காஷ்மீர் பள்ளி மாணவி கைது விவகாரம்: உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் - விளக்கம் கேட்டு மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவுமானபங்கபடுத்தப்பட்டதாக கூறப்படும் பள்ளி மாணவியை போலீஸார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்திருப்பதற்கு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் மாணவியை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.


ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ராணுவ வீரர் ஒருவர் பள்ளி மாணவியை மானபங்கப்படுத்தியதாக பரவிய தகவலால் கடந்த செவ்வாய்க் கிழமை முதல் அங்கு வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.


பள்ளி மாணவியை ராணுவ வீரர் மானபங்கப்படுத்த முயற்சிக்கவில்லை என்றும் உள்ளூரைச் சேர்ந்த சிலரே இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தி விட்டதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக பள்ளி சிறுமியின் வாக்குமூலம் அடங்கிய வீடியோ காட்சியும் ஊடகங்களில் வெளியாகி இருந்தன.


இந்நிலையில் அரசியல் சட்ட அமைப்புக்கு விரோதமாக மைனரான பள்ளி மாணவி, அவரது தந்தை மற்றும் அத்தை ஆகியோரை ஜம்மு காஷ்மீர் போலீஸார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்திருப்பதாக தாய் தாஜா பேகம் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார்.


இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘சட்டவிரோதமான முறையில் எனது மகள், கணவர் மற்றும் அவரது சகோதரியை போலீஸார் கைது செய்து வைத்துள்ளனர். தற்போது நடக்கும் பிரச்சினை காரணமாக அவர்களது உயிருக்கு போலீஸாரால் ஆபத்து ஏற்படுமோ என அச்சம் எழுந்துள்ளது. எனவே அவர்களை உடனடியாக விடுவிக்க நீதிமன்றம் உத்தர விட வேண்டும்’’ என கோரி யிருந்தார்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.ஹெச். அட்டார், ‘‘எந்த சட்டத்தின் கீழ் மைனரான பள்ளி மாணவியை போலீஸார் கைது செய்து வைத்துள்ளனர். இது தொடர்பாக ஹந்த்வாரா மாவட்ட எஸ்பி மற்றும் காவல் நிலைய பொறுப்பாளர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். தவிர கைது செய்யப்பட்ட மாணவியை ஹந்த்வாரா மாவட்ட நீதிபதி முன் ஆஜர்படுத்தி, அவரது உண்மையான வாக்குமூலம் பெற வேண்டும்’’ என உத்தரவிட்டார். அத்துடன் இவ்வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.


போலீஸார் அழுத்தம்


போலீஸார் கொடுத்த அழுத்தம் காரணமாக தனது மகள் உண்மையை மறைத்து ராணுவத்துக்கு ஆதரவாக ஊடகங் களில் தகவல் வெளியிட்டதாக பள்ளி மாணவியின் தாய் தாஜா பேகம் குற்றம்சாட்டியுள்ளார்.


இது குறித்து நேற்று அவர் கூறியதாவது:


எனது மகளுக்கு 16 வயது தான் ஆகிறது. காவல் நிலையத்தில் எனது மகளை தனியாக அழைத்துச் சென்று போலீஸார் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். அவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே ராணுவ வீரர் யாரும் தன்னை மானபங்கபடுத்தவில்லை என தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய என் மகள், இயற்கை உபாதை காரணமாக வழியில் பொது கழிப்பிடத்துக்கு சென்றுள்ளார். அப்போது ராணுவ வீரர் ஒருவர் பின் தொடர்ந்து சென்றதால், அதிர்ச்சி அடைந்த என் மகள் காப்பாற்றும்படி சத்தமிட்டுள்ளார். இதைக் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்ததால், அந்த ராணுவ வீரர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக பெற்றோரின் அனுமதி இல்லாமல் போலீஸார் என் மகளை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் எனது கணவர் மற்றும் அவரது சகோதரியையும் எந்த காரணமும் இல்லாமல் தடுப்பு காவலில் கைது செய்துள்ளனர். கடந்த 5 நாட்களாக அவர்கள் எப்படி இருக்கின்றனர் என்ற தகவலை கூட போலீஸார் தெரிவிக்கவில்லை. போதாகுறைக்கு எனது மகளின் முகத்தையும் ஊடகங்களில் காண் பித்து அவளது வாழ்க்கையை கேள்வி குறியாக்கிவிட்டனர்.


இவ்வாறு அவர் கூறினார்.Thanks To The Hindu

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.