மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்ததற்கு கடும் எதிர்ப்பு: தேமுதிக உடைந்தது...மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்ததற்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது; 5 எம்எல்ஏக்கள், 10 மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி தூக்கி, கட்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து தேமுதிக உடைந்தது. தேர்தல் நேரத்தில் கட்சி உடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவை தோற்கடிக்க எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று விஜயகாந்த் கூறி வந்த நிலையில், திடீரென்று மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக சேர்ந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடசென்னை, கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர்கள் திமுகவில் சேர்ந்தனர். இந்தநிலையில், 5 எம்எல்ஏக்கள், 10 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் திடீரென்று விஜயகாந்த்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அதில், தேமுதிகவின் கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் உட்பட 3 எம்எல்ஏக்கள், 7 மாவட்ட செயலாளர்கள், 3 மாநில நிர்வாகிகள் விஜயகாந்த்தின் முடிவுக்கு எதிராக நேற்று பரபரப்பு பேட்டியளித்தனர். அதில், தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் எம்எல்ஏ நேற்று அளித்த பேட்டி:
எங்கள் தலைவர் விஜயகாந்த், பல மாநாடு, பொதுக்கூட்டங்களில் பேசும்போது, ஜெயலலிதாவை அகற்ற எந்த தியாகத்தை செய்ய தயாராக இருப்பதாகவும் சொன்னார். இப்படி ஒவ்வொரு முறையும் எங்களிடம் இப்படி வாக்குறுதிகளை கொடுத்து விட்டு கடந்த 10ம் தேதி திடீரென்று சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவித்தார்.

[gallery columns="1" size="full" ids="34736" orderby="rand"]

யாருக்கும் தெரியாமல்: அடுத்த நாள் அவரை அணுகியபோது நான் பேசுகிறேன் என்று சொன்னார். திடீரென்று 23ம் தேதி யாருக்குமே தெரியாமல் மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி என்று அறிவித்தார். நான் கேட்க விரும்புவது தேமுதிக செயற்குழு, பொதுக்குழு நடந்தது. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. விருப்பமனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடந்தது. அத்தனையிலும் கிட்டத்தட்ட 95 சதவீதம் பேர் ஜெயலிதாவை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டுமென்றால் திமுகவில் தான் தேமுதிக கூட்டணி வைக்க வேண்டும் என்று ெசான்னார்கள். நேர்காணலில் எங்களிடம், திமுகவுடன் பேசுகிறேன். இவ்வளவு சீட் கொடுக்கிறார்கள் ஓகே வா... என்று கேட்டு விட்டு கடைசி நேரத்தில் தேமுதிக ெதாண்டர்கள், நிர்வாகிகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனநிலையை மறத்து விட்டு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதை எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. நான் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த தொண்டர்களும் என்னிடத்தில் குமுறுகிறார்கள். தமிழகத்தில் அச்சம்: தமிழகத்தில் இன்றைக்கு மீண்டும் ஜெ ஆட்சிக்கு வந்து விடுவாரே என்று மக்கள் எல்லாம் பேசும் அளவுக்கு விஜயகாந்த் முடிவு அமைந்திருக்கிறது. தலைவர் என்பவர் எடுக்கும் முடிவை அனைத்து தொண்டர்களும் கட்டுக்கோப்போடு ஏற்று கொள்ள வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனாலும், அந்த முடிவை எடுக்கின்ற தலைவர் தொண்டர்கள் எதை விரும்புகிறார்களோ? அந்த முடிவை எடுக்க வேண்டும் என்று தான் நாங்கள் கேட்கிறோம்.

நல்ல முடிவை எடுக்கிறேன், எடுக்கிறேன் என்று சொல்லி விட்டு மக்கள் நலக்கூட்டணியோடு கூட்டணி சோந்தால் எவ்வளவு ஒட்டு பெற முடியும் என்று கேட்ட தலைவர், இன்று அவர்களுடன் சேர்ந்து கூட்டணி அமைத்திருக்கிறார் என்று சொன்னால் அதற்கு என்ன காரணம் என்று எங்களுக்கு ெதரியவில்லை. அதை தான் நாங்கள் கேட்கிறோம். நாங்கள் என்ன செய்து விட்டோம். இந்த 5 ஆண்டு காலம் எம்எல்ஏக்களாக இருந்தவர்கள் விசுவாசமாக இல்லையாயா?. எங்களுடைய விசுவாசத்தை பற்றி அவருக்கு தெரிந்திருக்கும். நாங்கள் விலகவில்ைல: தமிழ்நாட்டில் உள்ள தேமுதிக மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் என்று அனைவரும் போன் செய்து ‘பூனைக்கு யாராவது மணிக்கட்டுங்கள்’ நீங்கள் எல்லாம் கூட இருந்து இப்படி பண்ணலாமா என்று கூறி, அவர்களுடையே துன்பத்தையும் கூறி கதறி அழுகின்றனர். இந்த மாதிரி நிலையில் தலைவரிடம் பேச மீண்டும் முயற்சி எடுத்தோம். ஆனால், அவர் பேசுவதற்கு தயாராக இல்லை. அதன் பிறகு தான் இன்றைக்கு உங்களை சந்தித்திருக்கிறோம். எங்களுைடய கடிதத்தை நாங்கள் கொடுத்திருக்கிறோம். முதலில் நாங்கள் சொல்கிறோம். தேமுதிகவில் இருந்து நாங்கள் யாரும் விலகவிலை.

தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான் முக்கியம். 2011ம் ஆண்டு ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தோம். ஏன் அன்று ஜெயலலிதா மீது ெசாத்து குவிப்பு வழக்கு இல்லையா?. அதை எல்லாம் தெரிந்து தான் வந்தோம். அன்றைக்கு அனைத்து தொண்டர்களும், ஒட்டு மொத்த தமிழக மக்களும் விரும்பினார்கள். அதே போன்று தற்போது திமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். மேலும் சிலர்: விஜயகாந்த் சட்டப்பேரவைக்கு செல்லாதநிலையில், தொடர்ந்து எம்எல்ஏக்களுடன் அதிமுக அரசுக்கு எதிராக கடுமையாக மோதலில் ஈடுபட்டு வந்தவர் சந்திரகுமார். கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருக்கிறார். இவரது தலைமையில் தேமுதிகவினர் போர்க்கொடி தூக்கியிருப்பது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு மேலும் 2 எம்எல்ஏக்கள், 3 மாவட்டச் செயலாளர்கள் வர இருந்ததாகவும் அவர்கள் தாமதமானதால் வரமுடியவில்லை. தங்களுடன் மேலும் பலர் தொடர்பு கொண்டு வருகின்றனர் என்றும் போர்க்கொடி தூக்கியவர்கள் கூறியுள்ளனர். சந்திரகுமார் பேட்டி வெளியான சில நிமிடங்களில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அதிரடியாக இவர்கள் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கி அறிவித்தார். ஆனால் தங்களிடம் விளக்கம் கேட்காமல் கட்சியில் இருந்து நீக்க முடியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளது மேலும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இதனால் கட்சி உடைந்தது வெளிப்படையாக உள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த சூழ்நிலையால், விஜயகாந்த் அணியில் திடீர் கலக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சந்திரகுமார் எம்எல்ஏவுக்கு ஆதரவு தெரிவித்து உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் தேமுதிகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதே போல் தமிழகத்தின் பல பகுதிகளில் தேமுதிகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். சில இடங்களில் சந்திரகுமாரின் உருவ பொம்மையை தேமுதிகவினர் எரித்தனர்.

‘24ம் தேதியே எதிர்த்து கடிதம் கொடுத்தோம்’
நிருபர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு சந்திரகுமார் அளித்த பதிலும் வருமாறு: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேமுதிக அதுவாகவே கரைந்து விடும் என்று கூறினார். அவர் பேட்டி கொடுத்தவுடன் இது போன்ற பிளவு ஏற்பட்டுள்ளதே? தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் நாங்கள் நேற்று எங்களுடைய கடிதத்தை கொடுக்கவில்லை. கடந்த 24ம் தேதி கேப்டனிடம் எல்லாரும் கையெழுத்து போட்ட கடிதத்தை கொடுத்திருக்கிறோம். மு.க.ஸ்டாலின் நிலைப்பாடு அதுவாக இருக்கலாம். அவர் எந்த அடிப்படையில் சொன்னார் என்று எங்களுக்கு தெரியவில்லை. உங்களுடைய மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். அப்படி இருக்கும் போது அந்த கட்சியில் கூட்டணி வைக்க முடியுமா?. இதே போன்று பாஜவில் எங்களுடைய கட்சி நிர்வாகிகள் சேர்ந்த பிறகு தான் பாஜவுடன் நாங்கள் கூட்டணி அமைத்தோம். திமுக கூட்டணிக்கு வருமாறு தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே? நீங்கள் நடந்ததாக சொல்கிறீர்களே?

பேச்சுவார்த்தை நடந்ததாக எங்களுடைய தலைவர் தான் சொன்னார். அதைத் தான் நானும் சொல்கிேறன். மாவட்ட செயலாளர்களிடம் 100 கோடி வரை விஜயகாந்த் வாங்கி வைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?.இது குறித்து இப்போது பேச விரும்பவில்லை. நாளை இது குறித்து பேசுகிறேன்.
மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தது பிரேமலதா, சுதீஷ் தனிப்பட்ட முடிவா?அவர்கள் வீட்டிலேயே எடுக்கப்பட்ட முடிவு. இதற்கு மேல் என்ன சொல்வது. கட்சி என்பது நிர்வாகிகள், தொண்டர்கள், தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக தான் இருக்க வேண்டும். இன்றைக்கு ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது தான் மக்களின் மனநிலையாக இருக்கிறது. அந்த நிலைக்கு அவர் போகவில்லை. பேட்டியின் போது திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.எச்.சேகர் எம்எல்ஏ, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.பார்த்தீபன் எம்எல்ஏ, தேமுதிக துணை செயலாளர் பி.முருகேசன், உயர்மட்ட குழு உறுப்பினர் கே.ஆர்.வீரப்பன், வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் என்.கார்த்திகேயன், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் இமயம் என்.எஸ்.சிவகுமார், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளார் பி.செந்தில்குமார், விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செஞ்சி சிவா ஆகியோர் உடன் இருந்தனர்.

கட்சியில் இருந்து நீக்கம் விஜயகாந்த் அறிவிப்பு
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தேமுதிக கொள்கைபரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் உட்பட கட்சிக்கு எதிராக செயல்பட்ட அனைவரும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் இன்று (நேற்று) முதல் நீக்கப்படுகிறார்கள். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன், தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எவரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கட்சி பொறுப்பாளராக ஏ.வி.ஆறுமுகம் (மாவட்ட அவைத்தலைவர்), திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக பாபு முருகவேல் எம்.எல்.ஏ, வேலூர் மத்திய மாவட்ட பொறுப்பாளராக தர் (முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர்), சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பி.ஆனந்தபாபு ( மாணவரணி துணைச்செயலாளர்), ஈரோடு வடக்கு மாவட்ட பொறுப்பாளராக பி.கே.சுப்பிரமணி (நெசவாளர் அணி செயலாளர்), ஈரோடு தெற்கு மாவட்ட பொறுப்பாளராக பா.கோபால் (மாவட்ட துணைச்செயலாளர்) ஆகியோர் இன்று (05.04.2016) முதல் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு அந்தந்த மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, கிளை, நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.