முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்.!முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர் தமிழில் முதன்முதலில் நாவல் எழுதிய முஸ்லிம் பெண் சித்தி ஜுனைதா பேகம். இஸ்லாம் ஆழமாக வேரோடிய நாகூரைச் சேர்ந்தவர் சித்தி ஜுனைதா பேகம். ‘சித்தி’ என்றால், உண்மையாளர் என்று அர்த்தம். நபிகள் நாயகத்தின் மகள்களுக்கு அந்தப் பெயர்கள் இருந்ததால், முஸ்லிம் பெண்களுக்கு சித்தி என்ற முன்பெயரை சேர்ப்பது வழக்கம். 

 

துணிச்சல் முயற்சி சிறு வயதிலேயே கணவரை இழந்துவிட்ட அவர், பதினாறு வயதில் எழுத ஆரம்பித்தார். சில ஆண்டுகளிலேயே நாவல் எனும் பெரும் படைப்பாக்க முயற்சியில் இறங்கியிருக்கிறார். இது எத்தனை துணிச்சலானது என்பதை, அவருடைய பின்னணியைத் தெரிந்துகொள்ளும்போது உணரலாம். 

 

அவர் படித்தது என்னவோ திண்ணைப் பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்பு வரைதான். நாவல் எழுதப்பட்ட காலம், அந்தக் காலத்தில் முஸ்லிம் பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் போன்றவற்றைக் கணக்கிலெடுத்துப் பார்க்கும்போது, சமூக எதிர்ப்பை மீறியே அவர் எழுதியிருக்கிறார் என்பது புரிகிறது. 

 

இன்றளவும் முஸ்லிம் பெண்கள் அதிக அளவில் எழுத வராமல் இருப்பதையும் இங்கே சேர்த்துப் பார்க்க வேண்டும். காதலா? கடமையா? அவர் எழுதி தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் முன்னுரையுடன் 1938-ம் ஆண்டு வெளியான ‘காதலா? கடமையா?’ நாவல் முழுக்க முழுக்கத் தமிழ்ப் பெயர்கள், தமிழ்ச் சூழலின் பின்னணியில் ஓர் இளவரசனின் காதலையும் சமூகக் கடமையையும் கதைக்களமாகக் கொண்டிருக்கிறது. 

 

பெண்களுடைய நிலை மாறவும் முன்னேறவும் வேண்டும் என்ற நோக்கம் நாவலில் அடியோட்டமாக வெளிப்படுகிறது. “காதலா? கடமையா? என்ற அபிநவ கதையைப் பார்த்தபோது எனக்கு மிக்க மகிழ்ச்சியும் வியப்பும் உண்டாயின.

 

மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண்மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பது, இந்நூலை எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகின்றது….’’ என்று நாவலுக்கான முன்னுரையில் உ.வே.சா. பாராட்டியுள்ளார். 

 

குடும்பப்பெண் கதை எழுதலாமா? உ.வே.சா. போன்ற தமிழ் அறிஞர்கள் பாராட்டினாலும், நாகூர் பெண்கள் ஜுனைதா பேகத்துக்கு அளித்த வரவேற்பு வித்தியாசமானது. நாவல் வெளிவந்த பிறகு வெள்ளைத் துப்பட்டி அணிந்த பெண்கள் கூட்டம் கூட்டமாக ஜுனைதா பேகத்தின் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். 

 

நல்ல குடும்பத்துப் பெண் ஒருவர் இப்படி கெட்டுப்போய் விட்டாரே என்று விசாரி்க்கும் நோக்கத்துடன் வந்திருக்கிறார்கள். “ஒரு முஸ்லிம் பெண் நாவல் எழுதுவதா?! அதுவும் காதல் என்ற சொல்லுடன்! எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும்?” என்று அவர்கள் கேட்டதாக, ஜுனைதா பேகமே தன்னிடம் கூறியதாக, அவருடைய தங்கை மகனான எழுத்தாளர் நாகூர் ரூமி கூறினார்.

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.