கீரைகளில் இவ்வளவு மருத்துவமா!கீரைகள் இறைவனின் அருள்கொடைகள் என்றே சொல்லலாம். நம் அன்றாட உணவில் கீரைகளின் பங்கு மிகவும் மகத்தானது. நோயை விரட்டி உடலுக்கு சக்தி அளித்து, ஆரோக்கியத்தை கூட்டுவது. கிராமத்தில் நிறையப் பேருக்கு பாட்டி வைத்தியம் செய்வார்கள், அதில் கீரைகள் முக்கிய பங்கு வக்கின்றன.


கீரைகளில் பலவகைகள் உள்ளன. ஆனாலும் நிறைய பேருக்கு அதிகம் தெரிந்தது அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை மட்டுமே. தெருவில் கீரை விற்பவர்கள் முதல்கொண்டு காய்கறி சந்தை வரை அதிகமாக நாம் காண்பதும் இந்த வகை கீரைகள்தான். பண்டைய காலம் முதலே பலவகையான கீரைகளை தங்கள் சாப்பாட்டில் சேர்த்து வந்துள்ளனர் நம் முன்னோர்கள். அதன் பலனும் அலாதியானது.

கீரைகளில், அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கன்னி, பசலை, புளிச்சக்கீரை (கோங்குரா), தண்டுக்கீரை, புதினா, முள்ளங்கிக்கீரை, கொத்தமல்லி தழை, பருப்புக்கீரை, மணத்தக்காளி, வெந்தயக்கீரையுடன் கிராமங்களில் மானாவாரியாக ஆங்காங்கே புல்பூண்டுகளுடன் முளைத்துக்கிடக்கும் முடக்கற்றான், குப்பைமேனி, வல்லாரை, தூதுவளை, குப்பைக்கீரை, முள்ளுக்கீரை, தாளிக்கீரை, பசரை, சக்ரவர்த்திக்கீரை, தொய்யாக்கீரை, ஆரைக்கீரை, முசுமுசுக்கை, கோவை, கரிசலாங்கண்ணி, வெள்ளைக்கீரை, நச்சுக்கொட்டை, பண்ணைக்கீரை, காசினி, மூக்கற்றை, துத்திக்கீரை போன்ற பல்வேறு கீரைகைகள் உள்ளன. இந்தக் கீரைகள் கிடைக்காதவர்கள் கீரை விற்பவர்களிடம் கொண்டு வரச்சொல்லி வாங்கிக்கொள்ளலாம்.

இன்றைக்கு தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் பெரிய பிரச்னையாக இருப்பது நீரிழிவு, ரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள்தான். இத்தகைய நோய்கள் அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம் முறையான உணவு உண்ணாமையும் வாழ்வியல் மாற்றங்களும் தான். தினமும் ஒரு கீரை வகையை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தோமானால், விரைவிலேயே உடல் ஆரோக்கியத்தையும் பலமடங்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றுவிடும்.

கீரைகளைப் பயிர் செய்யும் விவசாயிகள் கீரைகள் விரைவாக வளரவும், பூச்சி தாக்குதல்கள் இல்லாமல் இருக்கவும் பல்வேறு ரசாயன உரங்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இத்தகைய கீரைகள் நமக்கு எந்த அளவில் பலன் தரும் என்று சொல்வதற்கில்லை.

வீட்டிலேயே நமக்கு கிடைக்கும் குறைவான இடத்திலும் மற்றும் தொட்டிகளிலும் கீரைகளை வளர்த்து சமையலுக்குப் பயன்படுத்தலாம். சிறுதோட்டங்களில் கோவை, மூக்கற்றை, துத்தி, குப்பைக்கீரை, முள்ளுக்கீரை, குப்பைமேனி போன்றவை களைச்செடிகளாகவே முளைத்து கிடக்கும். இவற்றை வளர்ப்பது எளிதானது. தொட்டிகளில் பிரண்டை, தூதுவளை, கரிசலாங்கண்ணி, முடக்கற்றான் போன்றவற்றை வளர்க்கலாம்.

கீரைகளை பருப்புடன் சேர்த்து குழம்பு மற்றும் கூட்டாகவும் பலகீரைகளை ஒன்றாக சேர்த்து, புளி, பூண்டு, மிளகாய், வெங்காயம், உப்பு சேர்ந்து வேகவைத்து மசியலாக கடைந்தும் சாப்பிடலாம். பசி இல்லாமலும் சாப்பிட பிடிக்காமலும் இருப்பவர்களுக்கு, இந்த மசியல் பசியை உருவாக்கிச் சாப்பிடும் ஆவலைத் தூண்டுகிறது.

கீரையைப் பொரித்துச் சாப்பிடுவதால் பலனில்லை. அதோடு வெயிலில் உலர்த்துவதால் கீரையில் உள்ள சத்துக்களும் அழிந்து போகின்றன.

சிறுவர் சிறுமியருக்கு வைட்டமின் குறைபாட்டினால் வாயின் ஓரங்களில் புண்கள் ஏற்படும். அத்துடன் உள்தாடைப்பகுதிகள் மற்றும் நாக்கில் வெண்ணிற புண்கள் உண்டாகும். இதற்கு கிராமங்களில் பாட்டி வைத்தியம் செய்வார்கள். அதாவது, கல்யாண முருங்கை துளிர் இலைகளை பறித்து வெறுமனே மென்று தின்னச்செய்வார்கள். மேலும் துளிர் இலைகளை பருப்பு சேர்த்து கூட்டுச் செய்து சாப்பிடக் கொடுப்பர். இதனால் வியக்கும் வகையில் நல்ல பலன் தெரியும்.

சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் முசுமுசுக்கை கீரையை அரைத்து தோசைமாவில் கலந்து தோசையாக வார்த்து சாப்பிடலாம். அல்லது ஊறவைத்த பச்சரிசி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கைப்பிடி முசுமுசுக்கை இலை, பொரித்த பெருங்காயம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து அடை செய்து சாப்பிட, சளித்தொல்லை பறந்துபோகும்.

வறட்டு இருமலுக்கு தூதுவளை சிறந்த மருந்து. இதைத் துவையலாகச் செய்து சாப்பிட்டு வர இருமல் காணாமல் போகும்.

கிராமங்களில் மட்டுமல்லாது நகரங்களிலும் முருங்கையை வீட்டிற்கொரு மரமாக வளர்த்திருப்பார்கள். அதன் பயன் மிக மிக அதிகம். முருங்கை உடலுக்கு இரும்புச்சத்து அளித்து ரத்த விருத்தியை உண்டாக்கும்.

கருப்பை கோளாறுகளை துத்திக்கீரை நீக்கும். மூட்டில் தேங்கும் வாயுப் பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வருவது முடக்கற்றான். சிறுநீர் நன்றாக வெளியேற முள்ளங்கிகீரை உகந்தது.

பசலையில் சிவப்பு, பச்சை என இரு வகைகள் உள்ளன. இரண்டுமே இரத்த விருத்தியையும் உடலுக்கு வலுவும் அளிக்கின்றன. வயலில் தேங்கும் தண்ணீரில் நான்கு இலைகளுடன் மிதக்கும் ஆரைக்கீரை சமைத்து சாப்பிட சுவையானது. குடலுக்கும் இதமானது.

இரும்புச்சத்து கொண்ட தண்டுக்கீரை பெண்களின் கருப்பை தொந்தரவுகளைத் தவிர்க்கக் கூடியது. கரிசலாங்கண்ணிகளில் மஞ்சள் நிறப்பூக்கள் கொண்டது உணவுக்கு ஏற்றது. வெள்ளை பூக்கள் கொண்ட கரிசலாங்கண்ணியை கலவைக்கீரையில் சேர்த்துக் கொள்ளலாம்.

தலைமுடி பாதுகாப்பிற்கு காய்ச்சப்படும் எண்ணெயில், கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, சிறுகீரை, மருதாணி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து சிறு அடைகளாகத் தட்டி, நிழலில் உலர்த்தி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சவும். பின்னர் ஆற வைத்து வடிகட்டி எடுத்து கூந்தல் தைலமாக பயன்படுத்திவர, கூந்தல் கருமையாக செழித்து வளர்வதுடன் முடி உதிர்தலும் குறையும்.

தலையில் பொடுகு இருந்தால் பொடுதலை கீரையை அரைத்து தலையில் தடவி, சீயக்காய் தேய்த்துக் குளித்துவர விரைவில் நிவாரணம் கிடைக்கும். மேலும் பொடுதலை கீரையை துவையலாக அரைத்துச் சாப்பிட்டுவந்தால் பொடுகிலிருந்து சீக்கிரமே விடுதலை கிடைக்கும்.


 

Thanks To: Dinamani
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.