மக்கள் நல கூட்டணியுடன் தேமுதிக உடன்பாடு விஜயகாந்துக்கு 124. மக்கள் நலக் கூட்டணி 110.தேமுதிகவுக்கும், மக்கள் நலக் கூட்டணிக்கும் இடையே நேற்று உடன்பாடு ஏற்பட்டது. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் 124 தொகுதியிலேயும், வைகோ அணி 110 தொகுதியிலேயும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவைக்கு வருகிற மே 16ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டி போட்டு தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் கூட்டணி உடன்பாடு மட்டும் ஏற்படாமல் இழுபறியில் இருந்து வந்தது. அதற்கு முக்கிய காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுக, பாஜ, மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இதனால் தமிழக அரசியலில் கூட்டணி ஏற்படாமல் இருந்து வந்தது.

இந்தநிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை, மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த வைகோ கடந்த திங்கள்கிழமை இரவு சூளையில் உள்ள ஒரு நண்பர் வீட்டில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, சுதீஷ் ஆகியோரும் உடன் இருந்தனர். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்களுடன் வைகோ நேற்று முன்தினம் காலையில் ஆலோசனை நடத்தினார். அதில் கூட்டணி இறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜயகாந்த், சுதீஷ் ஆகியோர் நேற்று காலை 9.45 மணிக்கு வந்தனர். அவர்கள் பின் வாசல் வழியாக கட்சி அலுவலகம் வந்தனர். அதைத் தொடர்ந்து காலை 9.50 மணிக்கு வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் ஒரே காரில் தேமுதிக அலுவலகம் வந்தனர். பின்னர் விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து அவர்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அதில், விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பொதுத் தேர்தலை சந்திப்பது என்றும், தேமுதிக 124 தொகுதிகளிலும், மக்கள் நலக் கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்த உடன்பாட்டைத் தொடர்ந்து யார்? யார்? எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அது குறித்து குழு அமைத்து தொகுதிகளை பிரித்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர். தற்போது 3வது அணியாக தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுகிறது. மேலும், பாமக, பாஜவும் தனித்துப் போட்டியிடுவதால் தமிழக சட்டப்பேரவைக்கு 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.