10 நாட்களாக நடைபெற்ற அரசு ஊழியர்கள் போராட்டம் வாபஸ்; இன்று விடுமுறை தினத்தன்றும் பணி செய்ய முடிவு10 நாட்களாக நடைபெற்ற அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. தேங்கிய பணிகளை விரைந்து முடிக்க இன்று விடுமுறை தினத்தன்றும் பணிக்கு செல்கிறார்கள்.

வேலை நிறுத்தம்

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், காலி பணியிடங்களை நிரப்பவேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான படிகளை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த 10-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

காலவரையற்ற போராட்டம், சாலை மறியல் போராட்டம், காத்திருப்பு போராட்டம் என மூன்று வடிவங்களில் அரசு ஊழியர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் 10-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் தொடர்பான சில முக்கிய அம்சங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.

செயற்குழு கூட்டம்

இதில் நிர்வாக தீர்ப்பாயம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட சில அறிவிப்புகளை அரசு ஊழியர்கள் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக அவர்கள் நேற்று முன்தினம் இரவு விலக்கிக்கொண்டனர். ஆனால் காலவரையற்ற போராட்டம் தொடருமா? வாபஸ் ஆகுமா? என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

இந்தநிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நேற்று காலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். இதில் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த 68 துறைவாரியான சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

போராட்டம் வாபஸ்

இந்த கூட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்ச்செல்வி நிருபர்களிடம் கூறியதாவது:-

போலியோ சொட்டு மருந்து முகாம், சட்டசபை தேர்தல் பணிகள், பொதுத்தேர்வு ஆகியவற்றை கருத்தில்கொண்டு பொதுமக்களின் நலன் மற்றும் அரசின் நலன் கருதி நல்லெண்ண அடிப்படையில் 10 நாட்களாக நடைபெற்ற எங்களுடைய காலவரையற்ற போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்புகளோடு, விடுபட்ட எங்களுடைய கோரிக்கைகள், ஏற்கனவே அறிவித்த அறிவிப்புகளில் சில திருத்தம் செய்து வரைவு அறிக்கையாக தயாரித்துள்ளோம்.

நியாயமான கோரிக்கை

மேலும் நாங்கள் தயாரித்து வைத்துள்ள வரைவு அறிக்கையை தமிழக அரசின் தலைமை செயலாளரிடம் கொடுக்க உள்ளோம். நல்லெண்ண அடிப்படையில் அரசாணை வெளியிடும்போது இதையும் சேர்த்து அரசு வெளியிடவேண்டும். நாங்கள் பரிந்துரை செய்ய உள்ள கோரிக்கைகளை நல்லெண்ண அடிப்படையில் அரசு நிறைவேற்றாவிட்டால், அனைத்து சங்கங்களும் கூடி அடுத்தகட்டமாக மீண்டும் போராட்டம் நடத்துவோம்.

போராட்டம் நடைபெற்ற நாட்களில் பணிக்கு செல்லாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்வோம் என்று அரசு தரப்பில் சுற்றறிக்கை அனுப்பவில்லை. அதே சமயத்தில் எந்தவிதமான அடக்கு முறையையும் அரசு கையாளவில்லை. ஆகையால் எங்கள் கோரிக்கைகள் நியாயமானது என்று அரசுக்கு புரிந்திருக்கிறது.

இன்று பணி செய்கிறார்கள்

இதுவே எங்களுடைய போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. போராட்டம் காரணமாக தேங்கிய பணிகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளில் பணிக்கு சென்றும், வார நாட்களில் கூடுதல் நேரம் பணி செய்தும் நாங்கள் விரைந்து செய்து முடிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மறுபரிசீலனை செய்யவேண்டும்

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் (என்.ஜி.ஓ.) முன்னாள் மாநில தலைவர் கோ.சூரியமூர்த்தி அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் கடந்த 19-ந்தேதியன்று சட்டமன்றத்தில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அறிவித் துள்ள சலுகை அறிவிப்புகளில் பெரும்பாலானவை கண்துடைப்பு அறிவிப்புகளாகவே உள்ளன. முக்கிய கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இருந்த ஒரு திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர வல்லுனர் குழு தேவையில்லை. மனம் தான் தேவை.

அரசு அலுவலர்களின் பொதுநலனை கருத்தில்கொள்ளாமல் சுயநல நோக்கில் சில சங்க தலைவர்கள் வரப்பிரசாதம் என்று அரசை போற்றி துதிப்பாடுவது வெட்கக்கேடானது. இச்செயலால் அரசு அலுவலர்கள் சங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். அரசு அலுவலர்கள் ஆசிரியர்களின் சக்தியை விரயமாக்காமல் 5 முறை முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி கூற்றுப்படி, ‘கல்லில் நார் உரிக்க முடியாது’ என்பதை ஏற்று ‘காலம் வரும் நம் கனவுகள் நனவாகும்’ என்ற நம்பிக்கையுடன் போராடும் சங்கங்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்திடவேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.