ஆண் விபச்சாரி என்று சொல்ல மறுப்பதும்,மறப்பதும் ஏன்?...நேற்று வரை இன்னொருவனுக்கு மகளாக,சகோதரியாக சுதந்திரமாய் சுற்றி வந்தவள்..நேற்று எனக்கு மனைவியானதன் காரணமாக இருபது வருடம் தனக்கு பின்னே சுமந்த தகப்பன் பெயரை தூக்கி எறிந்துவிட்டு என் பெயரை சேர்த்து கொண்டாள்..
நேற்றுவரை சைவமாக இருந்தவள் இன்று எனக்காக கறிக்குழம்பும்,கருவாட்டு குழம்பும் செய்கிறாள்..
தன் வீட்டில் இருக்கும் போது சாப்பிட்ட தட்டை கூட கழுவி வைக்காத பெண் இன்று என் குடும்பத்துக்கான அத்தனை வேலையையும் இழுத்து போட்டு செய்கிறாள்..
நேற்று வரை ஜீன்ஸ் அணிந்து கொண்டிருந்தவள் இன்று எனக்காக சேலை அணிந்து வருகிறாள்..
தன் தாய்க்கு கூட காட்டாத அவளின் உடலை எனக்காக தருகிறாள்..
என்னோடு பத்து நிமிடம் சுகமாய் இருந்ததற்கு ஆயிரம் மடங்கு வேதனையை சுமக்கிறாள்..
ஒற்றை நொடியில் அவளுக்கான உலகத்தையே நானாக,என் குடும்பமாக மாற்றி கொள்கிறாள்..
இரவில் என்னோடு படுக்கையில் இருந்த காரணத்தினால் என் கருவை சுமக்கிறாள்..
அவள் கர்ப்பமாக இருந்து எதையும் உண்ண முடியாமல்,நினைத்த வாக்கில் படுத்து தூங்க முடியாமல்,தன் அப்பன் வீட்டில் உண்டு வளர்த்த தனது சக்திகளை எல்லாம் திரட்டி என் பிள்ளைக்கு தந்து அவனை உள்ளேயே வைத்து வளர்க்கிறாள் …
தன் உயிரையே பணயம் வைத்து எனக்கு மலடன் பட்டம் வராமல் தடுத்து என்னை தகப்பனாக ஆக்குகிறாள்..
அதன் பின்னர் என் பிள்ளைகளுக்காக தனது அத்தனை செயல்களையும் மாற்றி கொள்கிறாள்..
அவளுக்காக என்ன செய்துவிட்டேன் நான்?
அவள் வாந்தி எடுத்து கொண்டு இருந்த போது நான் கிரிக்கட் விளையாடிக்கொண்டு இருந்தேன்..
அவள் தூங்க முடியாமல் தவித்த போது குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருந்தேன்..
நான் அவளுக்காக எதையுமே இழக்க வில்லை..
ஆனால் அவளோ எனக்காக தன குடும்பம்,உடல்,மனம்,உணவு,உடை,சுதந்திரம் என அனைத்தையும் இழந்து விட துணிகிறாள் ..
அப்படிப்பட்ட பெண்ணுக்கு,என் மனைவிக்கு நான் எத்தனை லட்சம் அல்லது கோடி பணம் கொடுக்க வேண்டும்??
அதை விட்டு விட்டு அந்த பெண்ணிடம் பணம் கேட்பது எந்த வகையில் சரி??
இந்துக்கள்,கிறிஸ்துவர்கள்,முஸ்லிம்கள்,நாத்திகர்கள் என அனைவருமே தவறு என்று மனப்பூர்வமாக உணர்ந்த ஒரு விசயத்தை நம்மில் பெரும்பாலோனோர் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் செய்ய காரணம் என்ன?
வரதட்சினை கொடுமையால் முதிர் கன்னியாகவே வாழ்ந்து இறந்து போனவள்,தற்கொலை செய்து கொண்டவள்,தவறான வழியில் சென்றவள்,ஸ்டவ் வெடித்து இறந்தவள் என அத்தனை பேரின் மரணத்திலும் நமக்கு பெரும்பங்கு இருப்பதை உணரவில்லையா?
இதே நேரம் வரதட்சினை கொடுமைக்கு முக்கிய காரணம் யார் என்று பார்த்தால்,அசிங்கமாய் இருக்கிறது..அவளும் பெண்தான்..
என் மகனுக்கு இப்படிப்பட்ட பெண் வேண்டும் என்று கேட்கும் போதே இத்தனை பவுன் நகை,இத்தனை லட்சம் ரொக்கம் வேண்டும் என்றும் கேட்கும் தாய்மார்கள்தான் அதிகம் இங்கே..
வரதட்சிணைக்கு பயந்து பெண்குழந்தைகளை உயிரோடு புதைக்கும் கொடுமையில் உங்களுக்கும் பங்கில்லையா?அந்த குழந்தைகள் இறைவனிடம் முறையிடாது என்ற தைரியமா?
வாங்குறவன் கிட்டே கேட்டால் அவன் சொல்லுவான்”நானா கேக்கல..அவங்களா பிரியப்பட்டு குடுத்தாங்க”என்று..
இந்த விசயத்தில் நபிகள் நாயகத்தை துணைக்கு அழைக்க வேண்டும் என எண்ணுகிறேன்.
அதே போல நீங்கள் அந்த பெண்ணை திருமணம் செய்யத்தான் அந்த பணம்..அந்த பெண்ணை நீ கொடுமை செய்துவிட கூடாது என்பதற்குதான் அந்த பணம்..
வேண்டுமென்றால் ஒன்று செய்து பாருங்கள்..அந்த பெண் எனக்கு வேண்டாம் என்று சொல்லுங்கள்..அப்போதும் அவர் உங்களுக்கு அந்த பணத்தை தருவாரா என்று பார்ப்போம்?
ஒரு பெண் தன்னை விற்றால் அது விபச்சாரம் என்று சொல்லும் சமூகமே..ஒரு ஆண் தன்னை ஆயிரம் பேர் மத்தியில் வைத்து விலை பேசும் போது அவனை ஆண் விபச்சாரி என்று சொல்ல மறுப்பதும்,மறப்பதும் ஏன்?
அடுத்தது பெண்களை பெற்ற வசதியானவர்களுக்கு..
நீங்கள் கொடுப்பதால் தான் அவனும் வாய் கூசாமல் கேட்கிறான்..எல்லோருமே கொடுப்பதை நிறுத்தி விட்டால் அவன் யாரிடம் போய் கேட்பான்?
உங்களுக்கு வசதி இருக்கிறது என்பதால் அத்தனை லட்சங்கள் செலவு செய்து ஒருவனை வாங்கி விடுகிறீர்கள்..அதே நேரம் அடுத்த வேலை சோற்றுக்கே வழியில்லாத ஒரு தகப்பன் ஒரு ஆண்மகனை எப்படி அவ்வளவு விலைகொடுத்து வாங்குவான்? வரதட்சினை கொடுமையில் உங்களுக்கும் பெரும்பங்கு உண்டு…
நானும் வரதட்சினை கொடுத்து விட்டேன் என் சகோதரிக்கு…
ஆனால் உறுதியோடு சொல்லுவேன்..நான் வரதட்சினை வாங்க மாட்டேன்..என்னை ஆயிரம் பேர் முன்னிலையில் நிர்வாணமாக நிற்க வைத்து விற்கும் வேலையை செய்ய யாரையும் அனுமதிக்க மாட்டேன்..
வரதட்சினை வாங்கி திருமணம் செய்து கொண்டவர்கள் இதை எண்ணி திருந்துங்கள்..வருந்துங்கள்..உங்கள் மனைவி,மாமனாரிடம் சென்று மன்னிப்பு கேளுங்கள்..முடிந்தால் அந்த பணத்தை திருப்பி கொடுங்கள்..
மணமாகாத ஆண்கள் உங்களை நீங்களே நிர்வாணமாக மக்கள் மத்தியிலே விற்க மாட்டேன் என உறுதி பூணுங்கள்..அதில் நிலையாக நில்லுங்கள்..
மணமாகாத பெண்களின் பெற்றோர்களே..எவனுக்கும் ஒரு பைசா கொடுக்க மாட்டேன் என்று உறுதியோடு நில்லுங்கள் ..டாக்டரும்,வக்கீலும் வராவிட்டாலும் ஒரு நல்ல ஆண்மகன் நிச்சயம் உங்கள் மகளை மணக்க முன்வருவான்..
இவை அனைத்தும் எனக்கும் பொருந்தும்..
– நாகரீக கோமாளி -
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.