மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்தது திமுக அரசு.... ஈஸ்டர் வாழ்த்தில் கருணாநிதிதமிழகத்தில் மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்து மக்களை மகிழச் செய்தது திமுகதான் என்று திமுக தலைவர் கருணாநிதி தனது ஈஸ்டர் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "ஏசு பெருமானுக்குக் கொடியோர் இழைத்த வன்செயல்களால் நேர்ந்த துன்பங்கள் நீங்கி; இன்பம் மலர்ந்த நாளாக இயேசு நாதர் இன்னல்களிலிருந்து மீண்டெழுந்த நாளாகக் கிருத்துவ சமுதாய மக்கள் 27.3.2016 அன்று ஈஸ்டர் திருநாள் கொண்டாடுவதையொட்டி தமிழகத்தில் வாழும் கிருத்துவ மக்கள் அனைவருக்கும் தி.மு.க.வின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம் வந்த அயல்நாட்டுக் குருமார்களாகிய மாமேதைகள் வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப் ஆகியோருக்கு அவர்கள் ஆற்றிய உன்னதமான தமிழ்த் தொண்டுகளுக்கு நன்றி கூறும் உணர்வோடு 1968 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா முன்னின்று நடத்திய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது சென்னைக் கடற்கரை காமராசர் சாலையில் சிலைகள் எடுத்துச் சிறப்பித்தது தி.மு.க ஆட்சி. கல்வி நிறுவனங்களில் சேருவதற்கும், வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கும் மதம் மாறிய ஆதிதிராவிட கிருத்துவர்களுக்குப் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுச் சலுகையை 1974 ஆம் ஆண்டில் வழங்கியது தி.மு.க. ஆட்சி. அந்தச் சலுகையை மதம் மாறிய ஆதிதிராவிட கிருத்துவர்களின் முதல்தலை முறைக்கு மட்டுமல்லாமல், அனைத்துத் தலைமுறையினருக்கும் நீட்டித்து 1975 ஆம் ஆண்டில் ஆணையிட்டது தி.மு.க. ஆட்சி. 1989 ஆம் ஆண்டில் மாநில சிறு பான்மையினர் நல ஆணையம் அமைத்துக் கிருத்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் நலம் பெறச் செய்தது தி.மு.க. ஆட்சி. கிருத்துவர் உள்ளிட்ட சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தொழில்கள் தொடங்கிப் பொருளாதார மேம்பாடு காணவேண்டும் என்பதற்காக 1999ல் "தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை" தனி அமைப்பாகத் தொடங்கி நிதியுதவிகள் வழங்கியது தி.மு.க. ஆட்சி. சிறுபான்மையினர் நல இயக்ககம் ஒன்றை 6.4.2007 அன்று தோற்றுவித்தது தி.மு.க. ஆட்சி. மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்தது தி.மு.க. ஆட்சி. மகத்தான தொண்டுகள் மூலம் கருணையின் வடிவமாய்த் திகழ்ந்த அன்னை தெரசாவைப் போற்றி, அவரது நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியதுடன் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்திற்கு "அன்னை தெரசா மகளிர் வளாகம்" எனப் பெயர் சூட்டி 1.11.2010 அன்று திறந்து வைத்ததும் தி.மு.க. ஆட்சி. இப்படி தி.மு.க.ஆட்சி அமைந்த போதெல்லாம் கிருத்துவ சமுதாயப் பெருமக்களைப் போற்றி, அவர்களின் நலம்பேணிட சலுகைகள் பல வழங்கி; என்றும் அவர்களுடன் நல்லுறவு வளர்த்து; கிருத்துவ சமுதாய மக்களுக்கு என்றும் துணைபுரிந்து வருவது தி.மு.க. என்பதனை நினைவு படுத்தி, இந்நன்னாளில் கிருத்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் மீண்டும் தெரிவித்து மகிழ்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.