கண்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பணம்: 18 மணி நேரத்திற்கு பின் வங்கி உரிமை கோரியது ஏன்? - கருணாநிதி கேள்விதிருப்பூர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பணம் சிக்கிய விவகாரத்தில், 18 மணி நேரத்திற்கு பின் வங்கி உரிமை கோரியது ஏன்? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி–பதில் வருமாறு:–

கேள்வி: திருப்பூர் அருகே மூன்று கன்டெய்னர்களில் கடத்தப்பட்ட 570 கோடி ரூபாயை தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை பறிமுதல் செய்திருக்கிறதே?

பதில்: சிறுதாவூர் அரண்மனையில் இருந்த கன்டெய்னர்கள் பற்றி கடந்த மாதமே எல்லா ஏடுகளிலும் புகைப்படத்துடன் செய்தி வந்தது. ஆனால் மாவட்ட ஆட்சியரும், காவல் துறை கண்காணிப்பாளரும் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை அனுப்பியதாகவும், அதன்படி கன்டெய்னர் சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றும் அறிவித்து, தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்போடு உண்மையை மூடிப் புதைத்து விட்டார்கள். மாவட்ட ஆட்சியரோ, காவல் துறை கண்காணிப்பாளரோ சோதனையிடவே செல்லவில்லை என்பது தான் பிறகு வெளிச்சத்திற்கு வந்த செய்தி.

அதற்குப் பிறகு கரூர் அருகில் நத்தம் விசுவநாதன் மற்றும் இரண்டு மூன்று அமைச்சர்களின் நெருங்கிய நண்பர் அன்புநாதன் பற்றியும், அவர் வீட்டில் நடந்த சோதனை பற்றியும் பக்கம் பக்கமாகச் செய்திகள் வந்தன. அன்புநாதன் வீட்டிற்கு எந்தெந்த அமைச்சர்கள் வந்தார்கள், சட்ட விரோதமாக என்னென்ன சம்பவங்கள் அங்கே நடைபெற்றன என்பது பற்றியெல்லாம் அவர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த புகைப்பட காமராவைப் பார்த்தால் எல்லாம் வெளி உலகத்திற்குப் பட்டவர்த்தனமாகத் தெரிந்துவிடும் என்று சொல்லப்பட்டது.

பிறகு பறிமுதல் செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட அந்தக் காமரா என்னவாயிற்று என்றோ, அந்த சோதனையின் விளைவு என்ன என்றோ எந்த விபரமும் தெரியவில்லை. அந்த அன்புநாதன் பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து, மதுரை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுக் கொண்டு மேற்கொண்டு ஆக வேண்டிய காரியங்களை முடிக்க எங்கோ போய்விட்டார்.

தற்போது திருப்பூர் அருகே 570 கோடி ரூபாய் மூன்று கன்டெய்னர்களில் கொண்டு போனது பிடிபட்டுள்ளது. இவ்வளவு அதிகமான தொகைக்குச் சொந்தக்காரர் தமிழ்நாட்டிலே யார்? இதுவும் கன்டெய்னர்களில் தான் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அதுவும் நள்ளிரவு 12.30 மணிக்கு திருப்பூர் வடக்கு தொகுதி தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழு அலுவலர் விஜயகுமார், சப்இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் உள்ளிட்ட பறக்கும் படையினர் துணை ராணுவத்தினருடன் பெருமாநல்லூர்குன்னத்தூர் செல்லும் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தான் இந்த மூன்று கன்டெய்னர்களும் வந்திருக்கின்றன. அதைப் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்த முயன்ற போது, நிற்கவில்லை. இருந்தாலும் அந்த வண்டிகளை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்துள்ளார்கள். திருப்பூர் மாவட்ட ஆட்சியரும், காவல் துறை கண்காணிப்பாளரும் சென்று விசாரித்த போது விஜயவாடாவில் உள்ள ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா வங்கிக்கு, 570 கோடி ரூபாயைக் கொண்டு செல்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

இவ்வளவு பெரும் தொகை எங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது? 570 கோடி ரூபாயை, மூன்று கண்டெய்னரில் கொண்டு செல்லக்கூடிய அளவுக்கு உள்ள மிகப் பெருந்தொகையை எந்த ஒரு வங்கியிலாவது வைத்திருக்க முடியுமா? 570 கோடி ரூபாய் பணத்தை எடுத்துச் செல்ல மூன்று கன்டெய்னர்கள் தேவைப்படுமா? மூன்று கன்டெய்னர்களிலும் இருந்த பணம் முறையாக, அதிகாரம் பெற்ற அலுவலரால் எண்ணப்பட்டதா? ஒரு வங்கியிலே எவ்வளவு பணத்தை ஒரு நேரத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று உச்ச வரம்பு விதி இருக்கிறதா இல்லையா? ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு இவ்வளவு பெரும் தொகையை எடுத்துச் செல்ல என்ன காரணம்? அந்த வண்டியிலே எந்த உரிய ஆவணங்களும் இல்லையே? ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்குக் கொண்டு செல்லப்பட்ட பணம் என்றால், பறக்கும் படையினர் வண்டியை நிறுத்த முயன்ற போது நிற்காமல் சென்றதற்கு என்ன காரணம்? தவறான வழிகளில் சேர்ந்த பணம் என்பதால் தானே கன்டெய்னர்களை நிறுத்தாமல் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

வண்டியில் ஏதோ ஜெராக்ஸ் நகல்களை மட்டும் காட்டினார்களாம். அந்த நகல்களிலும் முரண்பாடான தகவல்கள் உள்ளனவே. உண்மை நகல்கள் எங்கே? இவ்வளவு பணம் எடுத்துச் சென்றால் அது உண்மையான நேர்மையான நோக்கத்திற்கான பணமாக இருந்தால், இன்சூரன்ஸ் செய்திருக்க வேண்டும். அப்படி எந்த இன்சூரன்ஸ் ஆவணங்களும் இல்லையாம். ரிசர்வ் வங்கி விதி முறைப்படி ஒரு கோடி ரூபாய் கொண்டு சென்றால், அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பாதுகாப்போடு செல்ல வேண்டுமென்றும், 5 கோடி ரூபாய் கொண்டு சென்றால், அதற்கு எவ்வளவு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதற்கு விதிமுறைகள் உள்ளன.

அப்படி இருக்கும் போது 570 கோடி ரூபாயைக் கொண்டு சென்ற போது, லுங்கி அணிந்த காவல் துறையினரை எப்படி அழைத்துச் சென்றார்கள்? ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு இவ்வளவு பணத்தை அனுப்புவது என்றால், அந்தப் பணத்திற்கும், கன்டெய்னருக்கும் “சீல்” வைக்கப்பட்டிருக்க வேண்டுமே? அப்படி எதுவும் வைக்கப்படவில்லையே? இந்தப் பணத்தை பகலில் அல்லாமல் இரவில் எடுத்துச் செல்ல என்ன காரணம்? இவ்வளவு பெரிய தொகையை விடுமுறை நாளான சனிக்கிழமை அன்று எடுத்துச் சென்றதற்கு என்ன காரணம்? எந்த வங்கியிலிருந்து பணம் எடுத்துச் செல்லப்படுகிறதோ அந்த வங்கியின் அங்கீகாரம் பெற்ற அலுவலர் ஒருவர் கன்டெய்னருடன் செல்ல வேண்டாமா? திருப்பூரில் பணம் பிடிபட்டு 18 மணி நேரம் கழித்தே, கோவை வங்கி அதிகாரிகள் பணத்திற்கு உரிமை கோருகிறார்கள் என்றால், அபரிமிதமான இந்தத் தாமதத்திற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய பணம் கடத்தப்பட்ட போது உண்மையான விவரங்கள் என்ன என்பது பற்றி இதுவரை தமிழகத்திலே அரசின் சார்பில் யாரும் எந்த விவரமும் தெரிவிக்காமல் இருப்பதில் இருந்தே முறையான வழியில் வந்த நேர்மையான பணம் அல்ல என்பது உறுதியாகிறது அல்லவா? தமிழகத்திலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக, மத்திய அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் தலையிட்டதால் தான், வங்கி அதிகாரிகள் பணத்திற்கு உரிமை கோர 18 மணி நேரம் கழித்து முடிவு செய்தார்கள் என்று வங்கி அதிகாரிகள் மூலம் கசிந்த தகவல் பொது மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறதே; இதற்குச் சம்பந்தப்பட்டவர்கள் என்ன விளக்கம் தரப்போகிறார்கள்? இதற்குப் பிறகும் அரசினர் என்ன சொல்கிறார்கள் என்று தமிழக மக்கள் ஆவலோடும், பரபரப்போடும் எதிர்பார்க்கிறார்கள்!

கே: மின்வாரியத்தில் நிலக்கரி வாங்கியதில் ஊழல், சூரிய ஒளி மின்சாரம் வாங்கியதில் ஊழல் என்று நீங்கள் அடுக்கடுக்காக சாட்டிய குற்றச்சாட்டு எதற்கும் முதலமைச்சர் ஜெயலலிதா எந்தப் பதிலும் சொல்லவில்லையே?

ப: முதலமைச்சர் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான பதிலும் சொல்லாமல் இருப்பதிலிருந்தே உண்மை புரியவில்லையா? ஜெயலலிதா, மற்றவர்களைப் பார்த்துக் கேள்விகள் மட்டுமே கேட்பார்; யாருக்கும் பதில் சொல்லி அவருக்குப் பழக்கம் இல்லை! தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் நாகல்சாமி அவர்களே, “ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு விதிகளை மீறி, சூரிய ஒளி மின்சாரம் கொள்முதல் செய்ய அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாலும், மத்திய அரசு வழிகாட்டுதல்களை மீறியும், விதிகளுக்கு எதிராகவும் 11 தனியார் நிறுவனங்களுடன் 15 ஆண்டுகளுக்கு மின்சாரக் கொள்முதலுக்கான ஒப்பந்தம் செய்து, அதனை வாங்க ஆரம்பித்ததாலும், தமிழக மின்வாரியத்துக்கு ரூ. 52 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்” என்று பல்வேறு தகவல்களை ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டியிருக்கிறார். ஆனால் அவருடைய நேரடிக் குற்றச்சாட்டுகளுக்கோ, என்னுடைய குற்றச்சாட்டுகளுக்கோ அந்தத் துறையின் அமைச்சர் குறிப்பாக எந்தவிதமான பதிலும் அளிக்காமல், ஏதோ தி.மு.கழக ஆட்சியில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது என்றெல்லாம் தன்னுடைய அறிக்கையில் பொத்தாம் பொதுவில் சொல்லியிருக்கிறார். தி.மு.கழக ஆட்சியில் தவறு நடைபெற்றது என்றால், அப்போதே இவரும், இவருடைய தலைவியும் கேள்வி கேட்டிருக்க வேண்டியது தானே? அ.தி.மு.க. ஆட்சியில் இப்போது நடைபெற்றிருக்கும் தவறுக்கு என்ன பதில் என்றால், அதற்கு நேரடியாக விளக்கம் சொல்லாமல் அப்போது நடக்க வில்லையா என்பதா பதில்?

இன்னும் சொல்லப் போனால் கடந்த ஐந்தாண்டுகளில் மின்சாரத் துறையில் நடைபெற்ற ஊழல்கள் பற்றிய ஆவணங்களையெல்லாம், அப்புறப்படுத்தி அழிப்பதற்கான காரியங்களும் நடைபெறுவதாகத் தகவல்கள் வந்து கொண்டுள்ளன. இதற்கெல்லாம் வருங்காலத்தில் முறையான விசாரணை நடைபெறும்போது, தற்போது நடைபெற்ற தவறுகளுக்கும் முறைகேடுகளுக்கும் காரணமானவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

கே: ஜெயலலிதா பிரச்சார கூட்டங்களில், மத்திய அரசு அ.தி.மு.க. அரசை மிகவும் பாராட்டியதாகச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்கிறாரே?

ப: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, வெள்ளப் பாதிப்பின் போது, அ.தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கையை மத்தியக் குழுவே பாராட்டியது என்று பெருமைப்பட்டுக் கொண்டது உண்மை தான். ஆனால் செம்பரம்பாக்கம் வெள்ள நிவாரண நிதிக்காக மத்திய அரசு கொடுத்த 2000 கோடி ரூபாயில் 600 கோடி ரூபாயை மட்டுமே செலவழித்துவிட்டு, மீதியை ஜெயலலிதா அரசு கொள்ளையடித்து விட்டது என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள், அ.தி.மு.க. அரசின் ஊழல்கொள்ளைகள் குறித்து சென்னை மாநகரில் பேசி, ஏடுகளில் எல்லாம் வெளி வந்ததே, அதற்குப் பெயர் தான் பாராட்டா? இதே அமைச்சர் ஏற்கனவே தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்றுவதைப் பற்றிப் பேசுவதற்காகத் தொடர்ச்சியாக நூறு தடவைக்கு மேல் முயற்சி செய்தும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்கவே இயலவில்லை என்று செயல்படாத முதலமைச்சர் என மறைமுகமாகக் கூறியது தான் ஜெயலலிதாவுக்கு வழங்கிய பாராட்டா? அதன்பிறகு, மத்திய அமைச்சர் ஜவடேகர் அவர்கள் மின் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவாகவே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது; மக்கள் நலனில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அக்கறை இல்லை என்றெல்லாம் நேரடியாகவே குற்றம் சாட்டினாரே, அது அ.தி.மு.க. அரசுக்கு அளிக்கப்பட்ட பாராட்டா?

அதே அமைச்சர் ஜவடேகர், மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பாக 7 மாநிலங்களிடம் அறிக்கை கேட்டதாகவும், ஆறு மாநிலங்கள் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியதாகவும், தமிழக அரசு மட்டும் எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை என்றும் அதிமுக அரசின் செயலின்மை பற்றிக் கூறினாரே, அது தான் தமிழக அரசுக்கு மத்திய அரசு அளித்த பாராட்டா?

மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் ஒரு முறை மத்திய அரசு குறைந்த விலையில் எல்.இ.டி. பல்புகளை மாநிலங்களுக்கு வழங்க முன் வந்த போதிலும், அதை வாங்க மறுத்து அதிக விலை கொடுத்து தனியாரிடம் அந்த எல்.இ.டி. பல்புகளை வாங்கியதாக ஊழல் குற்றஞ்சாட்டினாரே, அதற்குப் பெயர் தான் மத்திய அரசு வழங்கிய பாராட்டா? வெட்கித் தலைகுனிய வேண்டிய குற்றச்சாட்டுகளைப் பாராட்டாக எடுத்துக் கொண்டு பரவசப்பட்டால், அதை விடப் பைத்தியக்காரத்தனம் வேறேதும் உண்டா?

கே: நாளை வாக்குப்பதிவு. உடன்பிறப்புகளுக்கு என்ன கூறுகிறீர்கள்?

ப: இது கவனமாகக் காரியம் ஆற்றும் நேரம். தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வேளை. ஜனநாயகத்தையும், மக்கள் நலனையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு! வாக்களிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. உரிமை. அனைவரும் வாக்குச் சாவடிக்குச் சென்று தங்களுடைய உரிமையை நிலைநாட்டுவதற்கு உறுதுணையாக இருப்பது ஒவ்வொரு உடன்பிறப்பின் பணி! தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்; கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காக்க வேண்டும். இதுவே எனது வேண்டுகோள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.