தேச தந்தை காந்திக்கு ! தேச துரோக வழக்கு !! - வரலாற்று பார்வை.சர்வாதிகாரிகள், பாசிஸவாதிகள் தங்களின் ஆட்சியை நிலைநாட்டிக் கொள்ள மக்கள் போரட்டத்தை ஒடுக்க, தேசியவாதிகளை நிலைகுலைய வைக்க , இந்த நாட்டை சுறண்டவந்த அந்நியர்கள் பயன்படுத்திய தேச துரோக வழக்கு சட்டத்தை இயற்றி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வில்லியம் பென்டிங் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்தபோது, இங்கிலாந்தில் இருந்து, இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் எழுத தாமஸ் பாபிங்டன் மெக்காலே வரவழைக்கப்பட்டார். பாரிஸ்டரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, அவர் 1832-ஆம் ஆண்டில் சென்னை வந்தார். அவர்தான் இந்தியாவின் முதல் சட்ட ஆணையத் தலைவர்.
இந்துக்களின் மனுஸ்மிருதி, இஸ்லாமியர்களின் ஷாரியத், இங்கிலாந்தில் நடைமுறையில் இருந்த பொதுச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் எழுதப்பட்டது. அந்தக் குற்றம் தண்டனைத் தொகுப்பில் தேசத் துரோகம் இருந்தது.
1837-ஆம் ஆண்டில் மெக்காலே தயாரித்த இந்திய முதல் சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் வெளியிடப்பட்டன. அதில் தேசத் துரோகம் இல்லை. அதன் பிரதான பிரிவாகிய 124ஏவும் இடம் பெறவில்லை. அவை அவசியமில்லையென்று அரசாங்கம் நீக்கிவிட்டிருந்தது.
1857-ஆம் ஆண்டில் இந்தியாவில் முதல் சுதந்திரப் போராட்டம் தொடங்கியது. ராணுவ சிப்பாய்கள், மன்னர்கள் அதில் கலந்து கொண்டார்கள். ஆங்கிலேயர்களால் அது அடக்கப்பட்டது.
பேச்சு, எழுத்து மூலமாக கிளர்ச்சி ஏற்படலாம் என்று கருதிய ஆங்கிலேய அரசு, அதனைத் தடுக்க தேசத் துரோக சட்டம், 124ஏ மற்றும் பல கடுமையான விதிகளை அமலுக்குக் கொண்டு வந்தது. இந்திய மொழிகளில் பத்திரிகை நடத்தக் கூடாது என்று தடையும் போடப்பட்டிருந்தது.
இருபதாண்டுகளுக்குப் பிறகு. ஆங்கிலய அரசு இந்திய மொழிகளில் பத்திரிகைகள் நடத்திக் கொள்ள அனுமதி கொடுத்தது. அதனால் வங்காளி, தமிழ், இந்தி, பஞ்சாபி, மராத்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் தேச பக்தர்கள் பத்திரிகைகளை வெளியிட ஆரம்பித்தார்கள். பத்திரிகைகள் ஆங்கிளையர்களை கடுமையாக விமர்சித்தன.
இங்கிலாந்து பத்திரிகைகளுக்கு இருந்த சுதந்திரம் இந்திய மொழிகள் பத்திரிகைகளுக்கு வழங்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா உள்ளிட்டோர் தேச துரோகமாகப் பேசினார்கள் என்று தண்டிக்கப்பட்டார்கள்.
"இந்தியா' இதழில் 1908, மே 4-இல் வெளிவந்த "மகாபாரதக் கதைகள்', மே 23-இல் வெளிவந்த "எத்தனையோ கொள்ளைகளில் இதுவும் ஒரு கொள்ளை', 1908 ஜூன் 27 தேதி வெளியான "ஏன் காலத்தை வீணாக்க வேண்டும்?' - மூன்று கட்டுரைகளும் தேசத் துரோகமாக இருக்கின்றன என்று தேசத் துரோக வழக்கின் 124ஏ பிரிவின் கீழ் சென்னை அரசாங்கம் வழக்குப் போட்டது.
"இந்தியா' ஆசிரியரான எம். சீனிவாசாச்சாரியார் கைது செய்யப்பட்டார். தேசத் துரோக வழக்கு போடப்பட்டது 5 ஆண்டு சிறை தண்டனைப் பெற்றார்.
இந்தியா கண்ட தேசத் துரோக வழக்குகளிலேயே அதி முக்கியமானது மகாத்மா காந்தி வழக்கு.
1922-ஆம் ஆண்டு, மார்ச் 18-ஆம் தேதி யங் இந்தியா பத்திரிகையில் ஆங்கிலத்தில் காந்தி எழுதிய கட்டுரைக்காக விசாரிக்கப்பட்டார். நீதிபதி புரூம்பீல்டு காந்தியிடம் தேச துரோக வழக்கை விவரித்துவிட்டு, "நீங்கள் குற்றவாளியா?' என்று கேட்டார்.
"சட்டம் குற்றவாளி என்றால் எனக்கு அதிகபட்சமான தண்டனை கொடுங்கள்' என்றார் காந்தி.
இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே குற்றம் சாட்டப்பட்டவர் அதிகபட்சமான தண்டனை கொடுங்கள் என்று ஒரு குற்றவாளி கேட்டது அதுதான். "நான் சந்தித்த மனிதர்களிலேயே நீங்கள் வித்தியாசமானவர். இரண்டு நாள்கள் கழித்து வந்து உங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்லுங்கள்,' என்று தீர்ப்பை ஒத்திவைத்தார்.
பிறகு நீதிமன்றம் வந்த காந்தி தேச பக்தி என்பது சட்டத்தால் உருவாக்கப்படுவது இல்லை. தேசத் துரோகச் சட்டம் மக்கள் சுதந்திரத்தைப் பறிக்கிறது. அதனை சகித்துக் கொள்ள முடியாது என்று நான்கு பக்கத்திற்கு எழுதி வந்ததைப் படித்தார். நீதிபதி காந்தியின் பிரசங்கத்தைக் கேட்டுவிட்டு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கினார்.
இதே பட்டியலில் இன்றும் தொடர்ந்துகொண்டுள்ளது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற போராடுபவர்களை அச்சுறுத்த தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது, மதுவுக்கு எதிராக பாடல் பாடிய கோவன்லிருந்து தொடங்கி மதுவுக்கு எதிராக மாநாடு நடத்தியவர்கள் முதல்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் தொடர்ந்து கொண்டு இருக்கிறது இந்த பட்டியல் .
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் தேசத் துரோகச் சட்டம், அதன் முக்கிய பிரிவாகிய 124ஏ -- எல்லாம் விலக்கிக் கொள்ளப்படும் என்று எதிர்பார்த்தார்கள். 1951-ஆம் ஆண்டில் பிரதமர் ஜவாஹர்லால் நேரு இந்தியாவிற்கு தேசத் துரோகச் சட்டம் தேவை இல்லை என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஆனால், தேசத் துரோகச் சட்டம் விலக்கிக் கொள்ளப்படவில்லை. மெக்காலே எழுதியபடி உயிர்ப்புடன் இருக்கிறது.
அன்று ஆங்கிலயன் அவனுக்கு எதிராக போராடியவர்கள் மீது பயன்படுத்திய அதே சட்டத்தை. இன்று காவிகளும் ஊழல் அரசியல்வாதிகளும் பயன்படுத்துகிறார்கள்

பல மத்திய மாநில அரசுகள் மக்களின் போராட்டங்களையும் எல்லாம் தேசத் துரோகத்தின் கீழ் கொண்டு வந்து விடுகின்றன. இந்திய இறையாண்மை குலைக்கப்படுகிறது, வன்முறை தூண்டிவிடப்படுகிறது, பொது அமைதி அழிக்கப்படுகிறது என்று காரணங்கள் சொல்லி தேசத் துரோகச் சட்டத்தின் 124ஏ பிரிவு தாராளமாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆட்சி புரிகிறவர்கள் எல்லாம் ஜனநாயகவாதிகள் இல்லை. பொதுமக்கள் உரிமைகள் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள் கிடையாது.
எனவேதான், அன்னிய நாட்டினர் விட்டுச் சென்ற தேசத் துரோகச் சட்டத்தைக் கொண்டு சொந்த நாட்டு மக்களை சிறையில் போட்டு வதைக்கிறார்கள்.

 
     Thanks To    FB ID : Raj Mohamed
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.