வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்க விதைகள்-செடிகள்-உரங்கள்: சென்னையில் இன்று வாங்கலாம்.வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்க விதைகள், செடிகள், உரங்கள் ஆகியவை சென்னையில் இன்று (சனிக்கிழமை) 100 இடங்களில் ரூ.500-க்கு வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் சித்ரசேனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பின்படி, நகர்ப்புறங்களில் வாழும் மக்களுக்கு தமிழக அரசு கடந்த 2013-14-ம் ஆண்டு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக நகர்ப்புற காய்கறி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ‘நீங்களே செய்து பாருங்கள்’ காய்கறி தளைகளை வினியோகம் செய்து வீட்டு மாடிகளில் காய்கறி வளர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்தப்பட்டது. வீட்டு தோட்டங்களில் இருந்து கிடைக்கப் பெறும் நஞ்சில்லா காய்கறிகள் நாமே உற்பத்தி செய்து பயன் பெறலாம்.

இத்திட்டம் சென்னை மற்றும் கோயம்புத்தூர் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இவ்வாண்டு மதுரை மற்றும் திருச்சி மாநகராட்சிக்கு விரிவுபடுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் இத்திட்டம் 28-12-2015 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, 23-1-2016 (இன்று) மற்றும் 24-1-2016 (நாளை) ஆகிய இரு நாட்களில் சென்னை மாநகரத்தில் மாநகராட்சி பூங்கா உள்ளிட்ட 100 இடங்களில் ‘நீங்களே செய்து பாருங்கள்’ தளைகள் விற்பனை செய்யப்பட உள்ளது.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையும், சென்னை மாநகராட்சியும் இணைந்து மாநகராட்சி பூங்கா மற்றும் மாநகராட்சி பள்ளிகள் ஆகிய 100 இடங்களில் ‘நீங்களே செய்து பாருங்கள்’ தளைகளை வினியோகம் செய்யப்பட உள்ளது.

இந்த தளையில் இடம் பெற்றுள்ள இடுபொருட்கள் விவரம் வருமாறு:-

தேங்காய் நார் கழிவு 2 கிலோ கேக்-பாலித்தீன் பைகள் (6 எண்கள்), தக்காளி, கத்திரி, மிளகாய் நாற்றுகள் (10 எண்கள்), வெண்டை, அவரை, அரக்கீரை, முளைக்கீரை, பாலக்கீரை, முள்ளங்கி, கொத்தமல்லி காய்கறி வகைகள் (7 பக்கெட்டுகள்), பாஸ்போபாக்டீரியா (200 கிராம்), அசோஸ்பைரில்லம் (200 கிராம்), சூடோமோனாஸ் (100 கிராம்), டிரைக்கோடெர்மாவிரிடி (100 கிராம்), வேப்பெண்ணெய் (100 மில்லி), நீரில் கரையும் உரம் (1 கிலோ), செயல்முறை விளக்க குறுந்தட்டு (ஒன்று).

இந்த தளை ரூ.500-க்கு விற்பனை செய்யப்படும். 23-1-2016 அன்று (இன்று) நீங்களே செய்து பாருங்கள் தளைகள் காலை 8 முதல் மாலை 4 மணி வரை 100 இடங்களில் வழங்கப்படும். அதே இடத்தில் 24-1-2016 அன்று (நாளை) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை ‘நீங்களே செய்து பாருங்கள்’ தளைகள் வழங்கப்படும்.

இந்நிகழ்வின் தொடர்ச்சியாக ‘நீங்களே செய்து பாருங்கள்’ தளைகள் வழங்கும் 18 மண்டலங்களில் சனிக்கிழமைதோறும் காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

இந்த காய்கறிகளை பயிரிட தேவையான வழிமுறைகள் விவரம் வருமாறு:-

* தென்னை நார் கழிவில் 10 நாட்கள் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

* 11-வது நாளில் தென்னை நார்க்கழிவு பையுடன் 2 கிலோ தொழு உரம் (மிக்சிங்) கலந்து கொள்ள வேண்டும்.

* அதன் பின்னர் காய்கறி நாற்றுகளை தென்னை நார் கழிவில் நடவு செய்ய வேண்டும்.

* 6 பாலித்தீன் பைகளுக்கு மேல் பயிரிட வேண்டும் எனில் தனித்தனியாக இடுபொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

* செயல்விளக்க குறுந்தகட்டில் உள்ளபடி, உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் இடவேண்டும்.

* தளையில் இணைக்கப்பட்டுள்ள செயல்விளக்க குறுந்தகட்டில் காய்கறி சாகுபடிக்கு தேவையான குறிப்புகள் அனைத்தும் அடங்கியுள்ளது.

* ஒரு தளையில் 7 விதமான காய்கறி விதைகள் இருக்கும் மற்றும் 3 வகையான, அதாவது தக்காளி, கத்தரி, மிளகாய் குழித்தட்டு நாற்றுகள் வழங்கப்படும். அதற்கு மேல் காய்கறி மற்றும் கீரை விதைகள் தேவைப்படின் ரூ.15-க்கு விற்பனை செய்யப்படும்.

* ஒவ்வொரு மாநகராட்சி மண்டலங்களில் எந்த இடத்தில் தளைகள் விற்பனை செய்யப்படும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட பூங்காக்களில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

* தென்னை நார்க்கழிவு, இயற்கை உரங்கள், இயற்கை பூச்சிக்கொல்லி தேவைப்படின் தனியாக வாங்கிக்கொள்ளலாம்.

* 10 கிலோ தொழு உரம் ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* ‘நீங்களே செய்து பாருங்கள்’ தளைகளை கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகிறது.

* மேலும், தெளிவுரை பெறவிரும்புவோர் 25-1-2016-ல் இருந்து, அண்ணா நகர்- 9841155808, 9840255347, 8056086634, 9841945124, 9976228137, பெரம்பூர்-8056217841, 9884090277, 9840716473, 9444227095, 7092655050, திருவான்மியூர்-9150844288, 9841317618, 9043999757, 9840072385, 9382727340, மாதவரம் - 9003244354, 9043481375 ஆகிய எண்களில் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி வாயிலாகவோ அல்லது எஸ்.எம்.எஸ். மூலமாகவோ தெளிவுரை பெறலாம்.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் சித்ரசேனன் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.