முதல்வர் ஜெயலலிதா 68வது பிறந்தநாள் விழா என்ற பெயரில் பள்ளி மாணவி கையில் கதற கதற ஜெயலலிதா படம் பச்சை குத்திய கொடூரம்: ஓ.பி.எஸ். முன்னிலையில் நடந்த பகீர் சம்பவம்!ஜெயலலிதா 68வது பிறந்தநாள் விழா என்ற பெயரில் பள்ளி மாணவியை உட்கார வைத்து ஜெயலலிதா படத்தை கையில் பச்சை குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் முன்னிலையில் இந்த கொடூரம் நடந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாள் விழா கடந்த 24ம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.


அமைச்சர்கள், அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு பிறந்தநாள் நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் சிலர் கட்சி தலைமையிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று சில வித்தியாசமான நிகழ்ச்சிகளில் இறங்கிய சம்பவமும் நடைபெற்றது.


அதில் ஒன்றுதான் சென்னை, வேளச்சேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அசோக் 668 பேருக்கு ஜெயலலிதா படத்தை பச்சைகுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவை தொடங்கி வைத்தது, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். மேலும், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் விழாவில் கலந்து கொண்டனர். ஜெயலலிதா படத்தை பச்சை குத்துவதற்காக வேலூர் உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து 50 நரிக்குறவர்களை அழைத்து வந்திருந்தனர்.


இப்படி வித்தியாசமான பிறந்தநாள் கொண்டாடிய சம்பவமே, எம்எல்ஏ அசோக்குக்கு வினையாக முடிந்தது. விழாவில் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் யாரும் பச்சை குத்தாமல், அப்பாவி தொண்டர்களை பணம் கொடுத்து வந்து பச்சைகுத்த வைத்ததாக புகார் எழுந்ததுடன், பலரது விமர்சனத்துக்குள்ளும் ஆளானது. இதுபற்றி கட்சி தலைமைக்கு தகவல் சென்றதால், நேற்று அசோக் எம்எல்ஏவிடம் இருந்த வேளச்சேரி அதிமுக பகுதி செயலாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி ஜெயலலிதா உத்தரவிட்டார்.


இந்நிலையில், நேற்று வேளச்சேரி பகுதியில் நடைபெற்ற பச்சைகுத்தும் விழாவில், ஒரு பள்ளி மாணவியை உட்கார வைத்து அவரது கையில் பச்சைகுத்தப்படுகிறது. அந்த மாணவி வலி தாங்காமல் கதறி அழுகிறார். அவரது தாய் உள்ளிட்ட சில பெண்கள் அவரை பிடித்துக் கொள்கிறார்கள். கதறி அழுவதைகூட பொருட்படுத்தாமல், தொடர்ந்து பள்ளி மாணவியின் கையில் ஜெயலலிதா படம் பச்சைகுத்தப்படுகிறது.


அந்த மாணவியை சுற்றி அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் சிரித்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது போன்ற வீடியோ காட்சி நேற்று முதல் வாட்ஸ்அப்பில் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது.


இந்த வீடியோ காட்சியையும் உளவுத்துறை போலீசார் முதல்வர் ஜெயலலிதா பார்வைக்கு கொண்டு சென்றதால்தான், வேளச்சேரி எம்எல்ஏ அசோக் கட்சி பதவி பறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது, பள்ளி மாணவி கதற கதற கையில் ஜெயலலிதா படம் பச்சகுத்தும் சம்பவத்தை சில சமூக ஆர்வலர்கள் மனித உரிமை கமிஷனுக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர்கள் கூறுகையில், ‘நாட்டில் விலங்குகளை கூட துன்புறுத்தக்கூடாது என்று சட்டம் உள்ளது.


ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றால் மாடுகளை துன்புறுத்துவார்கள் என்பதை காரணம் காட்டிதான், அந்த போட்டியே தமிழகத்தில் நடத்த விடாமல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இப்படி இருக்கும்போது, ஒரு பள்ளி மாணவியை உட்கார வைத்து, அமைச்சர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க, அந்த மாணவி கதறி அழுதும்கூட அவர் மீது இரக்கம் காட்டாமல் கையில் ஜெயலலிதா படத்தை பச்சைகுத்தும் கொடுமையை எந்த மனிதாபிமானம் உள்ளவர்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்’ என்றனர். (தினகரன்)
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.