ஐக்கிய அரபு அமீரக இளவரசர் நாளை இந்தியா வருகை: 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.அபுதாபி பட்டத்து இளவரசரும், அந்நாட்டின் செல்வாக்குமிக்க தலைவருமான ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மூன்று நாட்கள் பயணமாக நாளை இந்தியாவுக்கு வருகிறார். இந்தியாவுடனான பொருளாதார உறவை வலுப்படுத்துவதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

தனது பயணத்தின்போது, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க இளவரசர் திட்டமிட்டுள்ளார்.

அவரது பயணம் குறித்து இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரக தூதர் அகமது அல் பன்னா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி, 6 மாதங்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்தார். 34 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு வந்த முதலாவது இந்திய பிரதமர் அவரே ஆவார். அவரது வருகையால், இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயம் ஏற்பட்டது. தற்போது, இளவரசர் வருகையால், இந்த உறவு மேலும் வலுப்படும்.

இளவரசரின் வருகையின்போது, இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கிறோம். இவற்றில் 12 ஒப்பந்தங்கள், இறுதி செய்யப்பட்டு, கையெழுத்திட தயார்நிலையில் உள்ளன. இருந்தாலும், 16 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி விடும் என்று நம்புகிறோம்.

இந்த ஒப்பந்தங்கள், இந்தியாவில் பல்வேறு துறைகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல கோடி ரூபாய் முதலீட்டுக்கு வழிவகுக்கும். அணுசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்பம், ரெயில்வே, வான்வெளி ஆகிய துறைகளில் முதலீடு செய்ய இந்த ஒப்பந்தங்கள் வகை செய்கின்றன.

அணுசக்தியில் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம், அணுசக்தியை ஆராய்ச்சி, வளர்ச்சி போன்ற ஆக்கப்பூர்வ பணிகளுக்கு பயன்படுத்த உதவும்.

பிரதமர் மோடியுடனான இளவரசரின் பேச்சுவார்த்தையின்போது, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை ஒடுக்குவது, தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, அடிப்படைவாதத்தை எதிர்த்து போராடுவது போன்றவை முக்கியமாக இடம்பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 26 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். இது, அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 30 சதவிதம் ஆகும். இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் அமீரகம் முக்கிய இடம் பிடித்துள்ளது.

அமீரகத்தின் முதன்மையான வர்த்தக கூட்டாளி இந்தியாவே ஆகும். இரு நாடுகளுக்கும் இடையிலான வருடாந்திர வர்த்தகம் ரூ.4 லட்சத்து 2 ஆயிரம் கோடி ஆகும். அமீரகம், ரூ.53 லட்சத்து 60 ஆயிரம் கோடி கொண்ட நிதியம் வைத்துள்ளது. அந்த பணம் மூலம் இந்தியாவுக்கு முதலீட்டை கொண்டு வரலாம் என்று இந்தியா கணக்குப்போட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.