நடைபாதை கோயில்களை அகற்றாதது ஏன்?- உச்ச நீதிமன்றம் கேள்வி



  சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்களை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக எழுப்பப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களை அப்புறப்படுத்தாதது ஏன்? என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இரு வாரங்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.


நாடு முழுவதும் சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்களை ஆக்கிரமித்து சட்டவிரோதமான முறையில் வழிபாட்டுத் தலங்கள், கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிடக் கோரியும் கடந்த 2006-ல் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.


இது தொடர்பாக அவ்வப்போது மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்து வந்தது. ஆனால் இதுவரை அதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் மாநில அரசுகள் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் அதற்கான பிரமாணப் பத்திரத்தையும் மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.


இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.கோபால கவுடா மற்றும் அருண் மிரஸ்ரா அடங்கிய அமர்வு முன் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றாமல் இருந்ததற்காக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.


மேலும், "மாநில அரசுகளின் இத்தகைய அலட்சிய மனப்பான்மையை நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது. சாலைகள் மற்றும் பொது இடங்களை ஆக்கிரமித்து எழுப்பப்பட்ட மத வழிபாட்டுத் தலங்கள், சட்டவிரோத கட்டிடங்களை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டும் அதை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


இந்த விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு கடைசி வாய்ப்பாக இரு வாரங்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றாததற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர். அத்துடன் வழக்கின் அடுத்த விசாரணையை வரும் மே மாதத்தின் 2-வது வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.