முத்துப்பேட்டை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியால் முகமது மாலிக்கிற்கு போலீஸ் பாதுகாப்பு.முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் முகமதுமாலிக் கடந்த 2014–ம் ஆண்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பட்டரைக்குளத்தில் நடந்த முறைகேடான பணிகளை எதிர்த்தும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து உயர்நீதி மன்றம் பட்டரைக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முறைகேடாக நடந்த பணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி சென்ற ஆண்டு பட்டரைக்குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் மற்றும் பள்ளி வாசல்கள் உட்பட ஏராளமான குடியிருப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டது.

இந்நிலையில் அதே வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற வழிகாட்டுதலின்படி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள செக்கடிக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றவேண்டும் என்று சமூக ஆர்வலர் முகமதுமாலிக், தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு மனு அனுப்பி இருந்தார். இதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து சமூக ஆர்வலர் முகமதுமாலிக் சென்னை உயர்நீதி மன்றத்தில் சென்ற வாரம் சம்மந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த 1–ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி விசாரணையை நேற்று 3–ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். இச்செய்தியை அறிந்த அதிகாரிகள் நேற்று முன்தினம் அவசர அவசரமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சி மேற்கொண்டு முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு 24 மணிநேரத்துக்குள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட நோட்டீசை அனைத்து ஆக்கிரமிப்பு வீடுகளிலும் அதிகாரிகள் ஒட்டினர்.

இந்த நிலையில் நேற்று முத்துப்பேட்டை டி.எஸ்.பி. அருண், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருத்துறைப்பூண்டி வருவாய்த்துறை சர்வேயர்கள் குழுவினர் பேரூராட்சி அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து இதற்கு அடையாளமாக சிவப்பு கொடிகளை நட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை நூற்றுக்கணக்கான போலீஸ் பாதுகாப்புடன் மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய் துறை முக்கிய அதிகாரிகள் மேற்பார்வையில் பேரூராட்சி சார்பில் அதிநவீன இயந்திரங்களைக் கொண்டு ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணி தொடங்கியது.

சம்பவ இடத்தில் ஆர்.டி.ஓ செல்வசுரபி, திருத்துறைப்பூண்டி தாசில்தார் பழனிவேல், பேரூராட்சி செயல் அலுவலர் குலோத்துங்கன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் உள்ளனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன், ஏ.டி.எஸ்.பி. முத்தரசன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் சமூக ஆர்வலர் முகமதுமாலிக்கிற்கு பல்வேறு தரப்பில் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதேபோன்று அவரது வீட்டுக்கும், அலுவலகத்திற்கும் பலத்த போலீஸ் பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் முத்துப்பேட்டையில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.