மண்ணறையை உயர்த்திக் கட்டுவது இஸ்லாமியர்களின் ஈமானுக்கு பங்கம் விளைவிக்குமா?பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இஸ்லாம் ஓரிறைக் கொள்கையைக் கொண்டதொரு மார்க்கம். இறைவனுக்கு ஈடாகும் அனைத்தும் இணை வைப்பு என்பதை வெளிப்படையாக எச்சரிக்கை செய்து மக்களை ஒரே இறைவனை சொல், செயல், எண்ணம், நடைமுறை அனைத்திலும் உண்மைப்படுத்தி வணங்க வேண்டும் என பணித்த மார்க்கம். இதில் வணக்கத்தில் இறைவன் அல்லாத எவரையும் ஒப்பாக்குவதை புறக்கணித்து எச்சரிக்கை செய்து சரியான தெளிவான சட்டதிட்டங்களை நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் போன்றவற்றால் தெளிவுபடுத்தி மறுமையின் பரீட்சைக்கு இவ்வுலகத்திலே விடை வழங்கிய ஒரு மார்க்கம் இஸ்லாம் எனில் மிகையாகாது.

இவ்வகையில் மேற்குறித்த ஓரிறைக் கோட்பாட்டுக்கு மாற்றமான அனைத்து இணைவைப்பும் இறை நிகாரிப்பு என்பதில் சந்தேகமில்லை. இன்று அதிகளவில் இவ்விணை வைப்பு வேறு வடிவம் பெற்று “கப்ர்” மண்ணறைகளின் தோற்றத்தில் பரவலாக காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. மண்ணறையில் உள்ளவர்கள் எம்மைப் போன்ற மனிதர்கள் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இவர்களை அளவு கடந்து இஸ்லாமிய வரையறைகளையும் கடந்து உயர்த்தி, தேவையற்றவற்றை செய்வதானது இணை வைப்புக்கு கொண்டு சேர்த்து விடும். இவ்வாறு தற்காலத்தில் மண்ணறையோடு பிண்ணிப் பிணைந்த மார்க்கத்திற்கு முரணான செயற்பாடுகளையும் அவற்றிற்கான சட்டதிட்டங்களையும் சிறிது விளங்கி வழிகேடுகளிலிருந்து விடுபட்டு நல்வழியில் செல்வோம்.

மண்ணறையை உயர்த்திக் கட்டுதல், பூச்சுப் பூசுதல், பெயரிடல்.

இஸ்லாம் மண்ணறையை நிலத்திலிருந்து ஒரு சான் அளவு உயர்த்தி சமப்படுத்துமாறு கட்டளையிட்டிருக்கின்றது. “அனைத்து மார்க்க அறிஞர்களும்: மண்ணறையை உயர்த்துவது, அதனை விதம் விதமாகக் கட்டுவது, அதன் மீது பள்ளிவாயல் அமைப்பது போன்ற அனைத்தும் ஹராம் மார்க்கத்தில் தடுக்கப்பட்டவை என்று ஏகோபித்துக் கூறியுள்ளனர்.”

கப்ரை உயர்த்திக் கட்டும் செயல் எப்போது ஆரம்பமானது?

இது நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களது சமுதாயத்தினரால் உருவாக்கப்பட்டதே கப்ரை உயர்த்திக் கட்டும் இச்செயல்!
“இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறும் செய்தியை இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் புகாரி கிரந்தத்தில் பின்வருமாறு பதிவிடுகிறார்கள்: “நூஹ் (அலை) அவர்களது சமுதாயத்தி சில நல்லடியார்கள் இருந்தனர். அவர்கள் நற்கருமங்கள் செய்வதில் அதீத ஆர்வம் கொண்டவர்கள். அவர்கள் இறந்ததும், அங்குள்ள மக்கள் அவர்களை ஞாபகம் கூறும் விதமாக அவர்களின் உருவங்களை செதுக்கி, கப்ருகளை உயர்த்திக் கட்டினர். கால ஓட்டத்தில் ஷைத்தான் வருகை தந்து அங்குள்ள மக்களின் உள்ளங்களில் அவர்களை வணங்கும்படி உதிப்பை ஏற்படுத்தினான். அத்தோடு அன்றிலிருந்து மக்கள் அந் நல்லவர்களை வணங்க ஆரம்பித்தனர்.” ( புகாரி : 4920 )

இங்கு புலப்படுத்தும் விடயம் என்னவென்றால், நூஹ் (அலை) அவர்களது சமுதாயத்தினர் இறந்த நல்லடியார்களின் மண்ணறைகளை உயர்த்திக் கட்டியதன் விளைவாக பின் வந்த சமுதாயம் எமது மூதாதையர் இவர்களை வணங்கி இருக்கின்றனர். எனவே நாமும் வணங்குவோம் என்ற நிலைப்பாட்டுக்கு கொண்டு சென்றது தான். ஆக தற்காலத்தில் ஊர்களில், கிராமங்களில், நகரங்களில் கப்ருகளை உயர்த்தி அழகுபடுத்தும் முக்கியஸ்தர்களே! இக்கப்ரு வணக்கத்தை உங்களின் பின்வரும் சமுதாயம் மேற்கொள்ளாது என்பதில் உங்களுக்கு உத்ததரவாதம் இருக்கின்றதா? இவ்வாறு கப்ருகளை பிற்பட்ட காலத்தில் வணங்கினால் உங்களுக்கே அனைத்து குற்றமும், இணை வைப்புக்குதவிய பாவம் வந்தே சேரும்.

பின்வரும் நபியவர்களின் கடுமையான எச்சரிக்கைகள் இன்னும் தெளிவைத் தரும் எனும் நோக்கில் அவற்றையும் இங்கு பதிகிறேன்.

∆ புகாரி முஸ்லிம் ஆகிய இரு கிரந்தங்களிலும் பதிவாகியுள்ள ஹதீஸை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உம்மு ஸலமா ( ரலி ) அவர்கள் நபியவர்களிடம் தாம் ஹபஷா நாட்டில் கண்ட ஒரு வணக்கஸ்தளத்தையும் அங்கு பார்த்த சில படங்களையும் கூறிய பொழுது, நபியவர்கள்: அம்மக்கள் அவர்களில் ஓர் நல்லடியார் இறந்துவிட்டால், அவரது மண்ணறையின் மீது பள்ளிவாயலைக் கட்டுவார்கள், அத்தோடு அதில் உருவங்களை வரைவர், அல்லஹ்விடத்தில் அவர்களே படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்கள்” என்று கூறினார்கள். (புகாரி:427, முஸ்லிம்:528)

∆ ஆயிஷா ( ரலி ) அவர்கள் கூறுகிறார்கள்: நபியவர்களின் இறுதித் தருவாயில் தமது முகத்தில் ஒரு துணியை வீசிக் கொண்டிருப்பார்கள், மயக்கம் ஏற்பட்டால் அதனை அகற்றி “யூத, கிறிஸ்தவர்களுக்கு அல்லாஹ்வின் நாசம் உண்டாவதாக, (ஏனெனில்) அவர்கள் நபிமார்களின் மண்ணறைகளை பள்ளிவாயல்களாக ஆக்கிக் கொண்டனர் என்று கூறுவதோடு அவர்கள் செய்தவற்றிலிருந்து (சமுதாயத்தினரை) எச்சரிக்கை செய்வார்கள்.”
ஆதாரம்: ( புகாரி:435, முஸ்லிம்:531)

எனவே சகோதரர்களே, அன்பர்களே! நபியினதும் அல்லாஹ்வினதும் சாபத்தை இட்டுத் தரும் வரம்புமீறிய செயலே கப்ரை உயர்த்திக் கட்டுவதாகும், அவர்கள் இருவரின் சாபம் கிடைத்ததன் பின்பு இவ்வுலகில் வாழ்வதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. ஆகையால் இவ்விடயத்தில் ஒவ்வொருவரும் விளிப்பாக இருப்பது மிகவும் அவசியம். ஊர் தலைவர்கள் அதன் பொறுப்பாளர்கள் இவ்வரம்பு மீறிய செயலுக்கு நீங்களும் துணை போனால் மறுமையில் அனைவரும் உங்களையே அல்லாஹ்விடத்தில் சாட்டி விட்டு தப்பித்து விடுவர். பிறகு வேறுவழியின்றி அனைவரின் பாவச் சுமைகளையும் சுமந்து கொண்டு நரகம் நுழைய வேண்டியதாகிவிடும். (அல்லாஹ் பாதுகாப்பானாக)

∆ நபியவர்கள் கூறியதாக ஸைத் இப்னு தாபித் (ரலி) அறிவிக்கிறார்கள்: கப்ருகளை தரிசிக்கும் பெண்களையும், அவற்றின் மீது பள்ளிவாயல்களைக் கட்டுபவர்களையும், மேலும் அவற்றின் மீது (வெளிச்சம்) விளக்குகள் ஏற்றுபவர்களையும் அல்லாஹ் சபித்துள்ளான்.”
ஆதாரம்: (அஹ்மத்:2030, அபூ தாவூத்:3236, நஸாயீ:2043, திர்மிதீ:320, இப்னு மாஜா:1575)

மேற்குறித்த ஹதீஸின் அடிப்படையில் கப்ருகளை பெண்கள் தரிசிப்பதும், அவற்றின் மீது மஸ்ஜிதுகள் அமைப்பதும், வெளிச்சங்கள் ஒளிர விடுவதும் அல்லாஹ்வின் சாபத்திற்குரிய செயற்களாகும். ஆக இப்பாரதூரமான செயலை முழுக்க முழுக்க தவிர்ப்பது கட்டாயக் கடமை என்பதனை மறவாமல் இருப்போம்.

∆ முஸ்லிம் மற்றும் ஏனைய கிரந்தங்களில் அபுல் ஹய்யாஜ் அல் அஸதீ என்பவர் அறிவிக்கும் ஓர் அறிவிப்பு பதியப்பட்டுள்ளது: அவர்கள் கூறுகிறார்கள்: “அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்: ரஸூலுல்லாஹ் என்னை அனுப்பிய விடயத்திற்கு உம்மையும் நான் அனுப்பி வைக்கட்டுமா என்று கூறிவிட்டு அது தான் “ஒரு விக்கிரகம் கிடைத்தால் அழிக்குமாறும், உயர்ந்த கப்ரைக் கண்டால் அதனை சமப்படுத்தி விடுமாறும் (என்னைப் பணித்தார்கள்)” என்று கூறினார்கள்.
நூல்: (முஸ்லிம்:969)

இந்த அறிவிப்பில் கப்ரு உயர்த்தப்பட்டிருப்பின் அதனை சமப்படுத்துமாறு நபியவர்கள் அலி (ரலி) அவர்களை பணித்திருப்பது எவ்வளது பாரதூரமான செயல் என்பதை நன்றாக பறைசாற்றுகின்றது. நபியை பின்பற்றும் ஓர் உண்மையான முஸ்லிம் ஒரு பொழுதும் நபியின் இக்கட்டளைக்கு மாறு செய்ய மாட்டான், மாறாக எவருடைய கப்ராக இருப்பினும் அவர் வலியுல்லாஹ்வாக இருந்தாலும் அக்கப்ரை சமப்படுத்துவதே ஒரு முஸ்லிம் செய்யும் உயரிய வேலை மற்றும் கடமையுமாகும்.

∆ ஜாபிர் (ரலி ) அவர்கள் கூறுகிறார்கள்: “நபியவர்கள், கப்ரைப் பூசுவதையும், அதன் மேல் கட்டுவதையும், அதனை மிதித்து செல்வதையும் தடுத்துள்ளார்கள்”
ஆதாரம்: அஹ்மத்: 14148, முஸ்லிம்: 970, அபூ தாவுத்: 3225, திர்மிதீ: 1052, நஸாயீ: 2028.

இந்த ஹதீஸில் கப்ரின் மீது கட்டுவது மற்றும் அதனைப் பூசுவது மிகத் தெளிவாக தடுக்கப்பட்ட விடயங்களாகும். எனவே ஹதீஸ்களை ஒப்பு நோக்கிப் பார்க்கின்ற பொழுது நபியவர்கள் சிலவிடுத்தம் கப்ரின் மீது கட்டுபவனை சபித்திருக்கிறார்கள், சில நேரம் வன்மையாக கண்டித்திருக்கிறார்கள், சில வேளை இறைவனின் கோபம் ஏற்படும் என்பதாகக் கூறியிருக்கிறார்கள், சில தருணங்களில் யூத கிறிஸ்தவர்களின் செயற்களைப் போன்றது என ஒப்பிட்டிருக்கிறார்கள், மற்றும் சில தடவைகளில் உயர்ந்த கப்ரை இடிப்பதற்கு ( தகர்த்தெறிவதற்கு ) ஆள் அனுப்பியிருக்கிறார்கள். இவ்வாறு இந்த மோசமான செயலை விட்டும் மக்களை தடுத்திருக்கின்றார்கள் எனில் இதன் பாரதூரம் எந்தளவு என்பதை கட்டாயம் உணர்வது அனைவரின் கடமையாகும்.

மக்களில் சிலர் இந்த கப்ருகளுக்கென ஒரு பருவ காலத்தை அமைத்து அவற்றை வணங்குவதோடு, அங்கு பல வணக்கங்களையும் புரிகின்றனர். அல்லாஹ் அல் குர்ஆனில் நபியை நோக்கி “(நபியே கூறுங்கள்) நான் எனது ஆத்மாவிற்கே நலவையோ கெடுதியையோ செய்வதற்கு சக்தியற்றவன்” என்று கூறியிருக்கின்றான். இங்கு நன்றாக யோசித்தால் உலக மனிதர்களின் தலைவருக்கே எந்தவொன்றும் செய்யமுடியாத பொழுது எவ்வாறு ஏனைய மண்ணறை வாசிகள் சக்தி பெற்றவர்களாக இருப்பர்! இது சாத்தியமற்ற விடயம் என்பதும் விளங்க வரும். அல்லாஹ் எமக்கு பகுத்தறிவை தந்திருப்பது இவ்வாறான விடயங்களை விளங்குவதற்குத்தான்.

உலகில் சிறந்த, இறைவனிடம் நெருக்கமான, முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபிக்கே ஒன்றும் செய்ய சக்தியில்லாத பொழுது எவ்வாறு கப்ரில் இருக்கும் ஏனைய மக்கள் சக்தி பெறுவர்?! இந்த கப்ரை உயர்த்திக் கட்டுவது, அதில் இருப்பவர்களை உயர்வாக நினைத்து வணங்குவது, அவர்களிடம் நேர்ச்சை செய்வது, பிரார்த்திப்பது, உதவி தேடுவது அனைத்தும் இணை வைப்பு என்பதில் எந்த இமாமும் மாற்றுக் கருத்து தெரிவிக்க வில்லை. இது முழுக்க முழுக்க மக்களின் எண்ணங்களில் ஷைதான் ஏற்படுத்தும் திருவிளையாடல்களாகும்.

கப்ரை உயர்த்திக் கட்டுவது, அதன் மீது விரிப்புகள் விரிப்பது, அதனை பூசி அழகுபடுத்துவது, அலங்கரிப்பது போன்ற அனைத்தும் ஷைத்தான் அலங்காரமாக மக்களிடம் காட்டி திசை திருப்பும் விடயங்கள். எனவே ஒவ்வொருவரும் இது குறித்து மிக மிக விளிப்பாகவும் அவதானமாகவும் இருப்பது அவசியம்; ஏனெனில் மேற்குறித்த இணைவைப்பு தொடர்பான அறிவற்ற ஒருவர் இவ்வாறு சோடிக்கப்பட்ட கப்ருகளைக் காணும் பட்சத்தில் எவ்வித சந்தேகமுமின்றி அவரின் உள்ளத்தில் இந்த கப்ருகளின் கண்ணியம் அதிகரிக்க ஆரம்பித்து விடும், பிறகு ஷைதான் உள் நுழைந்து இன்னும் வசீகர எண்ணங்களை ஏற்பட்டுத்தும் பொழுது இறுதியில் படிப்படியாக கப்ர் வணக்கத்திற்கு மாறும் நிலை அவருக்கு உண்டாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இவை இவ்வாறிருக்க மக்களில் மற்றுமொரு சாரார் இந்த கப்ருகளுக்காக தமது செல்வத்தை செலவழிக்கும் அறிவாளிகளும் (மறு பக்கமாக சிந்திக்கவும்) இருக்கத்தான் செய்கின்றனர். ஷைதான் இவர்களைக் கொண்டு தனது காரியத்தை கட்சிதமாக செய்து முடிக்க எத்தனிப்பான். இவர்கள் பணம் செலவழிக்க இன்னொரு கூட்டம் கப்ருகளின் அருகாமையில் நின்று கொண்டு அவற்றை பார்வையிட வருபவர்களுக்கு சில தந்திர யுக்திகளைக் கையாண்டு, வீணான பொய்யும் கட்டுக் கதைகளையும் கூறி தாமும் ஏமாந்து ஏனையோரையும் ஏமாற்றுவர். இவை தவிர இல்லாத வணக்க வழிபாடுகளை அறிமுகப்படுத்தி அக்கப்ருகளுக்கு கொண்டாட்டங்கள் எடுப்பர். உண்மையில் இவ்வாறு இல்லாத வணக்கங்களை மரணம் வரை செய்தாலும் ஒரு துளி அளவும் நன்மை கிடைக்கவே கிடைக்காது. எனவே தான் நபியவர்கள்: “எமது மார்க்கத்தில் இல்லாத அனைத்தும் மறுக்கப்படவையாகும்” என்று கூறியுள்ளார்கள்.

கப்ரை உயர்த்துவது, அதன் மீது குப்பா போன்று அமைப்பது அத்தோடு அங்கு பள்ளிகள் கட்டுவது என்பன மார்க்கத்தில் தடையான மற்றும் இல்லாத செயற்களாகும். ஆகையால் எவர் இந்த கப்ரை உயர்த்திக் கட்டி, அலங்கரிக்க பண உதவி செய்கின்றாரோ, யாரெல்லாம் ஆதரவு தெரிவிக்கின்றார்களோ மேலும் கப்ர் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்றார்களோ அனைவருக்கும் இணை வைத்த குற்றம் வந்தே தீரும், அத்தோடு அல்லாஹ் ரஸூலினது சாபங்களும் வந்தடையும். ஆக ஊர்த் தலைவகள் இது குறித்து மிக அவதானமாக இருப்பது அவசியம்; ஏனெனில் மறுமையில் இவர்களது பொறுப்பைப் பற்றி விசாரிக்கப்பட இருக்கின்றனர்.

பொறுபுப்பாளர்களே! ஊர்த் தலைவர்களே! பள்ளி பரிபாலன சபை அங்கத்தவர்களே! நிர்வாகிகளே! புத்தி ஜீவிகளே! கல்விமான்களே! உங்களிடம் வினயமாக கேட்பது யாதெனில் மேற்கூறப்பட்ட கப்ரோடு தொடர்பான அபத்தங்களை மக்களுக்கு விளிப்புணர்வூட்டி இணை வைப்புக்கு உறுதுணையாக இருக்காது மக்களுக்கு நேர்வழி காட்ட முனையுங்கள். இன்று நீங்கள் வழிகேட்டிற்கு துணை போனால் நீங்கள் மரணித்த பின் மறுமை வரை யாரெல்லாம் இந்த வழிகேட்டை செய்தார்களோ அனைவரின் குற்றங்களும் பாவச் சுமைகளும் உங்களை வந்தே தீரும். மறுமையில் யாரும் யாருக்கும் உதவிசெய்ய முடியாத தருணத்தில் உங்களது நன்மைகள் கொள்ளையடிக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் இன்றே நலவுக்கு உறுதுணையாக இருந்து வழிகேட்டிற்கு எதிரியாக மாறி மக்களையும் நேர்வழியில் இட்டுச் செல்லுங்கள்; ஏனெனில் மறுமையில் மக்கள் உங்களின் கழுத்துகளை வந்து பிடிப்பர் அந் நேரத்தில் நீங்கள் தடுமாறுவதால் எவ்வித பிரயோசனமும் கிடையாது. பொறுப்புகளின் அமானிதங்களைப் பேணி கப்ரோடு தொடர்பான அனைத்து இணை வைப்பு செயற்பாடுகளிலிருந்தும் உங்களையும் உங்களது மக்களையும் பாதுகாக்க முயற்சியுங்கள். இதுவே உங்களது மிகப் பெரிய கடமையும் தார்மீகப் பொறுப்புமாகும்.

வல்லவன் அல்லாஹ் மரணம் வரை அனைவரையும் இவ்வாறான இறைவனின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உள்ளான வழிகேடுகளிலிருந்து பாதுகாத்து நேர்வழியில் இட்டுச்செல்வானாக! ஆமீன்!

 

நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
ஹுஸைனியா புரம் – பாலாவி
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.