நாடாளுமன்ற சிங்கம் குலாம் முஹம்மது மஹ்மூது பனாத்வாலாஇவர் 20 கோடி இந்திய முஸ்லிம்களின் குரலையும் தம் நாவின் நரம்புகளாக்கி வைத்திருந்தவர். ஷரிஅத் சட்டங்களுக்கு இந்திய அரசாலும், நீதிமன்றங்களாலும் துரும்பளவேனும் பாதிப்பு ஏற்பட இருந்த தருணங்களிலெல்லாம் சிலிர்த்தெழுந்து தம் சிம்ம கர்ஜனையால் இந்திய பாராளுமன்றத்தை அதிர வைத்தவர்.

பனாத்வாலா அவர்கள் குஜராத் மாநிலம் கட்ச் பகுதி மேமன் முஸ்லிம்கள் குடும்பத்தைச் சார்ந்தவர். 15.8.1933ல் மும்பையில் பிறந்தார். மெத்தப்படித்தவர் ஆசிரியராக தொண்டுகள் ஆற்றி வந்தவர். முழுநேர சமுதாய அரசியல் பணியில் தன்னை ஈடுபடுத்தி கொள்வதற்காக ஆசிரியர் பணியை உதறியவர். 1960 ல் மும்பை முஸ்லிம் லீகின் பொதுச்செயலாளர் ஆனார். 1967ல் முதன் முதலாக மராட்டிய மாநில சட்டசபைக்கு முஸ்லிம் லீகின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 1972ல் இரண்டாவது முறை சட்டசபை உறுப்பினரானார். தம் 10 வருட சட்டமன்ற பணியில் பல்வேறு விவாதங்களில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து அதிசயத்தக்க விதத்தில் வாதங்களை முன்வைத்தார். இவர் பங்கு கொள்ளாத விவாதங்களே இல்லை. என்னும் அளவிற்கு அனைத்து துறைகளுக்கான விவாதங்களிலும், குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினரை பாதிக்கும் அனைத்து விவாதங்களிலும் பங்கெடுத்தவர். மராட்டிய மாநில முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலை பற்றிய தனிநபர் தீர்மானம், முஸ்லிம் தனியார் சட்டம் குறித்தான விவாதம், பசுவதை தடுப்புச்சட்ட விவாதம் – அவுரங்கபாத் மற்றும் நாக்பூர் மதக் கலவரங்களை பற்றிய விவாதம் – வந்தே மாதரம் பாடல் பற்றிய சர்ச்சைக்குள்ளான விவாதம் – குடும்ப கட்டுப்பாடு திட்டம் குறித்தான விவாதம் – கட்டாய குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை குறித்த விவாதம் ஆகியவை வரலாற்றின் பக்கங்களில் என்றும் அவர் புகழ் பாடும் விவாதங்களாகும். இது தவிர கல்வி, வேலைவாய்ப்பு, குடிநீர் தேவை, மக்களின் அடிப்படை தேவைகள் பற்றிய விவாதங்களிலும் பங்கெடுத்து ஆக்கப்பூர்வமான தன் விவாதங்களை அழகாக முன்னெடுத்து வைத்தவர்.
இவரின் வாத திறமையும், சமுதாயம் குறித்த பார்வையும், மராட்டிய மாநிலத்திற்கு மட்டுமே குடத்திலிட்ட விளக்கு போல் இருந்துவிட கூடாது என்பதற்காக இவரை குன்றின் மேல் ஏற்றிய விளக்காக 1977ல் முஸ்லிம் லீக் இவரை கேரள மாநிலம் பொன்னானி பாராளுமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்தது. தொடர்ந்து 7 முறை அதே தொகுதியிலிருந்து பாராளு மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மராட்டிய மாநில சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய பணிகளை விட பலமடங்கு அதிகமாக பாராளுமன்றத்தில் ஆற்றினார்.
இந்தியாவிலே பொது சிவில் சட்டம் கொண்டுவர வகை செய்யும் இந்திய அரசியல் சாசனத்தின் 44-வது பிரிவை ரத்து செய்யகோரும் மசோதவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து இந்திய தேசத்தின் அடிப்படையான, வேற்றுமையில் ஒற்றுமை, சமயசார்பின்மை, சமய நல்லிணக்கம், ஆகியவற்றின் இலக்கணத்தை இந்திய பாராளுமன்றத்திற்கு வகுப்பெடுத்தவர். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை தன்மையை காப்பாற்ற வாதாடி வென்றார். அஸ்ஸாம் கலவரங்களில் அப்பாவி முஸ்லிம்கள் கொன்றொழிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டு மென கர்ஜனை புரிந்தார். பாபரி மஸ்ஜித் தகர்ப்பிலே பங்கு கொண்டு குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்ட திரு.எல்.கே. அத்வானி, டாக்டர் முரளி மனோகர் ஜோஷி, குமாரி உமாபாரதி ஆகிய மூவரையும் மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்ககோரி வீரச்சமர் புரிந்தார் – “”””ராம ஜென்ம பூமி நியாஸ்’’ “”””விஷ்வ இந்து பரிஷத்”” ஆகிய அமைப்புகளின் மதவாத பாஸிச நடவடிக்கை களை பாராளுமன்ற விவாதங்களில் தோலுரித்துக் காட்டினார். குறிப்பாக ஷாபானு வழக்கின் தீர்ப்பு மூலம் இந்தியாவில் உச்சநீதிமன்றம் ஷரிஅத் சட்டத்தினை கேள்விக்குள்ளாக்கிய போது ஷரிஅத் சட்டத்தை பாதுகாக்க தனிநபர் மசோதா கொண்டுவந்தார். இந்த மசோதா பாராளுமன்றத்தின் 4 கூட்டத்தொடர்களில் ஏழு அமர்வுகளில் கிட்டத்தட்ட 12 மணிநேரம் 21 நிமிடங்கள் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டது. ஒரு தனி நபர் மசோதா இவ்வளவு நேரம் விவாதத்திற்குள்ளானது பாராளுமன்ற வரலாறாகும். இந்த விவாதத்தின் போது மத்திய அரசு சார்பில் தாமே இந்த பொருள் குறித்து அரசு அலுவல் மசோதா கொண்டு வருவதாக வாக்களித்து பனாத்வாலா அவர்களின் தனிநபர் மசோதாவை திரும்ப பெற கோரியது. அதன் பின்னர் அன்றைய சட்ட அமைச்சர் திரு. ஏ.கே.சென் அவர்கள் பனாத்வாலா அவர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்து அதன் பின் முஸ்லிம் பெண்கள் (மணவிலக்குக்கு பின்னரான உரிமைப் பாதுகாப்பு) மசோதாவை தாக்கல் செய்து அதை சட்டமாக்கினார்.
2007 ல் தனது தள்ளாத வயதிலும் தமுமுக நடத்திய டெல்லிப் பேரணியில் கலந்து கொண்டு சிங்கமாக கர்ஜித்தவர்.
நன்றி – ஜீவகிரிதரன்.
பனாத்வாலா அவர்கள் 25.6.2008- ல் இம் மண்ணுலகை விட்டு மறைந்தார். அவரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.