மலேசியாவில் இருந்து வந்த 1.5 டன் நிவாரணப் பொருட்கள் அதிகாரிகளால் திருச்சியில் தேங்கியது.மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்காக மலேசியாவில் இருந்து சேகரித்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களை திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்ல அனுமதி கிடைக்காததால், மலேசியத் தொண்டு நிறுவனத்தினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்திருந்த மலேசியாவைச் சேர்ந்த ‘தி பீப்பிள்ஸ் ஃபவுண்டேஷன்’ அமைப்பைச் சேர்ந்த பிரகாஷ் கூறியதாவது:

மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட கடலூர், சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக மலேசியாவின் 6 மாநிலங்களில் பொதுமக்களிடம் இருந்து உணவுப் பொருட்கள் உட்பட சுமார் 20 டன் நிவாரணப் பொருட் களை சேகரித்து வைத்துள்ளோம். அதில், 6 டன் நிவாரணப் பொருட்களை விமானம் மூலம் அனுப்ப முடிவு செய்து, முதல் கட்டமாக 1.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பினோம். தவிர, கப்பல் மூலம் 3 கன்டெய்னர்களில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

மலிண்டோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தினர் கட்டணம் ஏதும் வசூலிக்காமல் நிவாரணப் பொருட்களை இலவசமாக திருச்சிக்கு அனுப்பிவைத்தனர். தமிழகத்தில் உள்ள ‘யூ திங்க்’ என்ற தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்து நிவாரணப் பொருட்களை விநியோகிக்க திட்டமிட்டிருந்தோம்.

ஆனால், உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறி திருச்சி விமான நிலையத்தில் இருந்து நிவாரணப் பொருட்களை வெளியே எடுத்துச் செல்ல சுங்கத் துறையினர் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக விமான நிலையத்திலேயே கடந்த 3 நாட்களாக நிவாரணப் பொருட்கள் தேங்கியுள்ளன.

ஆட்சியரையோ, நீதிபதியையோ பார்த்து உறுதிமொழிச் சான்று வாங்கி வருமாறு கூறியதால், ஆட்சியரைச் சந்திக்க வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆட்சியர் அலுவலகத்தில் உதவி கிடைத்ததா என்று அறிவதற்காக தொடர்புகொண்டபோது பிரகாஷும், அவருடன் மனு அளிக்க வந்திருந்த அலெக்ஸும் கூறியதாவது:

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்பகல் 4 மணி வரை காத்திருந்தோம். எந்த மாவட்டத்தில் நிவாரணப் பொருட்களை விநியோகிக்க முடிவு செய்துள்ளோமோ அந்த மாவட்ட ஆட்சியரிடம்தான் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இப்போதுதான் தங்களுக்குத் தெரிய வந்தது என்று கூறி அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.

சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுத் தருமாறு கேட்டதற்கு, அது எங்கள் வேலை யில்லை என்று கூறிவிட்டனர். வெளி நாட்டினரான எங்களுக்கு இங்கு யாரை அணுகுவது என்று தெரிய வில்லை.

மலேசிய விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளும் முடிந்த பிறகே நிவாரணப் பொருட்கள் விமானத்தில் ஏற்றப்பட்டன. நிவாரணப் பொருட்களின் தரத்தை திருச்சி விமான நிலையத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களைக் கொண்டு சோதித்து உறுதி செய்த பிறகும், அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்காமல், தமிழக மக்களுக்காக சேகரித்து வந்த எங்கள் உழைப்பை, மனிதநேயத்தை அலட்சியப்படுத்திவிட்டனர். என்ன செய்வதென்றே தெரியவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.