உடல் எடை குறைப்பு ஆபரேசனில் பெண் பலி: சென்னை டாக்டர் சஸ்பெண்டு - மருத்துவ கவுன்சில் நடவடிக்கைசென்னை கோடம்பாக்கம் கக்கன் காலனியை சேர்ந்தவர் கவுரி சங்கர். இவரது மனைவி அமுதா (35). அமுதா உடல் பரிசோதனைக்காக தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் முழு உடல் பரிசோதனைக்காக கடந்த 2014–ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்றிருந்தார்.

சற்று பருமனான உடலமைப்பு கொண்ட அவரிடம் உடல் எடை குறைப்பு ஆபரேசன் செய்தால் உடல் எடை குறைந்து அழகு கூடும் என்று ஆலோசனை வழங்கினார்கள்.

அதை நம்பி அமுதாவும் சிகிச்சையில் சேர்ந்தார். 11.8.2014 அன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவருக்கு அடுத்த சில நாட்களில் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து 26–ந் தேதி 2–வதாக ஆபரேசன் செய்துள்ளார்கள். மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் 3–வதாக வயிற்றில் ஓபன் சர்ஜரி செய்தார்கள்.

அதன் பிறகு அவரது உடல் நிலை மோசமானதால் ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அமுதா அனுமதிக்கப்பட்டார். ரூ.9 லட்சம் பணம் கட்டி அங்கு அடுத்த ஆபரேசன் செய்யப்பட்டது.

அப்போது உடல் உறுப்புக்கு அப்பாற்பட்ட பஞ்சுபேட் வயிற்றுக்குள் இருந்தது தெரிய வந்தது. அதை டாக்டர்கள் அகற்றினார்கள்.

முதலில் டாக்டர்கள் செய்த தவறான ஆபரேசனால் அமுதாவின் கல்லீரலும் பாதித்தது. டாக்டர்கள் தீவிரமாக போராடி அமுதாவின் உயிரை அப்போது காப்பாற்றினார்கள்.

ஏற்கனவே டாக்டர்கள் மேற்கொண்ட தவறான சிகிச்சையால் உடலின் பல உறுப்புகள் சேதமாகி இருந்ததால் குணமடைய நீண்ட நாட்கள் ஆகும் என்றனர்.

வீட்டில் படுத்த படுக்கையாக இருந்த அமுதாவுக்கு 10 மாதங்களாக டியூப் வழியாக திரவ உணவு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்து பரிதாபமாக இறந்து போனார்.

தியாகராய நகர் ஆஸ்பத்திரி டாக்டர்களின் தவறான சிகிச்சையால் மனைவியை பறி கொடுத்த கவுரிசங்கர் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்யாததால் கோர்ட்டில் வழக்கு போட்டார். கோர்ட்டு உத்தரவின் பேரில் டாக்டர் மாறன் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அகில இந்திய மருத்துவ கவுன்சில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஆகியவற்றுக்கும் கவுரி சங்கர் புகார் அனுப்பினார்.

மருத்துவ கவுன்சில் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோர்ட்டிலும் முறையிட்டார்.

இந்த நிலையில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி டாக்டர் மாறன் மீதான புகார்களை விசாரித்தது. ஆவணங்களையும் ஆய்வு செய்தது.

அப்போது ஆபரேசன் தவறுதலாக செய்து இருப்பது உறுதியானது. மருத்துவ விதிமுறைகளுக்கு மாறாக சிகிச்சை அளித்திருந்ததை உறுதிபடுத்தினார்கள். இதையடுத்து டாக்டர் மாறனை சஸ்பெண்டு செய்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில், மருத்துவ பதிவேட்டில் இருந்து அவரது பெயர் ஒரு ஆண்டு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நீக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பற்றி அமுதாவின் கணவர் கவுரி சங்கர் கூறும்போது, ‘‘இந்த நடவடிக்கை தற்காலிகமாக திருப்தி அளிக்கிறது. வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. எனது மனைவியை அநியாயமாக கொன்று விட்டார்கள். அவளது சாவுக்கு சட்டத்தின் மூலம் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.