தமிழகத்தில் கொளுத்துது வெயில்: பரவுது அம்மை.. ஜாக்கிரதைகோடைக்காலம் துவங்கும் முன், இப்போதே வெயில் வறுத்தெடுக்க தொடங்கிவிட்டது. பல இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரிக்கு  மேல் கொளுத்துகிறது. அனல் காற்றும் வீசுகிறது. நேற்று அதிகபட்சமாக கரூர், வேலூர், மதுரை, சேலம் ஆகிய இடங்களில் வெயிலின் அளவு 105  டிகிரியை எட்டியது. கிட்டத்தட்ட அக்னி நட்சத்திர காலம் போலவே இப்போது உள்ளது. வெயிலின் அளவு 105 டிகிரியாக இருந்தாலும், 119 டிகிரி  வெயில் இருப்பது போல் அனல் காற்ற வீசுகிறது. கோடை காலம் தொடங்கிவிட்டதால் தற்போது பலருக்கும் சிக்கன்பாக்ஸ் எனப்படும் சின்னம்மை  நோய் பரவி வருகிறது. இந்த நோய் எப்படி வருகிறது, வந்தால் எப்படி குணப்படுத்துவது என்பது குறித்து பெரம்பலூர் மாவட்டக் கொள்ளை நோய்த்  தடுப்பு அலுவலர் டாக்டர் அரவிந்தன் கூறியதாவது: சின்னமைக்கு கடும் வெயிலும், உடல் வெப்பமும் காரணம் என பலரும் நினைக்கின்றனர்.  உண்மையில் உடல் வெப்பத்துக்கும், அம்மை நோய்க்கும் தொடர்பில்லை.

கோடைவெப்பத்தால் பூமி சூடாகும்போது, அசுத்தமான இடங்களில் கொட்டிக்கிடக்கும் குப்பைக் கூளங்களில் வாழும் பல்வேறு கிருமிகள்  உயிர்த்தெழுந்து, காற்றுமூலம் பரவுகின்றன. இவற்றில் ஒன்றுதான் ‘வெரிசெல்லா ஜாஸ்டர்’ எனும் வைரஸ்கிருமி. இதன் மூலமாகத்தான், சின்னம்மை  நோய் ஏற்படுகிறது. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தான் சின்னம்மை அதிகம் தாக்குகிறது. நோயாளியின் கொப்புளத்திலும், சளியிலும் இந்நோய்க்  கிருமிகள் இருக்கும். கொப்புளம் உடைந்து நீர் வெளியேறும்போது இந்த வைரஸ் கிருமிகள் தொற்றும். குறிப்பாக, நோயாளியோடு நெருக்கமாகப்  பழகுபவர்களுக்கு பரவுகிறது. நோயாளி சளியிலிருந்து வைரஸ்கிருமிகள் வெளியேறி காற்றுமூலமும் பரவுகிறது. நோயாளி பயன்படுத்திய உடைகள்,  உணவுத் தட்டுகள், போர்வை, துண்டு மூலமும் அடுத்தவர்களுக்குப் பரவலாம். இதனால்தான் அம்மை பாதித்தோரைத் தனி மைப் படுத்துகின்றனர்.

முதலில் சாதாரணக் காய்ச்சலாகி 2ம்நாளில் உடல்வலி, தலைவலி, சோர்வு ஏற்பட்டு, உடலில் அரிப்பு, நமைச்சல், எரிச்சல் ஏற்படும். வாயிலும்  நாக்கிலும் சிறு கொப்புளங்கள் தெரியும். மார்பிலும் முதுகிலும் சிவப்புநிறத் தடிப்புகள் தோன்றும். அடுத்த 24மணி நேரத்தில் இவை எல்லாமே  நீர்கோத்த கொப்புளங்களாக மாறிவிடும். நோய் தொடங்கிய 7ம்நாளில் காய்ச்சல் குறையும். அடுத்த 4 நாட்களில் கொப்புளங்கள் சுருங்கி, பொருக்குகள்  உதிரும். ஒருமுறை சின்னம்மை வந்து குணமானவருக்கு, அவரது உடலில் இந்தநோய்க்கான எதிர்ப்பு அணுக்கள் உருவாகிவிடுவதால்,  ஆயுள்முழுவதும் அவருக்கு இந்த நோய் மீண்டும் வராது. அம்மை நோய் வந்தால் தெய்வ குற்றம் என நினைத்து பலரும் சிகிச்சை பெறாமல் விட்டு  விடுகின்றனர். இது தவறு.

அம்மைக் கொப்புளங்களில் வேப்பிலை, மஞ்சளை அரைத்துப்பூசி சிகிச்சை அளிப்பது நோய்எதிர்ப்புச் சக்தியைத்தரும். ஆனாலும் நோய்க்கான  வைரஸ்கிருமிகளை ஒழிக்க இவைமட்டுமே போதாது. ‘ஏ-சைக்ளோவிர்’ எனும் மாத்திரையை 5 நாட்களுக்கு சாப்பிட்டால் விரைவிலேயே சின்னம்மை  குணமாகும். அதோடு ‘ஏ-சைக்ளோவிர்’ களிம்பை கொப்புளங்களில் தினமும் தடவினால் அரிப்பு, எரிச்சல், நமைச்சல்கள் கட்டுப்படும். ஆரம்ப  கட்டத்திலேயே மாத்திரை சாப்பிட்டால் அம்மை அதிகரிப்பதைத் தடுக்கலாம். இதற்கான மாத்திரைகள் அரசு தலைமை மருத்துவமனை, வட்டார  மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்புள்ளது.

இவர்களது உணவில் கட்டுப்பாடு தேவையில்லை. எல்லா உணவையும் சாப்பிடலாம். பொதுவாக நோயாளி உடலில் நீரிழப்பு ஏற்படுவதால் பால்,  நீர்மோர், கரும்புச் சாறு, இளநீர், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை உள்ளிட்ட பழச்சாறுகள், அரிசிக்கஞ்சி, ஜவ்வரிசிக்கஞ்சி, சத்து மாவு, கூழ்,  குளுகோஸ், சத்துப்பானங்கள், உப்புச் சர்க்கரைக் கரைசல் போன்ற நீர்ச்சத்துள்ள ஆகாரத்தை பருகவேண்டும். அதோடு வைட்டமின் ஏ-சத்துள்ள காரட்,  பப்பாளி, தக்காளி, பசலைக் கீரைகளையும் சாப்பிடலாம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.