போலோ 'பாரத் பிதா கீ ஜே'

ரு செயலைச் செய்யும்படி என்னை நிர்பந்தித்தால் அது என் சுய மரியாதைக்கு இழுக்கு; அதை நான் செய்யமாட்டேன்" எனும் பொருள் படும்படி, கடந்த வாரம் தந்தி டி வி நடத்திய மக்கள் மன்றம் நிழச்சியில் பேசிய பா ஜ க தேசீயச் செயலாளர் H. ராஜா ஒரு கருத்தைச் சொன்னார்.
மிகச்சரியான கருத்து!

இந்தச்சுய மரியாதை, மனிதர்கள் அனைவருக்கும் இருக்கிறது. முஸ்லிம்களுக்குச் சற்றுக் கூடுதலாக இருக்கிறது.

அவர்களது சமயம் அதைப்போதிக்கிறது. அதனால்தான், அகில இந்திய மஜ்லிஸ் ஏ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஸதுத்தீன் உவைஸி, "என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினாலும் நான் பாரத் மாதா கி ஜே சொல்ல மாட்டேன்" என்றார்.

இந்தியர்கள் அனைவரும் தம் நாட்டுப்பற்றை வெளிக்காட்ட, "பாரத் மாதா கீ ஜே" என முழக்கமிட வேண்டும். ஆர் எஸ் எஸ் தலைவர் மோஹன் பகவத் மிரட்டலாகக் கூறியதற்கே அஸதுத்தீன் எதிர்வினையாற்றினார்.

அவரைப் பின்பற்றி அக்கட்சியின் மகாராஷ்டிரா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர், வாரிஸ் யூஸுஃப் பதானும் எதிர்வினையாற்றினார். அதனால் அம்மாநிலத்தை ஆளும் பாஜக சிவசேனா கூட்டணி, வாரிஸ் யூஸுஃப் பதானைச் சட்டமன்றத்திலிருந்து விலக்கி வைத்துள்ளது.

இந்திய நாட்டின் பூர்வ குடிகளான முஸ்லிம்கள் பாஜக ஆட்சிக்கு வரும் முன்பே இந்துத்துவக் கும்பலால் பல வகைகளில் மிரட்டப்பட்டு வந்தனர்.

ராமனை தேசீய நாயகனாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழ முடியும்;

பாபர் மசூதியையும் காசி மதுரா மசூதிகளையும் இந்துத்வக் கும்பலிடம் ஒப்படைத்து விட வேண்டும்;

வந்தே மாதரம் பாட வேண்டும்;

இப்படிப்பல்வகை மிரட்டல்கள்!

வாஜ்பேயி ஆட்சி போய் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பின், பகவத் கீதை, யோகா, சூரிய நமஸ்காரம், மாட்டுக்கறி என ஒவ்வொருவரும் தமக்குத் தோன்றிய வகையில் மிரட்டல் விடுக்கத் தொடங்கினர்.

யோகாவை ஏற்றுக்கொள்ளா விட்டால் பாகிஸ்தான் போ!

சூரிய நமஸ்காரம் செய்யாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறு!

பகவத் கீதையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் பாகிஸ்தான் போ!

மாட்டுக்கறி சாப்பிட நினைத்தால் பாகிஸ்தான் போ!

இப்போது லேட்டஸ்டாக, "பாரதமாதா கி ஜே சொல்லாவிட்டால் தலையைத் துண்டிப்பேன்" என்று வந்து விட்டது.

ஹரியானா மாநிலத்தின் ரோதக் எனுமிடத்தில் நடந்த ‘சத்பவன சம்மேளனம்’ நிகழ்ச்சியில் பேசிய யோகா மாஸ்டர் ராம்தேவ், "நான் இந்த மண்ணின் சட்டத்தையும் அரசியல் சட்டத்தையும் மதிக்கிறேன். இல்லையென்றால், ‘பாரத மாதா கீ ஜே’ சொல்ல மறுக்கும் லட்சக்கணக்கானவர்களின் தலைகளை வெட்டி இருந்திருப்பேன். சிலர் தொப்பி போட்டு கொண்டு, என் கழுத்தை வெட்டினாலும் பாரத மாதா கீ ஜே சொல்ல மாட்டேன் என்கின்றனர். இந்த நாட்டில் சில சட்டங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் மதிக்கிறோம். இல்லையென்றால், நம் நாட்டை அவமதிப்பவர்கள் ஒருவர் இல்லை, ஆயிரம் பேர் இருந்தாலும், லட்சம் பேர் இருந்தாலும், அவர்களின் தலைகளை வெட்டும் அளவுக்கு நமக்கு பலம் உள்ளது." என்று பகிரங்கமாகவே கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

"பாரத் மாதா கி ஜே சொல்லாதவர்கள் தேசத்துரோகிகள்" என்றார் ஆர் எஸ் எஸ்ஸின் இணைப் பொதுச்செயலாளர் தாத்தாத்ரேய ஹொஸபாலே.

"பாரத் மாதா கி ஜே என்று கோஷமிட மறுப்பவர்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும்" என்று சிவசேனா மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

“‘பாரத் மாதா கி ஜே’ என்று முழக்கமிட விரும்பாதவர்களுக்கு இந்தியாவில் இருப்பதற்கு உரிமை கிடையாது என்று நான் உணர்கின்றேன். அவர்கள் வேறு நாட்டிற்கு செல்லலாம்,” என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா கூறி உள்ளார்.

"‘பாரத் மாதா கீ ஜே’ என்று சொல்லாதவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமையில்லை, அவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம்" என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

பேட்டை ரவுடிகளிடையே, 'யார் பெரிய ரவுடி' என்று ஏற்படும் போட்டியில், ஒருவரை ஒருவர் மிஞ்சும் வண்ணம் "ஸவுண்டு" விடுவதைப்போல், யார் பெரிய தேச பக்தர் என்று காட்டுவதற்காக ஸவுண்டு விட்டுள்ளதில் பெரிய ரவுடியாகத் தம்மைக் காட்டிக்கொள்ளக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் ராம் தேவ்.

இஸட் பிரிவு பாதுகாப்பில் இருந்து கொண்டு ஸவுண்டு விடும் இந்த கார்பரேட் காவி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் போலீஸுக்குப் பயந்து காவி வேட்டியை உருவி விட்டுப் பெண்கள் அணியும் ஆடையில் ஒடி ஒளிந்த கதை ஊரறியும் உலகறியும்.

இதற்கும் மேல் இந்த லேகிய வியாபாரியைப் பற்றிப் பேசாமல், பாரத் மாதாவைப் பார்ப்போம்.

ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய நாடு, 1866 காலகட்டத்தில் வங்காள மொழி நாடகத்தில், உடைமைகளை இழந்த ஒரு பெண்ணாக உருவகம் செய்யப்பட்டுக் கதாபாத்திரமானது. அதன் பின் 1882 இல் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ஆனந்த மடம் நாவலில் மாகாளி துர்க்கையாகப் பரிணாமம் பெற்று வந்தே மாதரம் பாடலால் பூசிக்கப்பட்டது.ரவீந்த்ரநாத் தாகூரின் உறவினரான ஓவியர் அவனீந்திரநாத் தாகூர் 1905-ஆமாண்டில் வரைந்த பாரத மாதா ஓவியத்தில் காவி ஆடை அணிந்த துறவியாக இந்திய நாடு உருவகப்படுத்தப் பட்டுக் காட்டப்பட்டது. நான்கு கை கொண்ட பாரத மாதாவின் இடப்புறக் கையொன்றில் ஓலைச்சுவடிகளும் மற்றொரு கையில், கொய்தெடுத்த தானியக் கதிர்களும் வலப்புறம் மூன்றாம் கையில் வெள்ளைத் துணியும் நான்காம் கையில் செபமாலையும் வைத்திருப்பது போல் வரையப்பட்டிருந்தது.

அதன் பின், அடிமைப் பட்டுப் போன கவலையால் கன்னத்தில் கை வைத்துக் காட்சியளிக்கும் பெண்ணாக உருவகப்படுத்தப்பட்டது இந்தியா.அதன் பின் இந்துக்கள் கோயிலில் வழிபடும் பெண் தெய்வ வடிவில் பாரத மாதா வடிவம் உருவாக்கப் பட்டது.துர்க்கையின் கையிலிருக்கும் சூலாயுதம் காங்கிரஸ் கொடியாக மாற்றம்பெற்ற பாரத மாதா உருவம் தொடர்ந்து வந்தது.அதன் பிறகு இந்தியா இந்துக்களின் புண்ய பூமி என்ற கருத்தாக்கத்துக்கு வலிவூட்ட முழுமையான துர்க்கை வடிவாக பாரத மாதா உருவானாள்.

"வாலை, உமாதேவி, மாகாளி, வீறுடையாள்,
மூலமா சக்தி, ஒரு மூவிலைவேல் கையேற்றாள்,
மாயை தொலைக்கும் மஹாமாயை தானாவாள்,
பேயைக் கொலையைப் பிணக்குவையைக் கண்டுவப்பாள்,
சிங்கத்தி லேறிச் சிரிப்பால் உலகழிப்பாள்.
சிங்கத்தி லேறிச் சிரித்தெவையுங் காத்திடுவாள்
நோவுங் கொலையும் நுவலொணாப் பீடைகளும்
சாவுஞ் சலிப்புமெனத் தான்பல் கணமுடையாள்,
கடாவெருமை யேறுங் கருநிறத்துக் காலனார்
இடாது பணிசெய்ய இலங்கு மஹாராணி"

எனப் போற்றும் காளி வடிவில் கையில் தேசியக் கொடியுடன் பாரதமாதா வந்தாள் .

அடுத்த கட்ட நடவடிக்கையாக, காளியின் கையில் இருக்கும் தேசீயக் கொடியைப் பிடுங்கி விட்டு ஆர் எஸ் எஸ் கொடியைக் கையில் கொடுத்து அகண்ட இந்தியப் பின்புலத்தில் நவீன பாரத மாதாவைக் கொண்டு வந்தனர்.பாரத மாதாவுக்கு இந்தியாவில் காசி , ஹரித்வார் மற்றும் காஷ்மீரின் லே ஆகிய மூன்று இடங்களில் கோயில்கள் இருக்கின்றன. பிளவுபடாத ஒன்றுபட்ட இந்திய வடிவமே அங்கு பாரத மாதா.

ஆனால் ஆர் எஸ் எஸ் தலைமையிலான இந்துத்வக் குடும்பத்தினர் வழிபடுவது காவிக்கொடியேந்திய காளியையே. அதுவும் அவர்கள் சொல்லும் மேற்கண்ட வடிவத்தைத் தான் பூஜை செய்ய வேண்டும். தலையின் பின் புறம் நெருப்புச் சுடர் தெரியும் - கீழ்க்காணும் பாரத மாதாவை வழிபடக்கூடாதாம்.இந்துக்கள் வழிபடும் ஒரு பெண் தெய்வ வடிவத்தைக் காட்டி இதுதான் பாரத மாதா என்று சொன்னால், இந்த மாதா கீ ஜே போடச்சொன்னால் இதை நம்பாத முஸ்லிம் கிருத்துவ சீக்கியர்கள் மறுக்கத்தானே செய்வார்கள்.

சீக்கியர்கள் பெண்களை வணங்குவதில்லை. அதனால் நாங்கள் பாரத் மாதா கீ ஜே சொல்ல மாட்டோம் என அகாலிதளத்தலைவர் ஸிம் ரஞ்சித் ஸிங்க் மான் சொல்லி விட்டார். உவைஸியின் தலையறுக்கத் துணிந்த ராம்தேவ் சீக்கியர்களிடம் விளையாட மாட்டார். அவர்கள் இடையில் நீண்ட வாளைத் தொங்க விட்டுள்ளனர்.

பாரத் மாதா கீ ஜே சொல்லி விட்டால் வறுமையும் பஞ்சமும் தீர்ந்து விடுமா? ஏழ்மை ஒழியுமா? வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கோடிகள் திரும்ப வருமா? பாரத் மாதா கீ ஜே சொன்னால் ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் மோடி சொன்னபடி ரூ. 15 லட்சம் தொகை போடப்படுமா?

விவசாயம் செழிக்குமா? விவசாயி தற்கொலை செய்யாமல் வயிறு நிறைந்து விடுவானா?

வாயால் பாரத் மாதா கீ ஜே போட்டு விட்டு நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கலாமா? நாட்டைக் காட்டிக்கொடுக்கலாமா?

பாரத் மாதா கீ ஜே சொல்லி விட்டு, பத்தாயிரம் கோடிகளில் வங்கிகளில் கடன் வாங்கி விட்டு நாட்டை விட்டு ஓடலாமா?

நாட்டுப் பற்று - இந்துத்வா மரபில் தேசபக்தி - என்பது வெற்றுக்கூச்சலில்தான் இருக்கிறதா?

என் நாட்டுப் பற்றைக் காட்ட இந்தியா வாழ்க எனச்சொன்னால் போதாதா?

ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா என்று சொல்வது ஜே போடுவதை விடச் சிறந்த புகழல்லவா?

ஆனால் இந்துத்வாக்களின் நோக்கம் நாட்டுப்பற்றை வளர்ப்பது என்ற பெயரில் இந்துத்வா அரசியலை வளர்ப்பதுதான். அதற்காக முஸ்லிம்களின் மேல் வெறுப்பையும் விரோதத்தையும் தூண்ட வேண்டும். அதற்குரிய கருவி பாரத மாதா.

இந்து மக்கள் மத்தியில் பாரத மாதா படங்கள் இலட்சக்கணக்கில் விநியோகிக்கப்பட்டு, பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இச்சமயங்களில் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்கள் நடத்தும் தீவிரவாதச் சொற்பொழிவுகளில் இந்திய – பாக்கிஸ்தான் பிரிவினையின் போது இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் என உயர்வு நவிற்சியோடு உணர்ச்சிப்பெருக்கோடு வர்ணிக்கின்றனர். இது இந்து மக்களின் மனங்களில் இஸ்லாமியர் மீதான பழிவாங்கும் வெறியை, வெறுப்புணர்வை வளர்க்கிறது. இத்தகைய வெறுப்புணர்வின் மூலமே இந்துத்துவ அரசியல் கட்டப்படுகிறது.. அதற்கான கண்டுபிடிப்பே பாரத் மாதா கீ ஜே எனும் கோஷத் திணிப்பு..

வேதத்தில் வரும்,

"ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே,பரதக்கண்டே" எனும் சொற்கள் குறிப்பவை என்ன?

ஏழு த்வீபங்கள் கொண்ட பூலோகத்தில், ஜம்பூ த்வீபத்தில் ஒன்பது தீவுகளால் ஆன பாரத வர்ஷத்தில், ஒன்பது கண்டங்களின் இடையே உள்ள பரதக் கண்டத்தில் இருக்கிறோம்.

மனோண்மணீயம் எனும் நாடகத்தின் வாயிலாகத் தமிழ்த்தாய் வாழ்த்து வழங்கிய பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, தம் வாழ்த்தில்,

"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்..." என்றுதான் கூறுகிறார்.

இந்தப் பரதக் கண்டம்தான் அகண்ட இந்தியா. இதற்கு பாரதம் என்றுதான் பெயர். இந்த நாட்டிற்கு பாரதம் எனப்பெயர் வந்தது பரத மன்னனால்தான்.

பரத மன்னன் ரிஷபதேவர் அல்லது ஆதிநாதர் (Rishabha or Adinatha) என்பவரின் மகன் ஆவான். ரிஷபதேவர் சமண சமயத்தை நிறுவியர். 24 சமண சமயதீர்த்தங்கரர்களில் முதலாமவர். 'தீர்த்தங்கரர்’ என்பதற்குத் ‘தம் ஆன்மாவைப் பிறவிக்கடலிலிருந்து கரையேற்றிக் கொண்டவர்’ என்பது பொருள். ரிஷபதேவரின் மூத்த மகன் பரதன் முதன் முதலில் இந்நாட்டை அருள் நெறியில் நீதிமுறை வழுவாது ஆட்சி புரிந்து வந்ததால் அவனது குடிமக்கள் பரத சக்கரவர்த்தி எனப் பெருமையுடன் அழைத்து இந்நாட்டிற்கு பரத கண்டம் என அவன் பெயரையே சூட்டி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்

அவனே இந்த நாட்டின் பிதா .. பாரத் பிதா!

ஆனால் பாரத் பிதா கீ ஜே போட்டால், இந்தியா இந்து நாடு என்று இல்லாமல் சமண மத நாடு என்றாகி விடுமோ என்ற அச்சத்தால் திட்டமிட்டு "பாரத மாதா"வை உருவாக்கி விட்டார்கள்.

தந்தையர் நாடு என்று பெருமை கொண்டான், ஜெர்மனியின் இரும்பு மனிதன் பிஸ்மார்க் ..

ஆஸிந்து ஸிந்து பர்யந்தா யஸ்ய பாரத பூமிகா|
பித்ருபூ: புண்யபூஸ் சைவ ஸ வை ஹிந்துரிதி ஸ்ம்ருத:

சிந்துவில் இருந்து கடல் வரை பரந்த பாரத பூமியைத் தங்கள் தந்தையர் நாடாகவும், புண்ணிய பூமியாகவும் கருதுவோரே ஹிந்துக்கள் என்றுதான் இந்துத்வ மூலவர் சவர்கார் தாம் இயற்றிய ஸ்லோகத்தில் கூறுகிறார்.

எனவே பாரத பூமியைத் தந்தையர் நாடாகவே கருத வேண்டும். இவர்கள் சொல்லும் கற்பனை பாரத மாதாவுக்கு ஜே போடுவதை விட ஒரிஜினல் பாரத் பிதா கீ ஜே போடுவதுதான் சரியானது.

பாரத் பிதாவுக்கு ஜே போடுவதில் சீக்கியர்களுக்குப் பிரச்சினையில்லை. கிறித்தவர்கள் பிதாவை வணங்குவதால் அவர்களுக்கும் பிரச்சனையில்லை. உருவமோ சிலையோ வடிக்கப்படாத ஒரு பாரத் பிதாவுக்கு ஜே போடுவதில் முஸ்லிம்களுக்கும் பிரச்சனையில்லை. கண்ட கழிசடை அரசியல்வாதிகளுக்கெல்லாம் ஜே போடும்போது பாரத் பிதாவுக்கு ஜே போடுவதில் யாருக்கு என்ன பிரச்சனை? எனவே,

போலோ 'பாரத் பிதா கீ ஜே'

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.