மிம்பர் மேடைகளும், சூழ்நிலைக் கைதிகளும்எம்.ஐ அன்வர் (ஸலபி)
மதீனா இஸ்லாமியப் பல்கலைக் கழகம்-

இறையில்லங்களான பள்ளிவாயல்களில் வாரந்தோரும் வெள்ளி மேடைகள் மூலம் மக்களுக்கு நற்போதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஏற்பாடு அல்லாஹ் நமக்கு வழங்கிய ஓர் அருட்கொடை. இந்தவகையில் உண்மைகளைப் பொய்களாகவும் பொய்களை உண்மைகளாகவும் சித்தரிக்கும் ஊடகங்களுக்கு மத்தியுள் எச்சமூகமும் கொண்டிராத மிகப் பெரும் பலம் வாய்ந்தஓர் ஊடகச் சாதனத்தை நாம் கொண்டிருக்கிறோம் எனலாம். எனவே முஸ்லிம் சமூகத்தை சீரான பாதையில் வழி நடாத்திச் செல்லும் பணியில் இத்தகைய மிம்பர் மேடைகளுக்குக் காத்திரமான வகிபாகம் உண்டு என்பதை நாம் மறுக்க முடியாது.

உலகத்திலுள்ள எந்தவொரு சமயத்திலும் காணப்படாத இஸ்லாத்திற்கு மாத்திரம் சொந்தமான ஒரு சிறப்பம்சமாக ஜூம்ஆத் தினம் திகழ்கிறது. ஒரே தினத்தில் சகலரையும் ஒரே தலமைத்துவத்தின் கீழ் அணி திறளச் செய்வது என்பது அசாத்தியமான அம்சமாகும். ஆனால் இங்கு அது சாத்தியமாகின்றது. உலகத்திலுள்ள மக்களுக்கு ஒரே நேரத்தில் ஒரே செய்தியை எடுத்து வைக்கும் ஓர் சர்வதேச வலைப்பின்னலாக ஜூம்ஆ காணப்படுகின்றது. அதாவது மூலை முடுக்குகளிளெல்லாம் வாழும் முஸ்லிம்கள் இந்த வெள்ளிக்கிழமை தினத்தில் பள்ளிவாயல்களில் ஒரே நேரத்தில் ஒன்று கூடுகின்றனர். இதனால் மக்களுக்கு அனைத்து விடயங்களையும் சாராம்சமாக ஒரே தினத்தில் சுட்டிக்காட்ட முடியும்.

இஸ்லாம் ஐக்கியத்தையும் சமூக ஒற்றுமையையும் அதிகமாக வலியுறுத்துகிறது. இது ஏனைய சமுதாயத்தில் நாம் பெரிதும் எதிர்பார்க்க முடியாத ஒரு விடயமாகும். பல நபர்களாக பிரிந்து கிடக்கும் முஸ்லிம் உம்மாவை ஒரே இடத்தில் ஒன்று சேரச் செய்யும் ஒரு மாநாடாக ஜூம்ஆ விளங்குகிறது. இந்த ஏற்பாட்டின் மூலமாக இஸ்லாமிய சகோதரத்துவ வாஞ்சை பலப்படுத்தப்படுகிறது. நீண்ட நாட்களாகக் கண்ணுறாமலிருந்த தனது உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பினை வெள்ளிக் கிழமை ஜூம்ஆ வழி சமைத்து தருகிறது.

இத்தகைய எண்ணற்ற சிறப்புக்களைக் கொண்ட ஜூம்மா தினத்தின் குத்பா பேருரை எப்படி இருக்கவேண்டும் என்பதை அறிந்து கொள்வது இன்றியமையாததாகும். இன்றுள்ள மார்க்க அறிஞர்களில் பெரும் பாலானோர் எமக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரும் ஊடக சாதனமாகிய மிம்பர் மேடைகளைச் சரியான முறையில் பயன்படுத்துவதில்லை என்பது கண்கூடு. இங்கு நான் திறமைமிக்க கதீப்மார்களை விதிவிலக்காக்கியே பேசுகிறேன். அவர்களது மனம் வேதனைப்படுமானால் என்னைப் பொருத்தருள்வார்களாக-

அல்லாஹ்வின் மீது கொண்ட அச்சத்தினாலும் பயபக்தியினாலும் ஏதோ சில விடயங்களைக் கேட்டு திருந்துவோம் என்ற நோக்கத்தில் மக்கள் ஜூம்ஆவுக்கு வருகின்றனர். ஆனால் இங்கு பேசப்படும் பல விடயங்கள் கால சூழ் நிலைக்குப் பொருத்தமான வகையில் அமையாவிடின் கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு அலுப்பும் சழிப்பும் வந்துவிடுகிறது.

எவ்விதமான சுவாரஷ்யமுமில்லாமல் மக்களுக்குப் புரியாத பாஷையில் பல மணி நேரங்களாக வெறுமனே மார்க்கச் சட்டங்களை மாத்திரம் திணிப்பதால் எதிரபார்க்கப்படும் பலனை நிச்சயமாக அடைய முடியாது. சில நேரங்களில் அவர் பேச வந்த தலைப்பு எதுவாகவோ இருக்கும் ஆனால் அவரோ தலைப்பை விட்டும் வெகு தூரம் சென்றிருப்பார். அது தவிர நான் பேச வந்த தலைப்பைவிட்டும் எங்கோ போய் கொண்டிருக்கிறேன் என்று அவரே தன் வங்கரோத்து நிலையை ஒப்புக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் உண்டு. இதனால் குறித்த ஜூம்ஆ பிரசங்கம் முடியும்வரை கேட்டுக்கொண்டிப்போர் சூழ்நிலைக் கைதிகளாகவே வீற்றிருக்கின்றனர். தொழுகை முடிந்த மாத்திரத்திலேயே நிம்மதி பெரும் மூச்சு விட்ட நிலையில் வீடுகளை நோக்கி பயணிக்கின்றனர்.

தற்கால குத்பாக்களின் பரவலான போக்கை அலதானிக்கையில் குத்பாக்களை நிகழ்த்துகின்ற அநேக ஆலிம்கள் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் செயற்படுகிறார்களா? என்ற கேள்வி எம்மை நோக்கி எழுகிறது. தாம் எந்த இடத்தில் யாருக்கு முன்னால் பேசுகிறோம் அவர்களது அறிவு சிந்தனை மட்டம் என்ன? என்பதையெல்லாம் துளியும் கவனத்திற்கொள்ளாமல் வெறும் கிராமத்து மக்களுக்கு முன்னால் அமெரிக்க மேலாதிக்கம் பற்றியும் யூதர்களின் சதித்திட்டங்கள் பற்றியும் எடுத்துக் கூறி கேட்டுக் கொண்டிருப்பவர்களை பெரும் ஒரு கருத்துச் சிக்கலுக்கு உள்ளாக்குகின்றனர்.

உண்மையில் சில கதீப்மார்களை நோக்கி முன்வைக்கப்படும் பொதுவான ஒரு குற்றச்சாட்டு யாதெனில் தமது பேச்சுக்களின் போது அரைத்த மாவை திரும்ப திரும்ப அரைப்பதாகும். காரணம் வார்த்தைப் பஞ்சமும் போதிய தயார் நிலையில் இல்லாமையும் என்று கூறலாம். விளைவு கேட்டுக்கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் நித்திரையில் ஆழ்ந்துவிடுகின்றனர். இதனால் சற்று நேரம் இளைப்பாறிச் செல்லும் இடைத்தங்கள் முகாம்களாக இன்றைய ஜூம்ஆ மஸ்ஜித்கள் மாறியுள்ளமையை நாம் இங்கு வேதனையோடு கூற வேண்டியுள்ளது.

சில நேரங்களில் கதீப்மார்கள் தமது குத்பாக்களின் கால நேரம் அதிகமாக இருக்கவேண்டும் என நினைத்து செயற்படுகின்றனர். இந்த அணுகுமுறை அவசியம் மாறவேண்டும். ஏனெனில் ஜூம்ஆவுக்கு சமூகம் தரும் நபர்களுல் பல வகையானோரும் இருப்பாகள். குறுகிய விடுமுறையில் வந்த அரச உத்தியாகத்தர்கள் தமது வியாபார நிலையங்ளை மூடிவிட்டு வந்தவர்கள் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்கள் நோயாளிகள் பயணிகள் என பல இடர்பாடுகள் கொண்டவர்களும் இருப்பர்.

இச்சந்தர்ப்பத்தில் கதீப்மார்கள் அவர்களது நிலைமைகளை சிந்திக்காமல் உரைகளை நீட்டுவது குத்பாக்களின் நோக்கங்கள் பிழைத்துவிடுவதற்கு அவர்களே காரணமாக அமைந்துவிடும் ஒரு துரதிஷ்டமான நிலை தோன்றும். கதீப்மார்கள் தமது குத்பாக்கள் நீண்டதாக அமையவேண்டும் என நினைப்பதை விட அவை சுருக்கமாக இருந்தாலும் சொல்லப்படும் விடயங்கள் மக்கள் மன்றத்துக்கு சரியான முறையில் போய் சேர வேண்டுமென சிந்தித்து செயற்பட வேண்டும். அத்தோடு குத்பாக்களை சுருக்குவதும் தொழுகைகளை நீட்டுவதுமே நபி வழியாகும். இதனை உலமாக்கள் மறந்து செயற்படுவது வேதனையான விடயமே!

உண்மையில் குத்பாக்கள் மக்களின் ஈமானிய உணர்வுகளைத் தட்டியெழுப்பி வணக்க வழிபாடுகளில் ஆசையூட்டி தீமைகளிலிருந்து தடுத்து நன்மைகளின் பால் தூண்டி மறுமை வாழ்வுக்கு மக்களை தயார்படுத்தக்கூடியதாக அமையவேண்டும். மக்களின் சொந்த மொழி நடையிலேயே அவர்களது சிந்தனைகளுக்கு உத்வேகமளிக்கும் தொணியில் மார்க்கத்தின் ஏவல் விலக்கல்களை எடுத்துரைத்தல் வேண்டும். அவற்றை உரை நடை முறையில் சொல்லிக் கொண்டிருக்காமல் அவற்றிலிருந்து படிப்ப்பினைகளை எடுத்து அனைவருக்கும் புரிகின்ற அடிப்படையில் பேசவேண்டும்.

தவிர உலகின் சமகால நிலமைகள் பற்றியும் பேசவேண்டும். தேசிய சர்வதேச பிரச்சினைகள், இனமோதல்கள், பயங்கரவாதம், ஒழுக்கச் சீர்கேடுகள் போன்ற நவீன காலப் பிரச்சினைகளையும் ஷரீஆவின் நிலைக்களனில் நின்று மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். நாட்டு நடப்புக்கள் பற்றியும் நமது கடமைகள் பற்றியும் மக்களுக்கு விளக்கவேண்டும்.

ஜூம்ஆவுக்கு சமூகம் தந்துவிட்டு வீடு திரும்பும் போது மக்கள் மனதில் ஒரு திருப்பமும் மாற்றமும் ஏற்படவேண்டும். அல்லாஹ்வுடனான அவர்களது தொடர்பும் அடியார்களுடனான அவர்களது உறவும் அதிகரிக்கவேண்டும். அறிஞர்கள் மத்தியில் கருத்து முரண்பாடான இஸ்லாமிய சட்டவிவகாரங்கள் பேசப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். அல்லது குறிப்பிட்ட விடயங்கள் மிகக் கவனமாக முன்வைக்கப்படல் வேண்டும். இல்லாத பட்சத்தில் தெளிவுக்கு பதிலாக குளப்பம் ஏற்பட்டு மக்கள் பெரும் சிந்தனைச் சிக்கலுக்கு தள்ளப்படுவது தவிர்க்கமுடியாமல் போய்விடும்.

அத்தோடு ஒரு சில கதீப்மார்கள் தமது தனிப்பட்ட கோபதாபங்களைப் கொட்டித் தீர்க்கும் களமாக மிம்பர் மேடைகளை ஆக்கியிருப்பது துரதிஷ்டமான நிலையாகும். இன்று குத்பாக்கள் சோபையிழந்து காணப்படுவதற்கு இயக்கரீதியான இனவாதமும் தனிநபர் பற்றும் ஒரு வகையில் காரணங்களாகும். ஒரு குறிப்பிட்ட மஸ்ஜிதில் ஒரு சிலரின் ஆதிக்கமே தலைவிரித்தாடும். இதனால் இளம் தாயிக்கள் புறக்கணிக்கப்படுவதற்கும் ஆதிகால லெப்பைமாரே தொடர்ந்தும் மேடை ஏறுவதுமான நிலை தோன்றுகிறது.

உண்மையில் அண்மைக்காலமாக குத்பாக்களில் ஒரு சில மாற்றங்களை எம்மால். அவதானிக்க முடிகிறது. எனினும் இந்த நிலை இன்னும் முன்னேற வேண்டும். குத்பாக்கள் நன்கு திட்டமிடப்படல் வேண்டும். சமுதாயத்திற்கு மார்க்கம் படித்தவர்கள் மீது மிகுந்த மதிப்பு இருக்கிறது. மார்க்க விவகாரங்களை அறிவதில் ஆர்வம் இருக்கிறது. எனவேதான் இந் மிம்பர் மேடைகள் உயிர்த்தெழுவதற்கான சமிக்ஞைகள் மிகக்கிட்டிய காலத்தில் தெரிகிறது என்ற பெரு மூச்சோடு வார்த்தை அளவில் விடைபெறுகிறேன்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.