ஆட்டோ டிரைவர் இம்தியாஸின் உடலை 3 வது நாளாக வாங்க மறுப்பு.சேலம் மாவட்டம் ஓமலூர் பல்பாக்கி கோமாளியூர் பகுதியை சேர்ந்த சையத் சுல்தான் மகன் சையத் இம்தியாஸ்(24). ஆட்டோ டிரைவரான இவர், கடந்த 21ம் தேதி வீட்டருகே உள்ள தண்டவாளத்தில் சடலமாக கிடந்தார். காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் அவரது உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்யவேண்டும். இழப்பீடு வழங்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

21ம் தேதியே பிரேத பரிசோதனை முடிந்து சடலத்தை ஒப்படைக்க போலீசார் முன் வந்தனர். ஆனால் குடும்பத்தினர் ஏற்க மறுத்தனர். தொடர்ந்து நேற்று 3வது நாளாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், மேற்கு மண்டல ஐ.ஜி ஸ்ரீதர் நேற்று சேலம் வந்தார். ஆட்டோ டிரைவர் மரணம் குறித்து சேலம் சரக டிஜஐி வித்யா ஜெயந்த்குல்கர்னி, சேலம் மாவட்ட எஸ்பி சுப்புலட்சுமி, ரயில்வே எஸ்பி விஜயகுமார் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, சையத் இம்தியாசின் தந்தை சையத் சுல்தான், தாய் பியாரி பேகம், உறவினர்கள், எஸ்டிபிஐ, மனித நேய மக்கள் கட்சி, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ஐஜியை சந்தித்தனர். கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகளை கைது செய்யவும் வீடியோ பதிவுடன் சையத் இம்தியாசின் உடலை மீண்டும் மறு பரிசோதனை செய்யவும் வலியுறுத்தினர். மேலும் மறுபரிசோதனை செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம். இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகுவோம் என கூறினர்.

தொடரும் கவுரவ கொலைகள்! சாதி வெறியர்களை ஒடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை!

சேலம் மாவட்டம் ஓமலூரில் ஆட்டோ ஓட்டுநர் சையத் இம்தியாஸ் என்ற இளைஞர் 20-01-2016 அன்று இரவு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டுள்ளார். இவர் நித்யா என்ற பெண்ணுடன் பழகி வந்ததாகவும் அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் சித்தப்பா மற்றும் உறவினர்கள் அவரை மிரட்டியதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் 20-01-2016 அன்று இரவு இம்தியாஸ் தலை மற்றும் கழுத்தில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்டுள்ளார். காவல்துறையோ இவர் ரயில் விபத்தில்தான் இறந்துள்ளார் என்று கூறி அவசர அவசரமாக உடலை பிரேத பரிசோதனையும் செய்து வழக்கை திசை திருப்பும் அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர்.

இதே போன்று தான் ஓமலூரைச் சேர்ந்த தலித் இளைஞர் கோகுல் ராஜ் கவுரவ கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டார். பின்னர் அந்த வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மர்மான முறையில் அவருடைய வீட்டிலேயே இறந்து கிடந்தார். அதுவும் தற்கொலை என்று கூறப்பட்டு வருகின்றது.

சேலம் மற்றும் அதற்கு அருகிலுள்ள மாவட்டங்களில் இப்படி கவுரவ கொலைகள் தொடர்ந்து வருவதையும் சாதிய அமைப்புகள் இதனை ஊக்குவித்து வருவதையும் தமிழக அரசு கவனத்தில்கொண்டு சாதிவெறியர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மேலும் தற்போது சையத் இம்தியாசை படுகொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்திட வேண்டும். அவருடைய குடும்பத்தினருக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக அரசிற்கு கோரிக்கை வைக்கின்றது.
இப்படிக்கு
J.முகம்மது ரசின்,
மாநில செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

zxsa
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.