பேச்சுத் திறன் இழந்த இளம் பெண், டாக்டர்கள் கைவிட்ட நிலையில் கீழே விழுந்து தலையில் அடி பட்டதில் மீண்டும் பேச்சுத் திறனை பெற்றார்.



கும்பகோணம் அடுத்த கோவிந்தகுடியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் முத்துலெட்சுமி தம்பதி மகள் துர்கா (23). இவரது கணவர் பிரபாகரன். 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த அக்டோபர் 13ம் தேதி துர்காவிற்கு காய்ச்சலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

குடும்பத்தினர் அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு துர்காவிற்கு திடீர் என தலை மட்டும் தொடர்ந்து ஆடத் தொடங்கியது. டாக்டர்கள் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் தலை ஆடுவதாக கூறினர். இந்நிலையில் நன்றாக பேசிக் கொண்டிருந்த துர்காவிற்கு திடீர் என பேச்சுத்திறன் பறிபோனது.

அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படாததாலும், தவறான சிகிச்சையால்தான் இந்நிலை ஏற்பட்டதாக கூறி அவரை அங்கிருந்து புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தலை ஆடுவது நின்றது.

ஆனால் பேச்சுதிறன் மட்டும் வரவில்லை. இதையடுத்து துர்கா வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு பேச்சுத்திறன் வருவதற்கு கோயில், கோயிலாக குடும்பத்தினர் சென்று வந்தனர்.கடந்த 28ம் தேதி துர்கா வீட்டின் அருகே நடந்து சென்றபோது கல்லில் தடுமாறி கீழே விழுந்து தலையில் அடிபட்டது.

அப்போது வலியை தாங்க முடியாமல் துர்கா அம்மா என அலறினார். அப்போது முதல் துர்காவிற்கு பேச்சுத் திறன் மீண்டும் வந்தது. இதனையடுத்து துர்கா மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் துர்காவிற்கு 2 மாதத்திற்கு பிறகு மீண்டும் பேச்சுத் திறன் கிடைத்ததால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

துர்கா கூறும்போது, ‘இரண்டரை மாதமாக வாய்பேசமுடியாத மாற்றுத்திறனாளி போல இருந்தேன். என் குழந்தை அம்மா, அம்மா என மழலை மொழியில் பேசும். அதற்கு பதில் சொல்ல முடியாமல் நான் தவித்தேன். இதற்கு ஆண்டவன் நல்ல முடிவை தந்தார். டாக்டர்கள் கைவிட்டபோதும் கடவுள் எனக்கு அருள் புரிந்தார்’என்றார்.

துர்காவுக்கு திடீரென பேசும் திறன் வந்தது எப்படி என்பது குறித்து முசிறி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரும், காது, மூக்கு, தொண்டை நிபுணருமான செல்வகுமாரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ‘அளவுக்கு அதிகமான காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் மனோ ரீதியாக பயந்து போனதால் அவருக்கு பேச்சுத்திறன் பாதிக்கப்பட்டு இருந்திருக்கலாம். அதற்கு உரிய பயிற்சி அளித்தால் மீண்டும் பேச்சு திறன் வந்து விடும்.

இது தவிர பேச முடியாமல் போன ஒருவர் தலையில் அடிபட்டதால் மீண்டும் தானாக பேச்சுவந்தது என்பது மருத்துவ ரீதியாக 99 சதவீதம் சாத்தியம் இல்லாதது. இது குறித்து சரியான தகவல்களை சொல்ல வேண்டுமானால் அவரது மருத்துவ சிகிச்சை பற்றிய ரிப்போர்ட் பார்த்து சொன்னால்தான் அது சரியாக இருக்கும்’ என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.