ஆறாவது முறையாக தமிழக முதலமைச்சரானார். ஜெயலலிதா: "100 யூனிட் மின்சாரம் இலவசம்"ஜெயலலிதா முதல்வராக பதவி பிரமாண உறுதி மொழி மற்றும் ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்து கொண்டு ஆறாவது முறையாக தமிழக முதலமைச்சரானார்.

தலைமை செயலகத்தில் ஜெயலலிதா*

தலைமை செயலகம் வந்தடைந்த ஜெயலலிதா 5 அரசு கோப்புகளில் கையெழுத்திட்டார்

பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார் - ஜெயலலிதா


*விவசாய பயிர் கடன் தள்ளுபடி*

விவசாய பயிர்க்கடனை தள்ளுபடி செய்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

*100 யூனிட் மின்சாரம் இலவசம்*

100 யூனிட் வரை மின் கட்டணம் ரத்து என்ற உத்தரவில் கையெழுத்திட்டார்

*டாஸ்மாக் நேரம் குறைப்பு*

டாஸ்மாக் கடைகள் இனி பகல் 12 மணிக்கு மேல் திறக்கப்படும்

தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடவும் ஜெயலலிதா உத்தரவு


தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக ஆறாவது முறையாக இன்று பதவி ஏற்றுக்கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலிதா, தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலகமான செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்று ஐந்து முக்கிய உத்தரவுகளில் கையொப்பமிட்டார்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆறாவது முறையாக இன்று (23.5.2016) பதவியேற்றுக்கொண்ட செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச்செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறைக்கு வருகை தந்து தமது பணியைத் தொடங்கினார்.

தனது முதல் பணியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்புகளில் முதலமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா ஆணை பிறப்பித்து முதல் கையொப்பமிட்ட கோப்புகள் பின்வருமாறு-

1) வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் வகையில், கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்தவேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக்கடன் மற்றும் நீண்ட காலக்கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்னும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளிடமிருந்து 31.3.2016 வரை சிறு, குறு விவசாயிகளால் பெறப்பட்ட பயிர்க்கடன், நடுத்தரகாலக் கடன் மற்றும் நீண்டகாலக் கடன் ஆகிய அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிடும் கோப்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் கையொப்பமிட்டார்கள். இதன் காரணமாக அரசுக்கு 5780 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

2) மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அதற்கான கோப்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் கையெழுத்திட்டார்கள். இதன் காரணமாக அரசு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 1607 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கும். இந்தச் சலுகை 23.5.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

3) 2011-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி இளநிலைப்பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக 50000 ரூபாயும் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண நிதி உதவியாக 25000 ரூபாய் நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.

தற்போதைய தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி அனைத்து திருமண நிதி உதவி திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கென வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதிலிருந்து ஒரு சவரன் அதாவது 8 கிராம் என உயர்த்தி வழங்கும் கோப்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் கையொப்பமிட்டார்கள்.

4) தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரத்தை 200 யூனிட்கள் எனவும் விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரத்தை 750 யூனிட்டுகளாக உயர்த்தியும் வழங்கும் கோப்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் கையொப்பமிட்டார்கள்.

5) மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும் என்றும், அதனை நிறைவேற்றும் வகையில் முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும் என்றும், கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும், பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும் என்றும் குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் இலட்சியம் அடையப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் இதுவரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கிவரும் நிலையில் 24.5.2016 முதல் சில்லறை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் பார்கள் நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என்ற உத்தரவு, மற்றும் 500 டாஸ்மாக் சில்லறை மதுபானக்கடைகள் மூடப்படும் என்ற உத்தரவு, ஆகியவற்றுக்கான கோப்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் கையொப்பமிட்டார்கள்.

மக்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி அதன் மூலம் மக்களுக்கு தாம் நன்றி செலுத்த உள்ளதாக தெரிவித்ததை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றவுடன் மேற்காணும் திட்டங்களை செயல்படுத்த ஆணையிட்டு அதற்கான கோப்புகளில் தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா கையொப்பமிட்டுள்ளார்.

மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Thanks To: Malaimalar
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.