மத்திய பட்ஜெட் 2016-17 விலை உயரும் பொருட்களும், குறையும் பொருட்களும்மத்திய பட்ஜெட்டில், வரி உயர்வு காரணமாக விலை உயரும் பொருட்களின் விவரமும், சலுகை காரணமாக விலை குறையும் பொருட்களின் விவரமும் வருமாறு:-

விலை உயரும் பொருட்கள்

* கார்கள் மீது உள்கட்டமைப்பு கூடுதல் வரி 4 சதவீதம்வரை விதிக்கப்படுவதால், கார்களின் விலை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்துக்கு மேல் உயரும். ரூ.10 லட்சத்துக்கு மேல் விலை கொண்ட சொகுசு கார்கள் மீது தனியாக 1 சதவீத வரி விதிக்கப்படுவதால், அத்தகைய சொகுசு கார்களின் விலை மேலும் கூடும்.

* அனைத்து சேவைகள் மீதும், உணவகத்தில் சாப்பிடுதல், தியேட்டரில் சினிமா பார்த்தல், கட்டணம் செலுத்துதல் போன்றவை உள்ளிட்ட செயல்பாடுகள் மீதும் ‘கிரிஷி கல்யாண் செஸ்’ என்ற புதிய கூடுதல் வரி (0.5 சதவீதம்) விதிக்கப்படுவதால், மேற்கண்ட சேவைகள் மற்றும் செயல்பாடுகளுக்கான கட்டணம் உயரும்.

* ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட ரொக்க பரிவர்த்தனைக்கு மூலத்தில் 1 சதவீத வரி விதிக்கப்படுவதால், ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட ரொக்க பரிவர்த்தனைக்கு கூடுதல் செலவாகும்.

* பீடியைத் தவிர, இதர புகையிலை பொருட்கள் மீதான உற்பத்தி வரி, 10 சதவீதம் முதல் 15 சதவீதம்வரை உயர்த்தப்படுவதால், சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விலை உயரும்.

* விமான எரிபொருள் மீதான உற்பத்தி வரி 8 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்வதாலும், கூடுதலாக ‘கிரிஷி கல்யாண் செஸ்’ கூடுதல் வரி விதிக்கப்படுவதாலும் விமான பயண கட்டணம் உயரும்.

* மினரல் வாட்டர் உள்ளிட்ட குடிநீர் மீதான உற்பத்தி வரி உயர்த்தப்படுவதால், குளிர்பானங்கள் மற்றும் மினரல் வாட்டர் விலை உயரும்.

* ஆயிரம் ரூபாய் விலைக்கு மேற்பட்ட ஆயத்த ஆடைகள் மீதான உற்பத்தி வரி 2 சதவீதமாக உயர்த்தப்படுவதால், அவற்றின் விலை அதிகரிக்கும்.

* இறக்குமதி செய்யப்பட்ட கவரிங் நகைகள் மீதான சுங்க வரி, 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படுவதால், அவற்றின் விலை உயரும்.

* தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சூரியசக்தி வாட்டர் ஹீட்டர் மீதான சுங்க வரி, 10 சதவீதமாக உயர்த்தப்படுவதால், அதன் விலை உயரும்.

* உள்நாட்டில் தயாரிக்கப்படும் செல்போன்களில் பயன்படுத்தப்படும் சர்க்யூட் போர்டுகள் மீது வரி விதிக்கப்படுவதால், அவற்றின் விலை 1 சதவீதம் அதிகரிக்கும்.

* மூத்த வக்கீல்கள் மற்றும் சட்ட ஆலோசனை நிறுவனங்களின் சட்ட உதவியை பெறுவதற்கு அளிக்கப்பட்டிருந்த சேவை வரி விலக்கு ரத்து செய்யப்படுகிறது. எனவே, அவர்களின் சேவையைப் பெறுவதற்கு சேவை கட்டணம் செலுத்த வேண்டும்.

* ஸ்மார்ட் கெடிகாரங்களின் விலை அதிகரிக்கும்.

* வீடு காலி செய்யும்போது, வீட்டில் உள்ள பொருட்களை வாகனத்தில் கொண்டு செல்ல வாடகைக்கு அமர்த்தப்படும் நிறுவனங்களுக்கான சேவை வரி 4.2 சதவீதத்தில் இருந்து 5.6 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதனால், அதற்கான கட்டணம் அதிகரிக்கும்.

* இறக்குமதி செய்யப்படும் பந்தய கார்கள் மீதான சுங்க வரி, 10 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தப்படுவதால், அக்கார்களின் விலை உயரும்.

* லாட்டரி டிக்கெட்டுகளுக்கு சேவை வரி விதிக்கப்படுவதால், அவற்றின் விலை உயரும்.

* இணையதள வாசிப்புக்கு பயன்படும் இ-ரீடிங் சாதனங்கள் மீதான சுங்க வரி உயர்த்தப்படுவதால், அவற்றின் விலை உயரும்.

* சுத்திகரிக்கப்பட்ட தங்க கட்டிகள் விலை உயரும்.

விலை குறையும் பொருட்கள்

* காலணி தயாரிப்பு மூலப்பொருட்கள் மீதான உற்பத்தி வரி குறைக்கப்படுவதால், காலணிகள் விலை குறையும்.

* உற்பத்தி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதால், சூரிய சக்தி விளக்குகளின் விலை குறையும்.

* பிராட்பேண்ட் மோடம், செட் டாப் பாக்ஸ் ஆகியவற்றின் மீதான உற்பத்தி வரி 12.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படுவதால், அவற்றின் விலை குறையும்.

* டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர், கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றுக்கு உற்பத்தி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதால், அவற்றின் விலை குறையும்.

* ஹைபிரிட் மின்சார வாகனங்களின் என்ஜினுக்கான உற்பத்தி வரி, 12.5 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுவதால், அந்த வாகனங்களின் விலை குறையும்.

* ஸ்டெரிலைஸ்ட் டயாலிசர் மீதான உற்பத்தி வரி ரத்து செய்யப்படுவதால், சிறுநீரக டயாலிசிஸ் செலவு குறையும்.

* மைக்ரோவேவ் ஓவனில் பயன்படுத்தப்படும் மேக்னட்ரான் என்ற இறக்குமதி சாதனம் மீதான சுங்க வரி ரத்து செய்யப்படுவதால், மைக்ரோவேவ் ஓவன் விலை குறையும்.

* சானிட்டரி நாப்கின் தயாரிப்புக்கான மூலப்பொருள் மீதான சுங்க வரி குறைக்கப்படுவதால், நாப்கின் விலை குறையும்.

* பார்வையற்றவர்களுக்கான காகிதத்துக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதால், அதன் விலை குறையும்.

* பிரதமரின் வீடு கட்டும் திட்டம், மாநில அரசுகளின் வீடு கட்டும் திட்டங்கள் ஆகியவற்றின் கீழ் 60 சதுர மீட்டர் பரப்பளவுக்கு மிகாத வீடுகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால், அத்தகைய குறைந்த விலை வீடுகளின் விலை மேலும் குறையும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.