திருமணத்துக்கு மறுத்ததால் பள்ளிக்குள் புகுந்து தனியார் பள்ளி பெண் ஊழியரை அரிவாளால் வெட்டிய வாலிபர்.வால்பாறையில் உள்ள தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் ஸ்டெல்லா மேரி(31). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஸ்டெல்லா மேரியின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்நிலையில் பள்ளியில் பெற்றோர் சந்திப்பு தினம் நடைபெற்றது. மாணவிகளின் பெற்றோர் ஆசிரியர்களை சந்திக்க பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, பள்ளி அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ஸ்டெல்லா மேரியை ஒரு வாலிபர் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார். இதில் ஸ்டெல்லா மேரியின் வலது கையில் 2 விரல்கள் துண்டானது. ஸ்டெல்லா மேரி ரத்தவெள்ளத்தில் அலறிதுடித்தார்.

உயிருக்கு போராடிய ஸ்டெல்லா மேரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஸ்டெல்லா மேரியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய வாலிபரை உடனடியாக கைது செய்யுமாறு போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரபிரசாத் மற்றும் போலீசார் பொள்ளாச்சி சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அந்த வாலிபரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் தாராபுரத்தை சேர்ந்த மகேந்திரன் (வயது 27) என்பது தெரியவந்தது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு வால்பாறையை அடுத்த மாணிக்கா எஸ்டேட்டில் மகேந்திரன் பணியாற்றினார். அப்போது ஸ்டெல்லா மேரியுடன் பழக்கம் ஏற்பட்டது. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மகேந்திரன் ஸ்டெல்லா மேரியை வலியுறுத்தியுள்ளார். அவர் மறுப்பு தெரிவித்ததோடு போலீசில் புகார் செய்வேன் என மிரட்டியதால் ஸ்டெல்லா மேரியை வெட்டியதாக மகேந்திரன் போலீசில் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்குள் புகுந்து பெண் ஊழியர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.