வறுமையின் கொடுமையால் குழந்தைகளை கொன்ற பெண்ணுக்கு விதிக்கப்பட்ட 3 ஆயுள் தண்டனை ரத்து: ஐகோர்ட்டு தீர்ப்புவறுமையினால் தன்னுடைய 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த வழக்கில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவருக்கு கீழ் கோர்ட்டு ஆயுள் தண்டனை வழங்கியது.

இந்த தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.ஜெயசந்திரன், எஸ்.நாகமுத்து ஆகியோர் பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:–

பல ஆண்டுகளுக்கு முன்பு வறுமையின் கொடுமையினால், நல்லதங்காள் தன்னுடைய 7 குழந்தைகளையும் ஒவ்வொன்றாக கிணற்றில் வீசி கொலை செய்து, தானும் தற்கொலை செய்துக் கொண்டார். இந்த நல்லதங்காளுக்கு விருதுநகர் மாவட்டம், வத்திராய்பு கிராமத்தில் கோவில் உள்ளது.

அதேபோன்ற ஒரு நிலை இந்த ஜெயலட்சுமிக்கு ஏற்பட்டுள்ளது. போலீஸ் குற்றப் பத்திரிகையில் கூறியது விவரத்தின்படி, ஜெயலட்சுமி குழந்தையாக இருந்தபோதே, அவரது தாயாரை விட்டு தந்தை பிரிந்து விட்டார். ஜெயலட்சுமிக்கு ஒரு வயது இருக்கும்போது, அவளது தாயும் மாயமாகி விட்டார். பாட்டியின் அரவணைப்பிலும், வறுமையிலும் வாழ்ந்த ஜெயலட்சுமி, மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டது.

பிழைப்புக்காக கூலி தொழில் செய்ய அல்லிகுட்டை கிராமத்தில் இவர்கள் குடியேறினர். இவர்களுக்கு இரண்டு குழந்தை பிறந்தது. அங்கு சரியான வேலை கிடைக்காததால், மேட்டுப்பட்டி கிராமத்துக்கு மீண்டும் வந்தனர். அங்கு வாடகை வீட்டில் தங்கினார்கள். கைத்தறி ஆலையில் கிருஷ்ணன் வேலை செய்தார். போதுமான வருமானம் இல்லை. ஆனால், 3 வது குழந்தை பிறந்தது. இதனால் வறுமையின் பிடி மேலும் அதிகரித்தது.

குழந்தைகளுக்கு சரியான உணவுகளை கூட அவர்களால் கொடுக்க முடியவில்லை. அரிசி வாங்க பணம் இல்லை. வீட்டில் சாப்பிடுவதற்கு ஒன்றுமே இல்லை. பசியினால் குழந்தைகள் கதறி அழுதது. ஏற்கனவே இவர்களுக்கு கடன் கொடுத்தவர்கள், அதை திருப்பிக் கேட்டு வேறு தொந்தரவு செய்தனர்.

கடந்த 2008–ம் ஆண்டு செப்டம்பர் 3–ந்தேதி பகல் முழுவதும் குடும்பமே பட்டினி கிடந்தது. பட்டினியின் காரணமாக கை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை. குழந்தைக்காக வைத்திருந்த மாட்டு பாலும் கெட்டு போய் விட்டது. அப்போது, கிருஷ்ணன் சமையல் வேலைக்கு சென்றிருந்தார். குழந்தைகள் பசியினால் அழுது புரளுவதை கண்டு மனம் தாங்க முடியாமல் ஜெயலட்சுமி இரவு முழுவதும் கண்ணீர் வடித்தார்.

இவர்களுக்கு உதவி செய்ய யாருமே முன்வரவில்லை. இதனால், ஜெயலட்சுமிக்கு உலகமே இருண்டு போய் விட்டது. இதனால் மனதளவில் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டாள். இதனால் நல்லதங்காளை போல, தன் குழந்தைகளை கொன்று விட முடிவு செய்தார்.

வீட்டிற்கு அருகேயுள்ள கிணற்றில் 3 குழந்தைகளையும், ஒவ்வொன்றாக வீசி கொன்றாள். பின்னர் தற்கொலை செய்துக் கொள்ள அந்த கிணற்றுக்குள் அவளும் குதித்தாள். விதி அவளை விடவில்லை. கிணற்றில் குறைவான தண்ணீர் இருந்ததால், அவள் மூழ்க வில்லை. காயத்துடன் உயிர் பிழைத்துக் கொண்டாள்.

கிணற்றில் பிணமாக குழந்தைகள் மிதப்பது குறித்து வந்த தகவலின் அடிப்படையில் சேலம் மாவட்டம், கரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கிராம நிர்வாக அலுவலரிடம், அதிகாலையில் ஜெயலட்சுமி சரணடைந்து, நடந்த சம்பவத்தை வாக்குமூலமாக அளித்துள்ளார்.

இதன்பின்னர் அவளை போலீசாரிடம் கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்துள்ளார். போலீசாரும் அவளை கைது செய்து, சிறையில் அடைத்தனர். கிராம நிர்வாக அலுவலரிடம் ஜெயலட்சுமி கொடுத்த வாக்குமூலத்தை போலீசார் பெற்றனர்.

இதன்பின்னர் மனநல மருத்துவரிடம், ஜெயலட்சுமியை போலீசார் அழைத்து சென்றனர். மருத்துவர் மீனாட்சி பரிசோதனை செய்து, ஜெயலட்சுமி ஒரு வகையான மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து, அவருக்கு சில காலம் சிகிச்சை வழங்கினார்.

குழந்தைகளை கொன்ற வழக்கை விசாரித்த சேலம் விரைவு நீதிமன்றம், 3 குழந்தைகளை கொன்றதற்காக ஜெயலட்சுமிக்கு 3 ஆயுள் தண்டனையை விதித்து கடந்த 2012–ம் ஆண்டு பிப்ரவரி 2–ந்தேதி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இந்த ஐகோர்ட்டில் ஜெயலட்சுமி மேல்முறையீடு செய்துள்ளார். எங்களை பொருத்தவரை ஜெயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர், ஜெயலட்சுமி தீவிர மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால், குழந்தைகளை கொன்றால் பின்விளைவு என்ன ஆகும்? என்பதை அவரால் உணர முடியாத நிலையில் சம்பவம் நடக்கும்போது இருந்துள்ளார் என்று கூறியுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட ஜெயலட்சுமி குழந்தைகளை கொலை செய்தது சட்டப்படி குற்றம் இல்லை. இது இந்திய தண்டனைச் சட்டம் 84–ன் கீழ் (மனநலம் பாதித்தவர்கள் சட்டத்துக்கு எதிராக செய்த செயல் குற்றம் ஆகாது) தான் வரும்.

ஆனால் அரசு தரப்பு வக்கீல் எம்.மகாராஜன், ஜெயலட்சுமியின் செயல் இந்திய தண்டனை சட்டம் 84–ன் கீழ் வராது என்று வாதம் செய்தார்.

இவரது வாதத்தை ஏற்றுக் கொண்டாலும், கிராம நிர்வாக அலுவலரிடம் ஜெயலட்சுமி கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்குவது என்பதை சட்டப்படி ஏற்க முடியாது.

சம்பவம் நடந்த அதிகாலை 4.30 மணிக்கு கிராம நிர்வாக அலுவலரிடம் இவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். காலை 7.30 மணிக்கு போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர் என்று சாட்சிகள் கூறுவது நம்பும்படியாக இல்லை. எனவே, இந்த ஒப்புதல் வாக்கு மூலத்தை ஏற்க முடியாது. இந்த மேல்முறையீடு வழக்கை ஏற்றுக் கொள்கிறோம். ஜெயலட்சுமிக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்கிறோம். சிறையில் இருக்கும் அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் ஜெயலட்சுமி சார்பில் வக்கீல் ஆர்.சங்கரசுப்பு ஆஜரானார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.