இன்றைய செய்தித்தாளில் முத்துப்பேட்டை விபத்து செய்தி.இன்றைய தினகரன் செய்தித்தாளில் முத்துப்பேட்டை விபத்து செய்தி. குப்பையை எரித்த புகையால் விபத்து. பைக் மீது லாரி மோதி சிறுமி பலி.

முத்துப் பேட்டை அருகே குப்பையை எரித்த புகை கண்ணை மறைத்ததால் பைக் மீது லாரி மோதியதில் சிறுமி இறந்தாள். இதனால் பேரூராட்சியை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முத்துப்பேட்டை கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் பேரூராட்சியால் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. நேற்று மதியம் வழக்கம் போல் பேரூராட்சி பணியாளர்கள், குப்பைகளை தீவைத்து கொளுத்தினர். மற்றொரு புறம் சாலையோரத்தில் பேரூராட்சியின் டிராக்டரை நிறுத்தி குப்பைகளை கொட்டி கொண்டிருந்தனர்.

குப்பைகளை தீவைத்து கொளுத்தியதால் 100 மீட்டர் தூரத்துக்கு சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அந்த நேரத்தில் அதிராம்பட்டினம் அடுத்த முடுக்குக் காட்டை சேர்ந்த கணேசன் மகன் விக்னேஷ் (26) தனது பைக்கில் சகோதரி சத்யா (28), அவரது குழந்தை பவிசா (4) ஆகியோரை அழைத்து கொண்டு கரியாப்பட்டினத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது கோவிலூரில் புகை மண்டலமாக காட்சியளித்ததால் சாலையின் குறுக்கே நிறுத்தப் பட்டிருந்த பேரூராட்சி டிராக்டர், விக்னேசுக்கு தெரியவில்லை. இதனால் டிராக்டர் அருகே வந்தவுடன் திடீரென பைக்கை பிரேக் போட்டு விக்னேஷ் நிறுத்தினார். அந்த நேரத்தில் திருத்துறைப் பூண்டியிலிருந்து பட்டுக் கோட்டை நோக்கி சென்ற ஒரு மினி லாரி, பைக் மீது மோதியது.மேலும் டிராக்டர் மீதும் மினி லாரி மோதியது.

இந்த விபத்தில் பைக்கில் சென்ற சிறுமி பவிசா, சம்பவ இடத்திலேயே பலியானார். விக்னேஷ், சத்யா ஆகியோர் காயமடைந்தனர். உடனடியாக 2 பேரையும் சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த முத்துப்பேட்டை ஆசாத் நகர் மற்றும் சுற்றுப் புற பகுதியை சேர்ந்த மக்கள் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் டிஎஸ்பி அருண், வருவாய் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது குப்பையை எரித்ததற்கு காரணமான பேரூராட்சி அதிகாரிகள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றனர். இதனால் 3 மணி நேரம் போராட்டம் நீடித்தது. பின்னர் மறியல் நடந்த இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடு பட்டவர்களுடன் முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது அவர் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மீதும் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக கூறினார். இதையடுத்து போராட்டம் கைவிடப் பட்டது.
டிஎஸ்பி அருணிடம் சமூக ஆர்வலர் முகமது மாலிக் புகார் மனு அளித்தார்.

அதில் கோர்ட் உத்தரவுக்கு மாறாக குப்பைகளை சாலையோரத்தில் கொட்டி தீ வைத்த பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்துக்கு காரணமான பேரூராட்சி தலைவர் அருணாசலம், செயல் அலுவலர் குலோத்துங்கன் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதே போல் விபத்தில் காயமடைந்த சத்யாவின் கணவரின் அண்ணன் தனபாலும் போலீசில் புகார் அளித்தார்.

 

[gallery columns="2" ids="30056,30070,30062,30072,30074,30073,30068,30060,30065,30066,30064,30057,30058,30061,30075,30076"]
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.