அண்டர் 19 உலகக் கோப்பை இறுதி: 145 ரன்களுக்குச் சுருண்டது இந்திய அணிமிர்பூரில் நடைபெறும் அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மே.இ.தீவுகள் அபாரமாக பந்து வீச இந்திய அணி முதலில் பேட் செய்து 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பசுந்தரை ஆட்டக்களத்தில் மே.இ.தீவுகள் கேப்டன் ஹெட்மயர் முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார். வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோசப் மற்றும் ஹோல்டர் வெறியுடன் வீசினர். பந்தின் தையல் பகுதியை தரையில் படுமாறு வீசி எழும்பச் செய்து இந்திய பேட்ஸ்மென்களை திணறச் செய்தனர்.

தொடர்ந்து ஷார்ட் பிட்ச் பவுலிங் உத்தியை அவர்கள் கடைபிடித்தனர். சர்பராஸ் கான் மட்டுமே சிறப்பாக ஆடி இந்த உலகக்கோப்பையில் தனது 7-வது அரைசதத்தை எடுத்தார். அவர் 89 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து ஒரு முனையில் போராடி 8-வது விக்கெட்டாக ஜான் பந்தில் எல்.பி.ஆனார். லோம்ரோர் 19 ரன்களையும், ஆர்.ஆர்.பாதம் 21 ரன்களையும் எடுக்க மொத்தம் 3 பேட்ஸ்மென்கள் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோரை எட்ட முடிந்தது. எக்ஸ்ட்ரா வகையில் 16 வைடுகளுடன் 23 ரன்கள் வந்ததால் இந்திய அணி 45.1 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்து சுருண்டது.

மேற்கிந்திய அணியில் ஜோசப் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஜான் 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, பால் 2 விக்கெட்டுகளையும், ஹோல்டர், ஸ்பிரிங்கர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முதல் ஓவரின் 4-வது பந்தில் ரிஷப் பண்ட், ஜோசப் வீசிய பந்தை முன்னால் வந்து, அதாவது கிரீசிற்கு சற்றே வெளியே வந்து பந்தை ஆடாமல் விட்டார், ஆனால் கிரீசிற்குள் காலை வைக்கத் தவறியதால் விக்கெட் கீப்பர் இம்லாக் சாதுரியமாக பந்தை ஸ்டம்பை நோக்கி எறிந்தார் இதனால் விசித்திரமான முறையில் ஸ்டம்ப்டு ஆகி வெளியேரினார் பண்ட்.

அன்மல்பிரீத் சிங் 3 ரன்களில் ஜோசப்பின் எழும்பிய, ஸ்விங் ஆன பந்தை ஆட முயன்று எட்ஜ் செய்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேப்டன் இஷான் கிஷன் 4 ரன்களில், உள்ளே வந்த பந்தை பிளிக் செய்ய முயன்று பந்தை கோட்டை விட்டார், நேராக கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார்.

வாஷிங்டன் சுந்தர் 7 ரன்களில் ஜான் பந்து ஒன்று சற்றே நின்று வர இவரது டிரைவ் மிட் ஆஃபில் கேட்ச் ஆனது. ஸ்பிர்ங்கர் பந்தில் அர்மான் ஜாஃபர் 5 ரன்களில் கவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆக இந்திய அணி 50/5 என்று ஆனது.

சர்பராஸ் கான் 29 ரன்களில் ஆடிவர லோம்ரோர் 19 ரன்களில் ஹோல்டரின் அவுட் ஸ்விங்கருக்கு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் இந்திய அணி 87/6 என்று ஆனது. இதன் பிறகு தனது ஏழாவது அரைசதம் கண்ட சர்பராஸ் கான், ஜான் பந்தை பிளிக் செய்ய முயன்று பந்து சிக்கவில்லை, கால்காப்பில் பட எல்.பி.ஆனார். அதன் பிறகு மற்ற விக்கெட்டுகள் சோபிக்கவில்லை இந்திய அணி 145 ரன்களுக்குச் சுருண்டது.

காலிறுதி, அரையிறுதிகளில் கடினமான சூழலில் இலக்கைத் துரத்தி வெற்றி பெற்ற மே.இ.தீவுகள், இந்த ரன் எண்ணிக்கையை எளிதில் விரட்டும் என்றே எதிர்பாக்கப்படுகிறது, காரணம், பிட்சில் இருந்த ஈரப்பதம் இப்போது காய்ந்து பேட்டிங் சுலபமாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் மே.இ.தீவுகள் தொடக்க வீரர் போப் ஒரு அதிரடி வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.