கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு 12 பெண்கள் தீக்குளிக்க முயற்சி; தீயணைப்பு படையினர் காப்பாற்றினார்கள்மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 12 பெண்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

தீக்குளிக்க முயற்சி

நேற்று பகல் 12 மணிக்கு காரமடை, பெள்ளாதி கிராமம், வெண்மணிநகரை சேர்ந்த திரளான பெண்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு வந்து குவிந்தனர்.

ஒவ்வொரு பெண்களின் கையிலும் பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து இருந்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த போலீசார் அந்த பெண்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது திடீரென்று ஒவ்வொரு பெண்களும் தாங்கள் வைத்து இருந்த பிளாஸ்டிக் பாட்டில்களை திறந்து தலையில் மண்எண்ணெயை ஊற்றி தீவைக்க முயன்றனர். அப்போதுதான் அந்த பாட்டில்களில் மண்எண்ணெய் இருப்பதை போலீசார் அறிந்தனர். உடனே போலீசார் 12 பெண்கள் தீக்குளிப்பதை தடுத்து அவர்களிடம் இருந்த பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

உடனடியாக அருகில் இருந்த தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் சிறிய வண்டியில் விரைந்து வந்து, மண்எண்ணெய்யை தலையில் ஊற்றிய பெண்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து காப்பாற்றினார்கள்.

மீட்கப்பட்ட பெண்களான ரேவதி, மலர்க்கொடி, ராணி, சந்திரா ஆகியோர் போலீசாரிடம் கூறியதாவது:-

கொலை மிரட்டல்

பெள்ளாதி, வெண்மணி நகர் பகுதியில் 85 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் வசித்து வரும் நிலத்துக்கு பட்டா தர நடவடிக்கை எடுப்பதாகவும், மின்சார வசதி, குடிநீர் இணைப்பு தருவதாகவும் கூறி ஒருவர் பணம் வசூலித்தார். ஆனால் எந்தவித அடிப்படை வசதியும் செய்து தராமல் அந்த நபர் ஏமாற்றி விட்டார். இதைத்தொடர்ந்து பெள்ளாதி ஊராட்சி தலைவரை சந்தித்து இந்த பகுதியில் அடிப்படை வசதி செய்து தருமாறு கோரினோம். அவரும் இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். இதனை தெரிந்து கொண்ட எங்களிடம் பணம் வசூலித்த ஒருவரும், அவருடைய கூட்டாளிகளும் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். மேலும் எங்கள் பகுதியை சேர்ந்த ஆண்கள் மீது பாலியல் தொடர்பான பொய் புகார்களையும் செய்து வருகிறார்கள். சிலரை தாக்கியும் உள்ளனர்.

எனவே 85 குடும்பத்தினரையும் மிரட்டி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

நாங்கள் இதுகுறித்து ஏற்கனவே போலீசாரிடம் புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களால் வாழ முடியவில்லை. தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லாததால் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றோம்.இவ்வாறு அந்த பெண்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணை

தீக்குளிக்க முயன்ற பெண்களின் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார், இந்த மனுவை கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் கொடுத்தனர். இதுகுறித்து கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். காரமடை போலீசார் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்தனர். இதைத்தொடர்ந்து அந்த பெண்கள் காரமடை போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.