பஸ் ஓட்டிக் கொண்டிருக்கும்போதே திடீர் மாரடைப்பு: 60 பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர் உயிரிழப்பு.மாரடைப்பால் அவதிப்பட்ட நிலையில், சாமர்த்தியமாக 60 பயணிகளை காப்பாற்றிய அரசு பஸ் ஓட்டுநர் உயிரிழந்தார். இச்சம்பவம் பயணிகள் மற்றும் பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


கும்மிடிப்பூண்டியை அடுத்த கீழ்முதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (42). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்துக்குட்பட்ட பொன்னேரி பணிமனையில் ஓட்டு நராக பணிபுரிந்து வந்தார். கடந்த 24-ம் தேதி மாலை, தடம் எண் 200 அரசு பஸ்ஸை திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி ஓட்டி வந்தார். அந்த பஸ்ஸில் 60 பயணிகள் இருந்தனர்.


தமிழக எல்லையை ஒட்டியுள்ள ஆந்திர பகுதியான தடாவில் பஸ் வந்து கொண்டிருந்த போது சிவகுமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் கடும் நெஞ்வலியால் பாதிக்கப்பட்டார். இருப்பினும் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி வலியை பொறுத்துக் கொண்டு சாமர்த்தியமாக பஸ்ஸை சாலை ஓரத்தில் நிறுத்தினார். பின்னர் அப்படியே மயங்கி சரிந்து விழுந்தார். இதனால் பயணிகள் பரபரப்படைந்தனர்.


இதையடுத்து சுய நினைவை இழந்த நிலையில் கிடந்த சிவக்குமாரை நடத்துநர் ஸ்ரீதர் மற்றும் பயணிகள் சேர்ந்து தடா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் இறந்தார்.


மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும் சாமர்த்தியமாக பஸ்ஸை இயக்கி 60 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் கேட்டு பயணிகளும் போக்குவரத்துக்கழக அதிகாரிகளும், ஊழியர்களும் சோகத்தில் மூழ்கினர். நேற்று அவரது இறுதிச்சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.