஏற்பட்டது.

 

அதன் பிரதிபலிப்பாக கடந்த 2008-ம் ஆண்டு ‘சென்னை டிரெக்கிங் கிளப்பை(மலையேறும் குழு) உருவாக்கினேன். தற்போது இந்த குழுவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 26 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

 

நாங்கள் நாடு முழுவதும் உள்ள மலை பிரதேசங்களில் பயணம் செய்து, அங்குள்ள குப்பைகள், கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறோம். பெல்ஜியம் நாட்டை போன்று சென்னை நகரையும்  என்னுடைய தாய் வீடாக நான் பார்த்து வருகிறேன். சென்னை நகர மக்களின் அன்பு, என்னுடைய சொந்த நாட்டில் இருப்பது போன்று உணர்கிறேன்.

 

மழை வெள்ளத்தால் சென்னை நகரம் தத்தளித்தபோது நம்மால் முடிந்த ஏதாவது உதவியை மக்களுக்கு செய்ய வேண்டும் என்று எண்ணினேன். எங்கள் குழுவை அழைத்துக்கொண்டு வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்கும் முயற்சியில் இறங்கினேன். அப்போது பள்ளிக்கரணையில் மழை வெள்ளத்தில் சிக்கிய உயிருக்கு போராடிய குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள் 130 பேரை பத்திரமாக மீட்டோம்.

 

மனிதர்களை போல வெள்ளத்தில் சிக்கிய நாய், பூனைகள் உள்பட 50 செல்லப்பிராணிகளை காப்பாற்றி ‘புளூ கிராஸ்’ அமைப்பிடம் ஒப்படைத்தோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நாள் மட்டும் உணவு வழங்கினால், அது அவர்களுக்கு நிவாரணமாக அமைந்து விடாது என்று எண்ணி, அவர்கள் ஒரு வார காலம் சமைத்து உண்ணுவதற்கு தேவையான சமையல் பொருட்கள், பாத்திரங்கள், துணி வகைகள், மருந்து-மாத்திரைகள், கொசுவர்த்தி சுருள், மெழுகுவர்த்தி உள்பட 25 பொருட்கள் அடங்கிய பைகளை 3 ஆயிரம் குடும்பத்தினருக்கு வழங்கினோம்.

 

இப்பணியை நாங்கள் மேற்கொள்வதற்கு வெளிநாடுகளில் இருந்து குவிந்த நிதி பெரிதும் உதவியது.

வெள்ளம் வடிந்து சென்னை நகரம் இயல்புநிலைக்கு திரும்பி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது நகர் முழுவதும் குப்பைகள் குவிந்துள்ளன. இத்தகைய சூழலில் நாம் அரசை மட்டுமே நம்பி இருக்க கூடாது. மக்களே களத்தில் இறங்க வேண்டும்.

 

அதன்படி, எங்கள் குழு சார்பில் சென்னை நகரில் ஆழ்வார்ப்பேட்டை, எம்.ஆர்.சி.நகர், காந்திநகர், கோட்டூர்புரம், முகப்பேர், கீழ்ப்பாக்கம், வேளச்சேரி, அசோக் நகர் ஆகிய 8 இடங்களில் தூய்மைப்படுத்தும் பணி நாளை(ஞாயிற்றுக்கிழமை)நடைபெற உள்ளது. நகரை புனரமைப்புக்கும் பணிக்கு தமிழக அரசுக்கு எங்களால் இயன்ற பங்களிப்பை அளிப்போம்.

 

இதில், பள்ளி-கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்களும் கலந்துக்கொள்ளலாம். எங்கள் குழு சார்பில் கடலூரில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு இன்று(சனிக்கிழமை) தேவையான நிவாரண பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.