தி.மு.க. கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இணைந்தது.மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ஸ்டாலினை சந்தித்து தி.மு.க. கூட்டணியில் இணைந்தார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கடந்த 2009–ம் ஆண்டு மனிதநேய மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சி உதயமானது. ஜவாஹிருல்லா இதன் தலைவராக உள்ளார்.

2011–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

அதன் பிறகு டெல்லி மேல்–சபை தேர்தலில் தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்களித்தது.

தொடர்ந்து 2014–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி யில் நீடித்து ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது.

அதன்பிறகு தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய மக்கள் நலக்கூட்டு இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்தது.

அந்த இயக்கம் கூட்டணியாக மாற்றப்பட்டதால் அதில் இருந்தும் ஜவாஹிருல்லா விலகினார்.

தற்போதைய சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைய மனித நேய மக்கள் கட்சி முடிவு செய்து ஆதரவு கடிதம் கொடுத்தது.

இன்று மதியம் 12.15 மணிக்கு ஜவாஹிருல்லா ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது மனிதநேய மக்கள் கட்சி தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஸ்டாலினிடம் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்பு ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:–

தி.மு.க. கூட்டணிக்கு எங்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தோம். பேச்சுவார்த்தை திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடுவோம். தே.மு.தி.க., த.மா.கா. கட்சிகளும் தி.மு.க. கூட்டணிக்கு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜவாஹிருல்லாவுடன் மனித நேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமது, பொருளாளர் ரகமத்துல்லா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மூத்த தலைவர் ஹைதர்அலி, இப்பாகி ஆகியோரும் சென்று இருந்தனர்.

பின்னர் கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் ஜவாஹிருல்லா சந்திக்கிறார்.

2011 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு அந்த கட்சிக்கு ராமநாதபுரம், ஆம்பூர், சேப்பாக்கம்– திருவல்லிக்கேணி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இதில் ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லாவும், ஆம்பூரில் அஸ்லம்பாஷாவும் வெற்றி பெற்றனர். சேப்பாக்கம்– திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட தமிமுன் அன்சாரி தோல்வி அடைந்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.