பிறந்து 24 நாளே ஆன குழந்தையை விளையாட்டாக கொன்ற 3 1/2 வயது சிறுவன்.பிறந்து 24 நாளே ஆன குழந்தையை விளையாட்டாக கொன்ற 3 1/2 வயது சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

கோவையில் பிறந்து, 24 நாட்களே ஆன பெண் குழந்தையை, மூன்றரை வயது நிரம்பிய சிறுவன், தண்ணீர் பக்கெட்டில் ஒளித்து வைத்தான். இதில், குழந்தை மூச்சு முட்டி இறந்தது. கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த பால் வியாபாரியின் மனைவிக்கு, 24 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.

தம்பதிக்கு ஏற்கனவே,மூன்றரை வயதில் மகன் உள்ளான். இந்நிலையில், ஒண்டிப்புதுாரில் உள்ள மாமியார் வீட்டில், இரு தினங்களுக்கு முன் பச்சிளங்குழந்தை திடீரென காணாமல் போனது. புகாரின் பேரில் சிங்காநல்லுார் போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை சமையல் அறையில் இருந்த, தண்ணீர் பக்கெட்டில் மூழ்கிய நிலையில், குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் குழந்தையின் சடலத்தை, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். இதில், வீட்டில் இருந்த மூன்றரை வயது நிரம்பிய சிறுவன், குழந்தையை தண்ணீர் பக்கெட்டில் போட்டு ஒளித்து வைத்தது தெரிந்தது.

இதையடுத்து, சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏழு வயதுக்குட்பட்டவர்களை கைது செய்ய முடியாது என்பதால், சிறுவன் கைது செய்யப்படவில்லை.குழந்தை குறித்து அனைவரிடமும் விசாரித்த போலீசார், சிறுவனிடமும் விசாரித்தனர்.

அனைத்து கேள்விகளுக்கும், பதிலளித்த சிறுவன், பக்கெட்டில் தங்கையை போட்டது குறித்த கேள்விக்கு மட்டும், அமைதி காத்துள்ளான். சிறுவனது போக்கிலேயே விட்டு, விளையாட்டாக போலீசார் விசாரித்தனர்.

அவனிடம் பொருட்களை கொடுத்து, ஒளித்து வைக்குமாறு கூறினர். ஐந்து கிலோ 'வாட்டர் பாட்டிலை' கொடுத்து துாக்க அறிவுறுத்தினர். அதனை துாக்கிய சிறுவன், பக்கெட்டில் போட்டு மூடியுள்ளான். அதிர்ச்சியடைந்த போலீசார், கொலை நடந்ததை யூகித்தனர்.

குழந்தை பிறந்ததில் இருந்து, கிள்ளுவது, அடிப்பது, கீழே இழுப்பது போன்ற செயல்களில் சிறுவன் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இறுதியாக, தங்கையை ஒளித்து வைக்க நினைத்த சிறுவன், தண்ணீரில் போட்டு கொலை செய்ததாக முடிவு செய்யப்பட்டது.

பிறந்த சில நாட்களே ஆன குழந்தை, மாயமானதாக தகவல் கிடைத்ததும், யாரேனும் நரபலி கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், சிங்காநல்லுார் பகுதிகளில் உள்ள, ஐந்து சுடுகாடுகளில் இரவு முழுவதும் போலீசார் தீவிரமாக தேடினர். அதிகாலை ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டுகள் உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

மனநல மருத்துவர் மோனி கூறுகையில், ''மூன்றரை வயது முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு, யோசிக்கும் திறன் இருக்காது. தனக்கு மட்டுமே சொந்தமான தாயின் பாசமும் அன்பும், வேறு ஒரு குழந்தைக்கு செல்லும்போது, சில குழந்தைகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதுண்டு.

தனக்கு கிடைத்து வந்த பாசத்தை திடீரென பங்கு போட வந்த புதிய உறவை, ஒளித்து வைப்பதன் மூலமாவது, பெற்றோரின் அன்பும், கவனமும் தனக்கு கிடைக்கும் என குழந்தைகள் எண்ணலாம்.பெற்றோரும் பிறரும், குழந்தைகளிடமும் ஒரே மாதிரி பழகுவதன் வாயிலாக, இது போன்ற துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளை தடுக்க முடியும்,'' என்றார்.

- பெற்றோர்களே கவனம் தேவை

 

Mohd M Abdahir
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.