சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி? : தடுமாறும் பாஜக இல.கணேசன், தமிழிசை, பொன்னார் மாறுபட்ட கருத்துசென்னை: சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்பதில் தமிழக பாஜக தலைவர்களிடை கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

கூட்டணி பேச்சு வார்த்தை குறித்து மூத்த தலைவர் இல.கணேசனும், மாநில தலைவர் தமிழிசையும், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருகின்றனர். மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் இன்று சென்னை வருகிறார். தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை சந்தித்துப் பேச அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார். இதனை கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரையும் பிரகாஷ் ஜவடேகர் சந்தித்து பேச உள்ளார். கூட்டணியின் பிரதான கட்சியான தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, அவர் நாளை சந்தித்து, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், சட்டசபை தேர்தலிலும் 3-வது அணி அமைக்க வேண்டும் என்பதே எங்கள் முதல் இலக்கு. அதற்காக தேமுதிக, பாமக தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம் என்று கூறினார். அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசுவீர்களா என திரும்பத் திரும்ப கேட்கப்படுகிறது. இடதுசாரிகள் இடம்பெற்றுள்ள மக்கள் நலக் கூட்டணி, காங்கிரஸ் இடம்பெற்றுள்ள திமுக கூட்டணி ஆகிவற்றுடன் மட்டுமே எங்களால் கூட்டணி வைக்க முடியாது. மற்ற கட்சிகள் எதுவும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என அறிவிக்கவில்லை. எனவே, அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச மாட்டோம் என்றோ, அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றோ மறுக்க மாட்டேன். கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரம் பாஜக மாநிலத் தலைவர்களுக்கு இல்லை. அதை கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.

இல.கணேசனின் பேட்டி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக -அதிமுக இடையே கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெறுவதாக கூறப்படுவது யூகத்தின் அடிப்படையிலான செய்தி என்று கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளுடன்தான் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் தமிழிசை தெரிவித்தார்.

பொன்னார் கருத்து.:

இதனிடையே டெல்லியில் இருந்து இன்று சென்னை வந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர், வரும் சட்டசபை தேர்தலில் யார் யாருடன் கூட்டணி சேர வேண்டும் என பாஜக கட்சி முடிவு செய்துள்ளதோ அக்கட்சிகளின் தலைவர்களுடன் மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் சந்தித்து பேசுகிறார்.

 

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்துள்ளது. அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். மேலும் எங்களுடன் கூட்டணிக்கு வர விரும்பும் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை அமையும். ஏற்கனவே பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளது. வருகிற சட்டசபை தேர்தலிலும் இக்கூட்டணி அமையும்.

நேற்று கூட தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சி தலைவர்களுடன் தொலைபேசியில் பேசினேன். எங்களுடைய தொடர்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. எல்லா கட்சிகளும் கூட்டணிக்கு முயற்சித்தது அதுபோன்று பாஜகவும் கூட்டணிக்கு முயற்சி செய்து வருகிறது. தற்போது எந்த கட்சியும் கூட்டணி பற்றி அறிவிக்கவில்லை. அதனால் பாஜகவும் அவசரப்பட்டு கூட்டணி பற்றி அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

முதல்வர் ஜெயலலிதாவை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் சந்திக்கும் வாய்ப்பு உள்ளதா? என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், அலுவலக ரீதியாக சந்திக்க வாய்ப்பு உள்ளதா என தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கட்சி தலைவர்களுடன் ஆலோசனை:

சென்னை வரும் பிரகாஷ் ஜவடேகர், பாஜக தலைமையகத்தில், கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்றும், அதன் பிறகு நடைபெற உள்ள செய்தியாளர் சந்திப்பின்போது, கூட்டணி இறுதி செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.