மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘ரொட்டி வங்கி’ மூலம் ஏழைகளின் பசியாற்றும் இஸ்லாமிய குடும்பம்.மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் யூசுப் முகாட்டி என்பவர், ‘ரொட்டி வங்கி’ தொடங்கி ஏழை களின் பசியை போக்கி வருகிறார். இந்த உன்னத சேவைக்கு அவருடைய மனைவி, சகோதரிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் உதவி வருகின்றனர்.

இந்தியாவில் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் பட்டினி கிடப்பவர்கள் அதிகம் உள்ளனர். அவர்களின் பசியை போக்க உத்தரப் பிரதேச மாநிலம் பண்டல்கண்ட் என்ற பகுதியில் ஒருவர், ‘ரொட்டி வங்கி’ தொடங்கினார். அதேபோல் இப்போது மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் யூசுப் முகாட்டி என்பவர் கடந்த 5-ம் தேதி ரொட்டி வங்கி தொடங்கி உள்ளார். ‘ஹாரூண் முகாட்டி இஸ்லாமிக் சென்டர்’ என்ற அமைப்பையும் நிறுவி ஏழை மக்களுக்கு உதவி வருகிறார். தவிர துணிக்கடையும் சிறிதாக நடத்திவருகிறார். இந்த ரொட்டி வங்கி ஜின்சி - பைஜிபுரா சாலையில் இயங்கி வருகிறது.

அஜந்தா எல்லோரா குகை ஓவியங்களுக்கு புகழ்பெற்ற அவுரங்காபாத்தில், யூசுப்பின் சேவைக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து 38 வயதாகும் யூசுப் கூறியதாவது:

ஏழைகள் குறிப்பாக முஸ்லிம்கள் பலர் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் மிகவும் கஷ்டப்படுவதை பல ஆண்டுகளாக பார்த்திருக்கிறேன். பல குடும்பங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், ஒருவர் மட்டுமே சம்பாதிப்பவராக இருக்கிறார். அவர்களால் வயிறார உணவு உண்ண கூட வருவாய் கிடையாது. இது மிகவும் பரிதாபமான விஷயம்.

என் மனைவி கவுசர் மற்றும் திருமணமான 4 சகோதரிகள் சீமா ஷாலிமார், மும்தாஜ் மேமன், ஷாநாஸ் ஷபானி, ஹூமா பரியானி ஆகியோருடன் கலந்தாலோசித்தேன். அவர்கள் எல்லோரும் மனதார ஒப்புக் கொண்டு உதவ முன்வந்தனர். கடைசியில் நினைத்தபடி கடந்த 5-ம் தேதி ரொட்டி வங்கியை திறந்து விட்டோம். முதலில் 250 பேர் மட்டுமே உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

ரொட்டி வங்கியை திறந்த பிறகு, இந்த பக்கம் போவோர் வருவோர் எல்லாம் விசாரிக்க தொடங்கினர். மிக உன்னதமான சேவை என்று அவர்கள் பேசி சென்றனர். ரொட்டி வங்கியில் உறுப்பினராக சேர ஒரு படிவத்தை பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களுக்கு நாங்கள் தனி கோட் நம்பர் தருவோம். மேலும் கோட் நம்பருடன் தனி பை ஒன்றும் தருகிறோம்.

உறுப்பினர்கள் தினமும் குறைந்தபட்சம் புதிதாக செய்யப்பட்ட 2 ரொட்டிகள் மற்றும் சைவ, அசைவ உணவு குழம்புகளை வங்கியில் கொடுக்க வேண்டும். தினமும் அவர்களுடைய வீட்டில் என்ன சமைக்கிறார்களோ அதை கொடுத்தால் போதும். அவ்வளவுதான். இதை நாங்கள் சொன்ன பிறகு, 15 நாட்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்து விட்டது. மேலும் மேலும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பல்கி பெருகும் வாய்ப்பு உள்ளது.

காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை ரொட்டி வங்கி செயல்படும். பொதுமக்கள் தாமாகவே முன்வந்து இங்கு ரொட்டிகளையும், சைவ, அசைவ உணவுகளையும் வழங்கி விட்டு செல்கின்றனர். சில வேளைகளில் எதிர்பார்ப்பதை விட அதிகளவு உணவு கிடைத்து விடுகிறது. சுமார் 500 பேருக்கு ரொட்டி வங்கி மூலம் தினமும் உணவு வழங்கி வருகிறோம்.

ரொட்டி வங்கி உணவு வழங்கும் உறுப்பினர்கள் மற்றும் உணவு பெற்று செல்லும் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் முஸ்லிம் அல்லாதவர்கள். எங்கள் ரொட்டி வங்கி பற்றி கேள்விப்பட்ட திருமண ஏற்பாட்டாளர்களும், கூடுதலாக உள்ள உணவு வகைகளை அனுப்பி தொடங்கி உள்ளனர். இதுபோல் 6 இந்து திருமண ஏற்பாட்டாளர்கள், 12 முஸ்லிம் திருமண ஏற்பாட்டாளர்கள் மிகச்சிறந்த சைவ, அசைவ உணவுகளை அனுப்பி வைத்தனர்.

உணவு அதிகமாக வருவதால் அவை கெட்டு போகாமல் இருக்க மிகப்பெரிய பிரீஸரில் வைத்து பயன்படுத்துகிறோம். இதேபோல் பெரிய ரெஸ்டாரன்டுகள், டிலக்ஸ் ஓட்டல்கள், கார்ப்பரேட், தொழிற் சாலை கேன்டீன்கள், பயணிகள் விமான கிச்சன், மெகா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் மிச்சமாகும் உணவு பொருட்களை அனுப்பி வைத்தால் ஏழைகளுக்கு வழங்க முடியும். மேலும், உணவு பொருட்களும் வீணாகாது.

வங்கிக்கு வரும் உணவு தரமானதாக, புதிதாக உள்ளதா என்பதை ஆய்வு செய்தே வாங்குகிறோம். ஏழை மக்கள், வயதானவர்கள், நோயுற்றவர்கள், வேலை இல்லாதவர்கள் போன்றோர் எந்த நேரத்திலும் வந்து அவர்களுக்கு தேவையான, விருப்பமான சைவ அல்லது அசைவ உணவுகளை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் பட்டினி கிடக்கும் அவல நிலை ஏற்படாது. இவ்வாறு யூசப் கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.