பட்டுக்கோட்டை தாலுக்கா!! ஒரு சிறப்பு பார்வை!!நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை மாவட்டத்தில் மிக முக்கியமான நகரம் பட்டுக்கோட்டை. பட்டுக்கோட்டை தாலுகாவில் ஒரு நகராட்சி (பட்டுக்கோட்டை), 2 பேரூராட்சிகள் (அதிராம்பட்டினம், மதுக்கூர்) மற்றும் 76 ஊராட்சிகள் உள்ளது. பட்டுக்கோட்டை தாலுகாவின் மொத்த மக்கள்தொகை 2,97,827 ஆகும். பட்டுக்கோட்டை நகரின் மொத்த மக்கள்தொகை 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 73,097 ஆகும். 2014ம் ஆண்டு உத்தேசிக்கப்படுகிற மொத்த மக்கள்தொகை 76,367 ஆகும். பட்டுக்கோட்டை நகரம் 21.83 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 1965ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி பட்டுக்கோட்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 33 வார்டுகளை உள்ளடக்கியது.

106 தெருக்கள் உள்ளது. பட்டுக்கோட்டை நகரத்தின் ஒட்டுமொத்த சாலை 114.6 கி.மீட்டராகும். இதில் நகராட்சி சாலை 94.53 கி.மீட்டராகும். தினசரி நகரத்திற்கு சராசரியாக 10,000 பேர் வந்து செல்கின்றனர். தற்போது பட்டுக்கோட்டை தேர்வுநிலை நகராட்சியாக உள்ளது. தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை 50 கி.மீ. தொலைவில் உள்ளது. பட்டுக்கோட்டையை தனது பாட்டால் உலகறிய செய்தவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவருடைய சொந்த ஊர் பட்டுக்கோட்டை அடுத்த செங்கப்படுத்தான்காடு. இவருடைய மனைவி கௌரவம்பாள். இவருடைய மணிமண்டபம் பட்டுக்கோட்டையில் முத்துப்பேட்டை சாலையில் அமைந்துள்ளது. இவர் குறைந்த காலத்துக்குள் சமூக, சீர்திருத்த, திரையிசை பாடல்களை எழுதி மக்களின் மனதை தொட்டவர்.

இப்பகுதிக்கு பெருமை சேர்த்தவர்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஜில்லா போர்டு தலைவர் நாடிமுத்துபிள்ளை, முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய தளபதிகளில் திருச்சியிலிருந்து சென்னை வரை நடைபயணமாக சென்று போராட்டம் நடத்திய அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.டி.சோமசுந்தரம், நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட இன்னும் பலர். பட்டுக்கோட்டை விவசாயம் சார்ந்த பகுதி. இந்த பகுதியில் முதன்முதலாக கிராம விஸ்தரிப்பு பயிற்சி நிலையம் என்ற விவசாயம் சார்ந்த பயிற்சி நிலையம் முத்துப்பேட்டை சாலையில் 1.4.1954ம் ஆண்டு துவங்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு பின்னர் ஊரக விரிவாக்க பயிற்சி நிலையமாக (ஆர்.இ.டி.சி) மாறியது. தற்போது இந்த பயிற்சி நிலையம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை என 6 மாவட்டங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கும் நிலையமாக மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனமாக (ஆர்ஐஆர்டி) செயல்பட்டு வருகிறது. மேற்கண்ட மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனம், தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு ஒரு இடத்தில் தான் என்பது பட்டுக்கோட்டை நகரில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இப்பகுதியில் ஆரம்ப காலத்தில் நெல் சாகுபடி மட்டுமே. குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.

தற்போது போதிய தண்ணீரும், மழையும் இல்லாததால் மாற்றுப்பயிராக தென்னை சாகுபடிக்கு விவசாயிகள் மாறியுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் தென்னங்கன்றுகள் விரைவில் காய்ப்பதுடன் நீண்டகால பயன் தரக்கூடியது. பட்டுக்கோட்டை நகரத்தின் அடையாள குறியாகவே ரயில் நிலையம் மட்டுமே அரசு ஆவணங்களில் இன்றும் உள்ளது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக இவ்வழியே ஓடிய ரயில்கள் நிறுத்தப்பட்டது. ஆனால் அகல ரயில்பாதை பணிகள் இன்றும் முழுமையடையாமல் உள்ளது வேதனைக்குறியது.

காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரை அகல ரயில் பாதை பணிகளை விரைவில் முடிக்கவும், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் புதிய ரயில்பாதை திட்டத்தை துவக்கவும் இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். பட்டுக்கோட்டை நகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் சாலையை இணைக்கும் புதிய புறவழி சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு 4 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 3 கிலோ மீட்டர் தூரம் பட்டுக்கோட்டை – மதுக்கூர் சாலையை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் இப்பகுதி மக்கள் பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகாக்களை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை மாவட்டம் என தனியாக ஒரு மாவட்டத்தை உருவாக்கித்தர வேண்டுமெனவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தேங்காய் வணிக வளாகம்

பட்டுக்கோட்டையில் விளையும் தேங்காய் சமையலுக்கு அதிகமாக பயன்பெறுவதுடன் எண்ணெய் பிழியும் அளவும் கூடுதலாக உள்ளது. இப்பகுதியில் அதிகமாக உற்பத்தியாவதால் தேங்காயை மதிப்புக்கூட்டும் பொருட்களாக மாற்றி விவசாயிகள் பயனடையும் வகையில் தமிழ்நாட்டிலேயே பட்டுக்கோட்டை அடுத்த பொன்னவராயன்கோட்டை உக்கடை பகுதியில் மட்டும் தான் தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடியில் தேங்காய் வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

வழக்கு சொல்லாக மணிக்கூண்டு

நகரத்தின் இதய பகுதியில் பேரூராட்சியாக இருந்த காலத்திலேயே மணிக்கூண்டு அமைக்கப்பட்டிருந்து. போக்குவரத்து காரணங்களுக்காக இந்த மணிக்கூண்டு அகற்றப்பட்டது. இதற்கு பிறகும் இன்று வரை மக்களுடைய வழக்கு சொல்லாக மணிக்கூண்டு என்றே அழைக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் பாரம்பரியமாக இன்று வரை அழைக்கப்பட்டு வரும் பெயரை உறுதிப்படுத்தும் வகையிலும் மணிக்கூண்டு இருந்த இடத்தில் ஒரு கடிகாரம் அமைக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
-dinakaranimg_4286
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.