பாஜ மேலிட தூதர் ஜவடேகரை ஜெயலலிதா சந்திக்க மறுப்பு .* அதிமுகவா... பழைய கூட்டணியா
* பாரதிய ஜனதா இன்று முடிவு?

சென்னை: தமிழக பேரவை தேர்தலில் கூட்டணி  அமைத்து போட்டியிட கட்சிகளுடன் பேச பாரதிய ஜனதாவின் மேலிட தூதர் ஜவடேகர் நேற்று  சென்னை வந்தார். கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் என்பதை ஓரிரு நாளில் பாஜ முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை  தேர்தல் மே முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. தேர்தலை சந்திக்க முக்கிய பிரதான கட்சிகள் தயாராகி வருகின்றன. திமுக, காங்கிரஸ்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. மேலும் தேமுதிக தங்கள் கூட்டணிக்கு  வரவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுகவுக்கு எதிரான அலை வீசி வருகிறது. இதனால், பெரிய கட்சிகள் எதுவும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பயப்படுகின்றன.  இந்த நிலையில் பாஜக மட்டும் அதிமுக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறது. இந்த நிலையில் கூட்டணி குறித்து  முடிவு செய்வதற்காக தமிழக பாஜ பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில்  அவரை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் வரவேற்றனர். அதன் பின்னர் தனியார்  ஓட்டல் ஒன்றில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை இந்திய ஜனநாயக  கட்சி தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்,  அனைத்திந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் சதக்கதுல்லா உள்ளிட்ட கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினர்.

சந்திப்புக்கு பின்னர் பாரிவேந்தர் அளித்த பேட்டியில், “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் கேட்ட தொகுதியை தரவில்லை. இந்த முறை  நாங்கள் கேட்ட தொகுதியை தர வேண்டும். இல்லாத பட்சத்தில் பாஜ கூட்டணியில் தொடர்வது சந்தேகம் தான்” என்றார். இதே போல மத்திய  அமைச்சரைச் சந்தித்த சிறிய கட்சிகள் அனைத்தும் பல்வேறு நிபந்தனைகளை விதித்தன. இதனால், பாஜ திணறி போய் உள்ளது. சிறிய கட்சிகளே  இப்படி நிபந்தனை விதித்தால் பெரிய கட்சிகள் என்ன நிபந்தனைகள் விதிக்க போகிறதோ? என்று தெரியாமல் பாஜ திணறி வருகிறது. இந்த நிலையில்  தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ் அல்லது முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாசையும் இன்று சந்திக்க பிரகாஷ்  ஜவடேகர் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே, பாஜவின் கோரிக்கையை பாமக நிராகரித்து விட்டன. ஆனாலும் பாஜ தீவிரமாக முயன்று வருகின்றன.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, தமிழக பாஜ தலைவர்கள் ஏற்கனவே சந்தித்து பேசினர். அப்போது, மத்திய அமைச்சர்கள் யார் சென்னை  வந்தாலும், முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கின்றனர். பிரதமர் மோடி, ஜெயலலிதாவின் வீட்டுக்கே சென்று சந்தித்தார். நான் இந்த மாநிலத்தின்  எதிர்க்கட்சித் தலைவர். என்னை எந்த மத்திய அமைச்சராவது சந்தித்தார்களா? அவர்களிடம் தமிழக கோரிக்கையை தேமுதிக சார்பிலோ, கூட்டணி  சார்பிலோ வைத்திருப்பேனே. அதை பாஜ மேலிட தலைவர்கள் கவனிக்கவில்லை. ஆனால், இப்போது எப்படி என்னைச் சந்திக்க வருகிறீர்கள் என்று  கேட்டார். அதன்பின் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இப்போது கடைசி கட்ட முயற்சியாக தமிழக பாஜ பொறுப்பாளர் என்ற முறையில்  பிரகாஷ் ஜவடேகர், விஜயகாந்தை சந்தித்துப் பேசுகிறார்.

அதேநேரத்தில், முதல்வரும், அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணி தொடர்பாக பிரகாஷ் ஜவடேகர் பேசுவார் என்று  பாஜ தலைவர்கள் கூறி வந்தனர். முதல்வரிடம் நேரம் ஒதுக்கும்படி பாஜ தரப்பில் கேட்கப்பட்டது. ஆனால், பிரகாஷ் ஜவடேகரை முதல்வர்  ஜெயலலிதா சந்திக்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அதேநேரத்தில் ஜவடேகர் சென்னை வரும் தகவல் வெளியான  பிறகுதான், முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதிக்கு செல்லும் திட்டம் முடிவானது. இதைக் காரணம் காட்டி அவர் ஜவடேகரை  சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும், முதல்வரைச் சந்திக்க பாஜ தரப்பில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாருடன் கூட்டணி? ஜவடேகர் பேட்டி

விமான நிலையத்தில் பிரகாஷ் ஜவடேகர் அளித்த பேட்டி: தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக எங்களுடைய தேசிய ஜனநாயக  கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசுவதற்கும், புதிதாக பாஜவோடு கூட்டணி வைத்து கொண்டு தேர்தலை  சந்திக்க இருக்கும் கட்சி தலைவர்களை சந்திப்பதற்கும் நான் சென்னை வந்துள்ளேன். அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னையில் தான் இருப்பேன்.  தலைவர்களை சந்தித்து பேசி, ஒரு முடிவுக்கு வந்த பின்னர், எங்களது கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் விவரங்கள், அறிவிக்கப்படும்.  மேலும், மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு பின் கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு பற்றிய வேகம் அதிகரிக்கும். அதிமுகவோடு, பாஜ கூட்டணி அமைக்கும்  என பேசப்படுகிறது. அது ஊடகங்களின் யூகங்கள். இதுபோன்ற யூகங்களின் கேள்விக்கு நான் பதில் அளிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.