முத்துப்பேட்டையில் புகைமண்டலத்தால் விபத்து. பலியான சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.முத்துப் பேட்டையில் குப்பைகளை கொளுத்திய புகை மண்டலத்தால் ஏற்பட்ட விபத்தில் பலியான குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென பல்வேறு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

முத்துப் பேட்டை கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் பேரூராட்சி நிர்வாகத்தால் கொட்டப்பட்ட குப்பைகளை தீவைத்து கொளுத்தியதால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் மினி லாரி மோதிய விபத்தில் பைக்கில் சென்ற அதிராம் பட்டினம் அடுத்த முடுக்குக் காட்டை சேர்ந்த சத்யா, அவரது தம்பி விக்னேஷ் படுகாயமடைந்தனர்.

சத்யாவின் குழந்தை பவிஷா (4) பலியானார். இதனால் விபத்துக்கு காரணமான பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முத்துப் பேட்டையில் பொது மக்கள் மறியலில் ஈடு பட்டனர்.

சிறுமி பலியான சம்பவம் முத்துப் பேட்டையை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பேரூராட்சிக்கு எதிரான பல் வேறு போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளனர். எஸ் டி பிஐ கட்சி உள்ளிட்டோர் பேரூராட்சியை கண்டித்து போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

இந் நிலையில் உயிரிழந்த சிறுமிக்கு நஷ்ட ஈடாக ரூ.15 லட்சமும், படுகாயமடைந்த சத்யா, விக்னேசுக்கு தலா ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும். பேரூராட்சி தலைவர் அருணாச்சலம், செயல் அலுவலர் குலோத்துங்கன் மற்றும் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டு மென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் கூறுகையில், பேரூராட்சி நிர்வாகம், தனியாரிடம் பணம் பெற்று கொண்டு பள்ளத்தை நிரப்புவதற்காக சாலை இருபுறமும் குப்பைகளை கொட்டி வந்தது. மேலும் குப்பைகளுக்கு தீ வைக்கக் கூடாது என்று உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த உத்தரவுகளை மதிக்காமல் பொது மக்களுக்கு சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்தும் நோக்கத் தோடு, நகரின் பல் வேறு இடங்ளில் குப்பைகளை கொட்டி பேரூராட்சி நிர்வாகமே அசுத்தப் படுத்துவது மட்டுமல்லாமல் அதற்கு தீ வைத்து காற்றை மாசுப் படுத்தி ஒரு விபத்தை ஏற்படுத்தி சிறுமியை பலி வாங்கியுள்ளது.

சம்பந்தப் பட்ட பேரூராட்சி தலைவர் அருணாச்சலம், செயல் அலுவலர் குலோத்துங்கனுக்கு தண்டனை பெற்று தரும் வரை ஓயமாட்டேன் என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் முருகையன் கூறுகையில், சிறுமி பலியான குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இதற்காக விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி நியாஸ் கூறுகையில், விபத்துக்கு காரணமானவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமி பவிஷாவுக்கு நஷ்ட ஈடாக ரூ.15 லட்சமும், படுகாயமடைந்த சத்யா, விக்னேஷ் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும். இல்லையென்றால் விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் காளி முத்து கூறுகையில்: விபத்துக்கு காரணமான பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் பதவி விலகவேண்டும். சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் என்றார்.

நகர காங்கிஸ் தலைவர் ஜெகபர் அலி கூறுகையில்: பேரூராட்சி நிர்வாகத்தின் தற்போதைய நிர்வாக சீர்க் கேட்டுக்கு உதாரணமாக இந்த விபத்து போதுமானது. பாதிக்கப் பட்ட குடும்பத்தினருக்கு பேரூராட்சி நிர்வாகம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.