தமிழக முஸ்லிம்கள் கடந்து வந்த அரசியல் மற்றும் சமூகப் பொருளாதாரச் சூழல்கள்… – 2முஸ்லிம்களின் வசம் இருந்த அனைத்து வர்த்தகத்திலும் தங்கள் கட்டுப்பாட்டினை இழந்த இத்தகைய நெருக்கடியான காலக்கட்டத்தில், தமிழகத்தின் உட்புற பிரதேசங்களில் இருந்து புதிதாக முஸ்லிம் வியாபார சமூகம் ஒன்று மதராஸின் வர்த்தக உலகை நோக்கி பயணித்தது, அவர்கள் தென்தமிழகத்தைச் சேர்ந்த இராவுத்தர்கள் மற்றும் வட ஆற்காடு பகுதியை சார்ந்த முஸ்லிம் பெருமக்கள், இவர்களில் இராவுத்தர்கள் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த ஒரு உட்பிரிவினர், ஆனால் வட ஆற்காட்டு பகுதியை சார்ந்த முஸ்லிம்களின் பிண்னனி வேறுவிதமானது.

ஆற்காட்டினை தலை நகராகக் கொண்டு நவாப் சதாதுல்லா கான் ஆண்டபொழுது, தக்காணத்தில் இருந்தும், வட இந்திய பகுதிகளில் இருந்தும் வந்த முஸ்லிம்கள் இங்கே குடியேறினர், 1797 ஆம் ஆண்டு நவாப் ஆற்காட்டில் இருந்து மதராஸுக்கு இடம் பெயர்ந்த போது இந்தப் பகுதியை சார்ந்த ஏராளமான முஸ்லிம்கள் ஆற்காட்டினை விட்டு வெளியேறினர், பிறகு திப்பு சுல்தானின் வாரிசுகள் வேலூர் கோட்டையில் சிறை பிடித்து அடைத்து வைக்கப்பட்டிருந்த போது, பல முஸ்லிம்கள் இந்த வட ஆற்காடு பகுதியை நோக்கி இடம் நகர ஆரம்பித்தனர், மேலும் தஞ்சாவூர் பகுதியை சார்ந்த ஏராளமான முஸ்லில் லெப்பை பிரிவினர் 19 ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் முக்கியமாக வட ஆற்காடு பகுதிகளில் குறிப்பாக வாணியம்பாடி, மேல்விஷாரம், ஆற்காடு, ஆம்பூர், வந்தவாசி மற்றும் வேலூரில் குடியேற தொடங்கினர். மேலும் இந்த முஸ்லில் லெப்பை பிரிவினர் தங்களின் தாய் மொழியாக உருது மொழியை உள்வாங்கிக் கொண்டனர், காலத்தால் இவர்கள் தமிழ் மற்றும் உருது கலாச்சார அடையாளம் கொண்ட தனி முஸ்லிம் சமூகமாக உருமாற்றம் அடைந்தனர்.

17 ஆம் நூற்றாண்டு முதல் விலங்குத் தோல்களும், தோல் மூலம் தயாரிக்கப்படும் உபயோக பொருட்களும் முஸ்லிம் வர்த்தகர்களால் கோரமண்டல துறைமுகங்களிலிருந்து தெற்காசியா மற்றும் ஜப்பான் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது, இந்து மதத்தைச் சேர்ந்த வணிகர்கள் பலர் தோல் பதனிடும் தொழில் அசுத்தமானது என்ற கருத்துக் கொண்டதால் இந்தத் தொழிலில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தனர், இதுவே முஸ்லிம் வர்த்தகர்களுக்கு தோல் தொழிலில் போட்டியற்ற சாதகமான சூழலை தந்தது, இதன் காரணமாக 20 ஆம் நூற்றாண்டின் துவக்க காலங்களில் வட ஆற்காடு முஸ்லிம்கள் மற்றும் இராவுத்தர்களுக்கு தோல்வர்த்தகத்தில் போட்டிகள் இல்லாத சந்தையினைத் தென் இந்தியா மற்றுமின்றி வட இந்திய பகுதிகளிலும் உருவாக்கி மிகப் பெரும் ஆதாயத்தை ஈட்டி தந்தது என்றால் மிகையில்லை.

தோல் பதனிடும் தொழிலும், தோல் பொருட்கள் வர்த்தகத்திலும் திருச்சியைச் சேர்ந்த முகம்மது மியான் இராவுத்தரும், இராமநாதபுரத்தை சேர்ந்த ஜமால் முகைதீன் இராவுத்தரும் ஜாம்பவான்களாக வலம் வந்தனர். மியான் இராவுத்தர் 1883 ஆண்டு வாக்கில் ஒரு தோல் ஆலையுடன் இந்த வர்த்தகத்தில் நுழைந்து பிறகு திருச்சி செம்பட்டுப் பகுதியில் இயங்கி வந்த மூன்று ஆலைகளுக்கு அதிபரானார். ஜமால் முகைதீன் இராவுத்தரோ 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதராஸ் நகருக்கு இடம்பெயர்ந்து இந்தத் தொழிலை திறம்பட நடத்தி வந்தார், பச்சை தோல்கள் மற்றும் பதனிடப்பட்ட தோல்களை ஏற்றுமதி செய்வது மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் தோல் பதனிடும் வர்த்தகர்களுக்கு முகவராகவும் செயல்பட்டு வந்தார், அன்னாரின் மறைவுக்குப் பிறகு இவரது மகன் ஜமால் முகம்மது இராவுத்தர், இந்தத் தொழிலை சீரிய முறையில் நடத்தி தொழிலுலகில் புகழுச்சியினை அடைந்தார், இவரின் ஏராளமான சொத்துக்கள் மற்றும் வருவாயின் அடிப்படையில் வர்த்தக உலகில் தென்னிந்தியாவில் முடிசூடா இளவரசராக அந்தக் காலகட்டத்தில் கருதப்பட்டார்., இந்த நிலையில் தமிழக மைய நகரங்களான மதுரை, திருச்சி போன்ற இடங்களுக்கு முஸ்லீம் இராவுத்தர்கள் பெருமளவில் வியாபாரத்திற்காக வரத்துவங்கினர்.

வட ஆற்காட்டைச் சேர்ந்த முன்னணி தோல் வர்த்தகர்களான ஹயாத் பாசா சாஹிப் மற்றும் இவரின் மகன் மலாங் அஹ்மது பாசா ஆகியோர் ஆம்பூர் நகரை வர்த்தக மையாமாக வைத்து செயல்பட்டு வந்தனர், மதராஸை வர்த்தக மையமாக வைத்து செயல்பட்டு வந்த சி. அப்துல் ஹக்கீம், மற்றும் அப்துல் சுப்ஹான் சாஹிப் போன்றோர், அரசியலில் ஈடுபட்டு மகானத்தில் முக்கியப் புள்ளிகளாகக் கருதப்பட்டனர், இந்த பெருமக்களின் வானளாவிய செல்வங்களும், சொத்துக்களும் இவர்களுக்கு அரசியலிலும், மக்கள் மத்தியிலும் கணிசமான செல்வாக்கை ஏற்படுத்தி தந்தது.

muslim merchants

1948 ஆம் ஆண்டில் ஆற்காடு இளவரசர் தான் வகித்து வந்த மதராஸ் மகாண முஸ்லிம் லீக்கின் தலைவர் பதவியைத் துறந்த பின்பு உருதை தாய் மொழியாகக் கொண்டிராத முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த செல்வந்தர்கள் அரசியல் விவகாரங்களில் காய் நகர்த்தும் தகுதியினை அடைந்தனர், பாசா குழுமத்தின் வர்த்தகச் சாம்ராஜ்யம் 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சரிந்து வீழத்துவங்கியதும், புதிதாய் சந்தையில் நுழைந்த தமிழ் முஸ்லிம் வர்த்தகக் குழுக்களுடன் போட்டியிட முடியாத நிலையிலும், உருது பேசும் புது வர்த்தகர்கள் எவரும் சந்தையில் தடம் பதிக்காத சூழ்நிலையும் தமிழ் முஸ்லிம்களுக்கு பொருளாதாரத்தில் ஏற்றமடையும் வாய்ப்பை அள்ளிக் கொடுத்தது. ஒரு கட்டத்தில் தென்னிந்திய வர்த்தக உலகில் கோலோச்சிய யாக்கூப் ஹசன் அலி சேட் அவர்கள் வறுமையின் காரணமாகச் சி. அப்து ஹக்கிம் சாகிப் அவர்களின் நிறுவனத்தில் ஊதியதுக்குப் பணிபுரிய நேர்ந்த துரதிஷ்டவசமான நிலையே உருது பேசும் வர்த்தகர்களின் வீழ்ச்சிக்கு தகுந்த உதாரணமாகக் கொள்ளலாம்.

பெரும்பாலான தமிழ் முஸ்லிம் வர்த்தகர்கள் தங்களின் மார்க்கத்தையும், தங்கள் தொழிலையும் ஒன்றிணைக்காமல் வேறுபடுத்திப் பார்க்கும் கொள்கையினைக் கொண்டிருந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை எடுத்துக் கொண்டால், சென்னை மகானத்தில் முஸ்லிம்களே அங்கு வாழ்ந்த மாற்று மதத்தினரைவிட வர்த்தக உலகில் பெருமளவில் வியாபித்து இருந்தனர், முஸ்லிம் மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்த மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மேலும் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மீனவர்களாகவோ, படகோட்டிகளாகவோ, கடல் தொழில் புரிபவர்களாகவோ இருந்து வந்தனர்.

வட ஆற்காடு, சேலம், மற்றும் கோவை பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் விவசாயத் தொழில் மற்றும் சிறு வணிகம் செய்து வந்தனர், இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அயல் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர், குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், பர்மா, ஜாவா, சுமத்ரா மற்றும் சைகோன் போன்ற நாடுகளுடன் கடல் வணிகத் தொடர்பினை கொண்டிருந்தனர், இருப்பினும் தாம் ஈட்டிய வருவாயினை இந்த நாடுகளில் முதலீடு செய்வதைத் தவிர்த்து, தம் சொந்த நாட்டில் நிலங்கள் அல்லது கட்டிடங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்தனர், இதன் காரணமாக இந்தப் பகுதிகளில் வேளாண்மையில் நல்ல முண்னேற்றம் ஏற்பட்டது, இந்த நிலை பிறகு தஞ்சை மாவட்ட பகுதிகளும் தொடர்ந்தது, திருநெல்வேலியில் நிலத்தின் மதிப்பு மிகப்பெறும் ஏற்ற நிலை கண்டது. மேலும் இலங்கையுடனான கடல் வணிகத்தில் தமிழ் முஸ்லிம்கள் அசைக்க முடியாத சக்தியாக உயர்ந்தனர்.

மேலும் மேலப்பாளையத்தில் நெசவுத் தொழிலும், கயத்தாற்றில் பாய் முடையும் தொழிலும், திருநெல்வேலி பேட்டை பகுதி முஸ்லிம்கள் கொடிகட்டி பறந்தனர், இந்தத் தொழில்களில் முஸ்லிம் தொழிலாளர்களே பெரும்பாலும் கூலிக்குப் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகாவை உள்ளடக்கி ஏராளமான முஸ்லிம் கிராமங்கள் உருவாக்கப்பட்டது, இதே போலக் கடலோர பகுதியும், வர்த்தகத் துறைமுகமுமான நாகப்பட்டினம் மற்றும் பட்டுக்கோட்டை தாலுகாவை சார்ந்து பல முஸ்லிம் கிராமங்கள் உருவாக்கப்பட்டது, இந்தப் பகுதி முஸ்லிம்கள் தங்களின் வாழ்வாதாரம் தேடி, கடல் தொழில், சில்லறை, மொத்த வியாபாரம், பாய்முடையும் தொழில் மற்றும் பாக்கு உற்பத்தி தொழில்களில் ஈடுபட்டு வருவாய் ஈட்டி வந்தனர். திருச்சி பகுதியில் முஸ்லிம்கள் ஏராளமான பெட்டி கடைகள் அமைத்தும், ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டு வருவாய்த் தேடியதாக 1931 இல் எடுக்கப்பட்ட சர்வே மூலம் அறிய முடிகிறது. மேலும் அந்தக் காலகட்டத்தில் 13 % முஸ்லிம் மக்கள் மதராஸ் பட்டினத்தில் வாழ்ந்து வந்தனர், அவர்களில் பெரும்பாலானோர் உருது முஸ்லிம்கள் இவர்களில் ஆண்கள் மட்டும் 3 % அரசு மற்றும் இராணுவ பணிகளில் இருந்து வந்தனர், ஏணையோர் தையல் தொழில் மற்றும் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

வட ஆற்காடு மாவட்டத்தில் பீடி கட்டும் தொழில், தோல் பதப்படுத்தும் தொழில் சந்தையில் முஸ்லிம்கள் ஏகபோக உரிமையினைக் கொண்டிருந்தனர், முஸ்லிம் தொழிலாளர்கள் பீடி சுற்றும் பணியிலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்த்தோர் தோல் பதனிடும் பணியிலும் அமர்த்தப்பட்டனர். ஒரு புறம் முஸ்லிம்கள் பெரும் நிலக்கிழார்களாகவும், செல்வந்தர்களாகவும் வலம் வர, மறுபுறம் மீனவர்கள், பாய்முடைவோர், பெட்டிக்கடை வியாபாரிகள், நெசவாளிகள் என ஏற்றத்தாழ்வு நிலையைக் கொண்டிருந்தனர். எனினும் பிரிட்டிஷ் அரசாங்கத்தைப் பொறுத்தவரை செல்வந்த முஸ்லிம்களே மொத்த முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டனர். இததகைய பிரிவினை நிலையை அவர்கள் சார்ந்த இஸ்லாமிய மார்க்கமும் அது காட்டும் ஓரிறை கொள்கையும் ஒன்றிணைக்கும் பாலமாய் விளங்கியது. இதே போல இஸ்லாமிய கடமைகளில் ஒன்றான ஜக்காத் ( தானம்) கொடுப்பது, ஒருவர் ஈட்டிய வருவாயில் ஒரு பகுதியை ஏழை, எளியோருக்குத் தானம் வழங்குவது என்ற கடமை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்ற தாழ்வினை சரிப்படுத்தியது, , அவரின் ஈகை குணம் மட்டுமின்றி இறைவன் இட்ட கட்டளையை நிறைவேற்றுபவர் என்று கருதப்பட்டதால் இவ்வாறு ஜக்காத் வழங்குவோர் இஸ்லாமிய சமூகத்தில் மிக உயர்ந்தவராகக் கருதப்படுவார்

தமிழ் முஸ்லிம் புரதான இலக்கியமான பால்சந்த மாலையில் வள்ளல் தன்மையிலும், கொடை வழங்குவதிலும் முஸ்லிம் மன்னர்கள் பெரும் சிறப்புப் பெற்றவர்கள் எனக் குறிப்பிடுகிறது. வெகுவான இலக்கியங்களும், தயாள குனம், மற்றும் வள்ளல் தன்மை கொண்ட பல தமிழ் முஸ்லிம் பெருமக்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருப்பதை அறிய முடிகிறது, குறிப்பாகக் கீழக்கரையைச் சேர்ந்த லெப்பை நெய்னா மரைக்காயர், வள்ளல் மஹ்மூது நெய்னா மரைக்காயர், அபுல் காசிம் மரைக்காயர், செத்தும் கொடை கொடுத்த வள்ளல் சீதக்காதி மரைக்காயர், மற்றும் சிக்கந்தர் இராவுத்தர். இதில் கீழக்கரை சீதக்காதி மரைக்காயர் அவர்களின் புகழ் 17 ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியிலும் 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தென் நாடு முழுவதும் ஓங்கி ஒலித்த செய்தியினை வரலாறு மூலம் அறிய முடிகிறது.

மேலும் வள்ளல் சீதக்காதியின் வழித்தோன்றல்களான சுல்தான் செய்யது முகம்மது மரைக்காயர், மற்றும் “ஹபீப் அரசர்” என அழைக்கப்பட்ட வள்ளல் ஹபீப் முகம்மது மரைக்காயர் போன்றோரின் கொடை தன்மை மற்றும் வள்ளல் குனமும் பரவலாகப் புகழப்படுகிறது, ஹபீப் அரசரின் பொருளுதவியால் இராமநாதபுரம் கடற்பகுதிகளில் பல மசூதிகள் கட்டித் தரப்பட்டது, இவரின் சீரிய குனத்தை ஜவ்வாது புலவரின் காவியம் மூலம் அறியலாம்.

உருது முஸ்லிம்கள் மத்தியில் ஆற்காடு நாவாப் மிகப் பெரும் கொடை வள்ளலாகவும், சமூகச் செம்மலாகவும் அறியப்பட்டார், மேலும் பல மசூதிகள், தர்காக்கள், கல்வி நிறுவனங்கள், நூலகங்களுக்குக் காப்பாளராகவும் இருந்து வந்தார், தென்னகத்தின் புகழ்பெற்ற வாலாஜா மசூதி நவாபால் கட்டித்தரப்பட்டது.

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிகளில் மாறிய அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலில் தங்களின் சேவை மற்றும் பங்களிப்பின் காரணமாக மாகான அரசியலில் முஸ்லிம்கள் மீண்டும் முக்கியத்துவம் பெற தொடங்கினர். முக்கியமாகத் துருக்கி கலீஃபாவின் பிரதி நிதிகளாக அறியப்பட்ட பாஷா குடும்பத்தினர் , துருக்கி கலீஃபாவின் தலைமை பீடத்தை அங்கீகரித்த முஸ்லிம் மக்களின் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்களாக விளங்கினர். இந்தக் குடும்பத்தைச் சார்ந்தவரான கான் பகதூர் முகம்மது அப்துல் அஜீஸ் பாசா சாகிப் அந்த நாளில் புனித ஹஜ் கடைமையை நிறைவேற்றியதும் , அவரின் கொடைத் தண்மையும் முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் மரியாதையைப் பெற்றுத் தந்தது, மேலும் இன்னொரு குடும்ப உறுப்பினரான கான் பகதூர் குத்துஸ் பாசா சாகிப், மக்கள் நலனிலும், முஸ்லிம் மக்களின் முன்னேற்றத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார், பல கல்வி நிறுவனங்களுக்குக் காப்பாளராகவும், பல முஸ்லிம் அமைப்புகளில் உறுப்பினராகவும் இருந்து வந்தார். திருவல்லிக்கேணியில் அமைந்திருக்கும் குத்திஸியா மஸ்ஜித் இவரால் கட்டிமுடிக்கப்பட்டது. இவரைப் போல , தாவூது கான், கான் பகதூர் காதர் நவாஸ் கான் போன்ற உருது முஸ்லிம் செல்வந்தர்களும் சமூகத்திற்குச் சேவை செய்வதிலும், நிதி அளிப்பதிலும் பெரும் பங்கு கொண்டிருந்தனர். ஆண்மீக மற்றும் மார்க்க விசயத்தில் அறிஞரான யாக்கூப் ஹசன் சேட் அவர்கள் முஸ்லிம்களால் “ மௌலானா” என்று அழைக்கப்பட்டார்.

இவர்களைப் போலச் சேவை மனப்பான்மை மற்றும் சமூக அக்கரை கொண்ட செல்வந்தர்கள் தமிழ் முஸ்லிம் சமூகத்திலும் வியாபித்திருந்தனர், அவர்களில் சிலர்

1, மண்டபம் பி. ஆர். எம். காசிம் முகம்மது மரைக்காயர்

2, திருச்சி காஜா மியான் இராவுத்தர்

3, உத்தம பாளையம் ஹாஜி கருத்த இராவுத்தர்.

4, உத்தம பாளையம் எம். என் பீர் முகம்மது இராவுத்தர்.

5,குலசேகரப்பட்டினம் வாப்ப நெய்னா மரைக்காயர்

6, இராமநாதபுரம் ஜமால் முகைதீன் இராவுத்தர் மற்றும் ஜமால் முகம்மது இராவுத்தர்

7,மேலப்பாளையம் சேக் முகம்மது தரங்கனார்

8, வட ஆற்காடு நவாப் சி. அப்துல் ஹக்கீம் சாகிப்

9, காயல்பட்டினம் கான் பகதூர் சாஹுல் ஹமீது மரைக்காயர்

10, தஞ்சாவூர் கான் பகதூர் ஹமீது சுல்தான் மரைக்காயர்

இவர்களைப் போன்ற செல்வந்தர்கள் பல மசூதிகள், தர்ஹாக்கள், கல்வி ஸ்தாபனங்கள், நூலகம் போன்றவற்றை முஸ்லிம் மக்களுக்கு அமைத்து தந்திருக்கின்றனர். தங்களின் செல்வங்களை மக்கள் நலனுக்காக தானம் செய்தவர்கள், சமூக மேம்பாடு மற்றும் மார்க்க விசயங்களைக் குறித்த விழிப்புணர்வில் ஆர்வம் கொண்டிருந்தமையால் முஸ்லிம்கள் இவர்களைத் தங்களின் தலைவர்களாகவும், பிரதிநிதிகளாகவும் ஏற்றுக் கொண்டனர். இந்த செயல்கள் இஸ்லாத்தின் நெறிமுறையாக இருந்த காரணத்தால் 14 ஆம் நூற்றாண்டு முதலே முஸ்லிம் சமூகத்தியில் இது போன்றோர் தோன்றி மறைந்தனர். சேவை என்பது இஸ்லாமிய கொள்கையாக இருந்ததால் முஸ்லிம் சமூகத்தில் இருந்த ஏற்ற தாழ்வுகளுக்குப் பாலமாய் இருந்தும், சமூகத்தின் உட்பிரிவுகளை இனைத்தும், உருது, முஸ்லிம் வேறுபாட்டினை கலைந்தும் இருந்ததை அறிய முடிகிறது. இந்த உயரிய கொள்கையின் வாயிலான ஒற்றுமையே முஸ்லிம்களின் பொருளாதார, அரசியல் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திப் பெரும் எழுச்சியைக் கொடுத்தது என்றால் மிகையில்லை.

 

மஹ்மூது நெய்னா   http://keetru.com/index.php/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/28178-2-2
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.