கல் மனம் வேண்டாம்..! சிரியுங்கள் சிந்தியுங்கள்......ரத்தமும் சதையுமாக இருக்கும் உடலுக்குள் சிலருக்கு இருப்பதோ கல் மனம். ஆம்.. சந்தோஷம், துக்கம், கவலை, மகிழ்ச்சி என்று உணர்ச்சிகளை யார் எப்படி வெளிப்படுத்தினாலும் கற்சிலை போல் இருப்பார்கள். எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்ட மாட்டார்கள்.

முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று மகன் வீட்டுக்கு வருகின்றான். ஆசிரியரே பாராட்டியிருக்கின்றார். வீட்டில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றான். தந்தையோ.. ஒன்றும் நடக்காததுபோல் சர்வ சாதாரணமாக அதனை எடுத்துக்கொள்வார். மகிழ்வை வெளிப்படுத்தவோ மகனை உற்சாகமூட்டவோ, ஒரு முத்தம் கொடுக்கவோ மாட்டார். கல் மனம்.

நண்பனைச் சந்திக்க வீட்டுக்குச் செல்கின்றார் அவர். தேநீர் கொடுத்து உபசரித்த பின் வீட்டுக்குள் சென்று அப்போதுதான் பிறந்த தனது குழந்தையை கைகளில் ஏந்தியவாறு வெளியே வருகின்றார் நண்பர். ‘எனது மகனைப் பாருங்கள்’ என்கிறார். இவரோ.. ஒரு கையில் தேநீர் கோப்பையை ஏந்தியவாறு, ‘மாஷா அல்லாஹ்..! நல்லா இருக்கான்..’ என்றவாறு பார்வையை வேறுபக்கம் திருப்பி தேநீரை அருந்தத் தொடங்குகின்றார்.

அந்தப் பிஞ்சுக்குழந்தையை கைகளில் எடுத்து முத்தமிடவோ, கொஞ்சவோ, அதன் நறுமணத்தை முகர்ந்து பார்க்கவோ, அதன் அழகை தந்தையிடம் வர்ணிக்கவோ செய்யாமல் தேநீர் குடிப்பதில் கவனத்தைச் செலுத்தும் அவர் குறித்து நாம் என்ன சொல்வோம்..? கல் மனம்.

வேலைக்காரருக்கு வீட்டில் இருந்து நல்ல செய்தி வந்திருக்கிறது. முகமெங்கும் புன்னகை. ‘என்ன விஷயம்?’ என்று முதலாளி விறைப்புடன் கேட்கிறார். விவரத்தைத் தெரிவிக்கிறார். உடனே முதலாளி, ‘சரி.. சரி.. வேலையைப் பாரு! அதுக்காக அப்படியே பகல் கனவு கண்டபடி உட்கார்ந்து விடாதே...’ என் கிறார். இந்த முதலாளியை என்ன சொல்வது?  கல் மனம்.

இதனை இஸ்லாம் ஒருபோதும் விரும்புவதில்லை. ஒரு விஷயத்திற்கு பிறர் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள முயல வேண்டும். அடுத்தவர் விஷயம் நமக்கு முக்கியம் இல்லையென்றாலும் அவருடைய உணர்வுகளில் நாமும் பங்கு  பெறுவதுதான் நல்ல முஸ்லிமுக்கு அடையாளம்.

பிறருக்கு ஏற்படும் கவலை, சந்தோஷம், துக்கம், திடுக்கம் ஆகியவற்றின்போது குறைந்தபட்சம் நாம் நமது உணர்ச்சிகளையாவது வெளிப்படுத்தலாம். உணர்ச்சிகளை வெளிப்படுத்தாதவர்களை ‘ஜடம்’ என்றுதான் தமிழில் கூறுவார்கள். இஸ்லாமிய மொழி மரபில் கூறுவது என்றால் ‘மைய்யித்’  அல்லது ‘ஜனாஸா’.

ஏற்கனவே நமக்குத் தெரிந்த ஒரு கதையையோ, சம்பவத்தையோ வேறொருவர் நம்மிடம் சொல்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். நமது எதிர்வினை எப்படி இருக்கும் தெரியுமா..? ‘ஹைய்யோ.. தெரிந்ததையே சொல்லி சாகடிக்கிறானே..! சரியான மொக்கை. எப்படிடா தப்பிப்பது..?’ என்பதாகவே இருக்கும். அது நமக்கு ஏற்கனவே தெரிந்த தாக இருக்கலாம். ஆனால் அவருக்குப் புதுசு அல்லவா..? அவர் உணர்வுகளைக் காயப்படுத்தலாமா..?

அப்துல்லாஹ் இப்னு முபாரக் எனும் பேரறிஞர் கூறுகின்றார்: ‘என்னிடம் ஒருவர் ஒரு ஹதீஸைக் கூறுகின்றார். அல்லாஹ் மீது ஆணை! அவரை அவரது தாயார் ஈன்றெடுப்பதற்கு முன்னரே அந்த ஹதீஸ் எனக்குத் தெரியும். ஆயினும் அப்போதுதான் முதல் முறையாக அதனைச் செவியுறுவதுபோல் அதனை நான் கேட்பேன்’.

இதுதான் இங்கிதம். இஸ்லாம் கற்றுத்தரும் பண்பாடுகளில் இதுவும் ஒன்று. இன்றைய இளைய சமூகத்திடம் இல்லாத ஒன்று.

அகழ் போருக்கான ஆயத்த வேலைகள் மும் முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நபித்தோழர்களிடையே ஜுஐல் என்று ஒருவரும் இருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவருடைய பெயரை அம்ர் (ரலி) என்று மாற்றி வைத்தார்கள். அகழ் தோண்டும்போது நபித்தோழர்கள் இவ்வாறு பாடினார்கள்:

‘ஜுஐல் எனும் பெயர் அம்ர் என்று மாற்றப்பட்டதே. மகிழ்ச்சியற்ற அவருக்கு வெற்றித் திருநாளும் வந்ததே’.

நபித்தோழர்கள் இவ்வாறு கவிதை பாடுவதைக் கேட்ட நபி (ஸல்) அவர்களும் அம்மக்களுடன் சேர்ந்து, கவிதையின் இறுதியில் வரும் (அம்ரன், ளஹ்ரன் என்ற) வார்த்தைகளைச் சொன்னார்கள்.

பொதுவாக நபி (ஸல்) அவர்கள் கவிதைகளை அவ்வளவாக விரும்புவதில்லை. ஆயினும் நல்ல கவிதைகளை விரோதித்ததும் கிடையாது. தோழர்களுடைய மகிழ்வில் தாமும் பங்குகொண்ட ஒரு நிகழ்வையே இங்கு காண்கிறோம். தங்கள் கவிதையில் இறைத்தூதரும் பங்கு கொண்டார்கள் என்பதைக் கண்டபோது தோழர்களுக்கோ அதிக சந்தோஷம்.

அந்தப் போரின்போது இரவு முழுவதும் தோழர்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். கடும் குளிர் வேறு. ஒருநாள் இரவில் அவர்களைப் பார்வையிட நபிகளார் வந்தபோது மகிழ்ச்சியில் தோழர்கள் இவ்வாறு பாடினார்கள்:

‘நாங்கள் உயிரோடிருக்கும் காலம்வரை அறப்போர் புரிவோம் என்று முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்திருக்கின்றோம்’.

இதனைச் செவியுற்ற நபிகளாரும், ‘இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு நிலையான வாழ்க்கை எதுவுமில்லை. ஆகவே அன்சாரிகளுக்கும், முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பருள்வாயாக!’ என்று பாடினார்கள்.

தோழர்களுக்கோ மகிழ்ச்சி தாங்க வில்லை. உற்சாகத்துடனேயே பல நாட்கள் தொடர்ந்து குழி தோண்டும் பணியில் ஈடுபட்டார்கள். கவிதைகளும் இவ்வாறு தொடர்ந்தன:

‘இறைவா! நீ இல்லாவிட்டால் நாங்கள் நல்வழி அடைந்திருக்கமாட்டோம்!

தர்மம் செய்திருக்க மாட்டோம்! தொழுதும் இருக்கமாட்டோம்!

இறைவா! எங்கள் மீது அமைதியை பொழிவாயாக!

(எதிரிகளை) நாங்கள் சந்திக்கும்போது பாதங்களை உறுதிப்படுத்துவாயாக!

இவர்கள் (எதிரிகள்) எங்களுக்கு அநீதியிழைத்து விட்டனர்.

எங்களைச் சோதனையில் ஆழ்த்த இவர்கள் விரும்பினாலும்

நாங்கள் இடம் தரமாட்டோம்!’

தோழர்களுடன் சேர்ந்து நபி (ஸல்) அவர்களும், ‘நாங்கள் இடம் தரமாட்டோம்’ என்ற கடைசி வார்த்தையை நீட்டியபடி தொடர்ந்து முழக்கமிட்டார்கள். (புகாரி)

எனக்கு கவிதையே பிடிக்காது.. இவர்கள் ஏன் இப்படிக் கவிதை பாடுகின்றார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் வெறுத்து ஒதுக்கவில்லை. தோழர்களின் மகிழ்வில் தானும் பங்குகொண்டார்கள். அவர்களை உற்சாகப்படுத்துகின்றார்கள். இதுதான் அழகிய பண்பாடு. இதுதான் அழகிய நபிவழி.

யாராவது சிரித்துப் பேசினால் நபிகளாரும் அவர் களுடன் கலந்து கொள்வார்கள். ‘நேரம் காலம் தெரியாமல் இவன் வேற..’ என்று ஒதுங்கி இருக்க மாட்டார்கள். அவர்களுடன் சேர்ந்து சிரிப்பார்கள்.

ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியருடன் கோபம் கொண்டு தமது மாடியறைக்குள் சென்று தனியே இருந்தார்கள். செய்தியறிந்த உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களை எப்படியாது சிரிக்க வைக்க வேண்டும், சகஜ நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற முடிவோடு அங்கு வருகின்றார்.

பெருமானார் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! குறைஷியரான நாங்கள், பெண்களை எங்கள் அதிகாரத்தில் வைத்திருந்தோம். பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கூட்டத்தாரிடம் (மதீனாவாசிகள்) நாங்கள் வந்தபோது.. எங்கள் பெண்களும் அவர்களைப் பார்த்துக் கற்றுக்கொண்டு எங்களிடம் எதிர்த்துப் பேசத் தொடங்கிவிட்டனர்’ என்று கூறினார்.

அதுகேட்ட நபி (ஸல்) அவர்கள் புன்னகைக்கத் தொடங்கினார்கள். உமர் (ரலி) மீண்டும் பேசினார். நபிகளாரின் புன்னகை அதிகமானது. (புகாரி). தமது கடவாய் பற்கள் தெரியும் அளவுக்கு நபிகளார் சிரித்ததாக ஒருசில அறிவிப்புகளில் உள்ளது.

‘என் கவலை புரியாமல் இவர் வேற வந்து காமெடி பண்ணிட்டு இருக்காரே..’ என்று முகம் திருப்பவில்லை அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

‘உண்மை யாதெனில், உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருந்தது – உங்களில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும்            நம்புகின்றவராகவும், அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருபவராகவும் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும்’ என்கிறது திருக்குர்ஆன் (33:21).

மவ்லவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.