குஜராத் கோப்புகள்: மறைக்கப்பட்ட உண்மைகளை புத்தகமாக்கிய ரானா அயூப்தெஹல்கா ஏட்டின் ஆசிரியராக இருந்தவர் ரானா அயூப்,“குஜராத் கோப்புகள் : மறைக்கப் பட்ட விவரங்கள்’’ என்று குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் முஸ்லிம் களுக்கு எதிராக நடைபெற்ற படுகொலைகளின்போது நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூர்ந்து ஒரு நூல் எழுதி இப்போது வெளியாகி இருக்கிறது. ரானா அயூப், அப்போது குஜராத் அரசாங்கத்தின் உள்துறை செயலாளராக இருந்த அசோக் நாராயணன் என்பவரைப் பேட்டி கண்டு, ரகசியமாக ஒலிப்பதிவுசெய்து அதனை இந்த நூலில் வெளியிட்டிருக்கிறார். அது தொடர்பான அம்சங்கள் வருமாறு:

தி ஒயர் இணைய இதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்: ச. வீரமணி

நான் அவரைப் பார்க்கச் சென்ற சமயத்தில், மதிய உணவு தயாராய் இருந் தது. அன்றைய தினம் நான் அவரிடம் உள்துறை அமைச்சர் என்ற முறையில் அவருக்கிருந்த மிக முக்கியமான கடமைகள் குறித்து அவரிடம் கேட்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். எனவே சூழலை மிகவும் இயல்பானதாக அமைத்துக் கொண்டு பேட்டியைத் தொடர விரும்பினேன். நாராயணன் எவ்வித சங்கடமுமின்றி மிகவும் இயல்பாகப் பேசினார். உணவு அருந்தியபின் அருந்தும் தேநீருக்காக நாங்கள் அமர்ந்திருந்த சமயத்தில், நரேந்திர மோடி கலவரங்களை எப்படிக் கையாண்டார் என்ற விவரங் களைக் கூறத் தொடங்கினார். அப்போது நான் அவரிடம், “உங்களுக்குத் தெரியுமா மிஸ்டர் நாராயணன்? கடந்த ஒரு வாரமாக உங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, கூகுள் தேடு பொறியில், நான் தேடியபோது, உங்கள் பெயர் குஜராத் கலவரங்கள், மோடி மற்றும் ஏராளமான ஆணையங்கள் குறித்த இணைப்புகளைக் காட்டின. அது எனக்கு மிகுந்தசங்கடத்தை அளித்தது. இப்போதுள்ள சூழல் உங்களுக்கு மிகவும் சங்கடத் தைத் தந்திருக்கும். மிகவும் உயர்ந்தகொள்கையுடனும், மிகவும் மனிதாபி மானத்துடனும் இருக்கும் உங்களுக்கு எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்று கற்பனை செய்துதான் என்னால் பார்க்க முடிந்தது’’ இவ்வாறு எங்கள் உரையாடல் துவங்கியது.

கேள்வி : “கலவரத்தைக் கட்டுப்படுத் திட மிகவும் மெதுவாகப் போகுமாறு முதல்வர் (மோடி) உங்களைக் கேட்டுக்கொண்டபோது, உங்கள் முகம் சிவந்திருக்க வேண்டும்.

பதில்: எப்போதுமே அவர் அவ்வாறு செய்ததில்லை. அதேபோல் எழுத்துப்பூர்வமாக எப்போதும் அவர் கேட்டுக்கொண்டதுமில்லை. அவருக்கு ஆட்கள் இருந்தார்கள். அவர்களாலும், விசுவ இந்து பரிசத் மூலமாகவும் கீழே பணிபுரியும் காவல்துறை ஆய்வாளர்கள் வரை அவர்கள் கட்டளையிடுவதை செய்வதற்கு ஆட்கள் இருந்தார்கள். அப்படியென்றால், நீங்கள் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தீர்களா?நிச்சயமாக. “ஏன் இவ்வாறு நடக்கிறது?’’ என்று நாங்கள் கேட்போம். ஆனால் உண்மையில் எங்களையும் மீறி ஏற்கனவே எல்லாமும் நடக்கத் துவங்கிவிட்டன.

விசாரணைக் குழுக்களுக்கான சான்று எதுவும் இல்லையா?

பல சமயங்களில், அமைச்சர்கள் வீதிகளில் நின்று கொண்டு, கூட்டத்தினருக்குக் கட்டளை பிறப்பித்துக் கொண் டிருந்தார்கள். நான் முதல்வர் (மோடியின்) அறையில் உட்கார்ந்திருந்தபோது அது போன்ற ஒரு நிகழ்வு நடந்தது. எங்களுக்கு ஓர் அழைப்பு வந்தது. நான், ஓர் அமைச்சர் இதனைச் செய்து கொண்டிருப்பதாக அவரிடம் (மோடியிடம்) தெரிவித்தேன். ஆகையால் அவர், அவரை திரும்ப அழைத்தார்.

அவர் ஒரு பாஜக அமைச்சரா?

ஆம், அவருடைய அமைச்சர் தான், இளைஞர்.

அங்கே மாயா கோட்னானியும் இருந்தாரா?

அவர் அரசாங்கத்திற்கு எதிராகத் திரும்பியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஆம், அவரும் இருந்திருக்க வேண்டும்.

அது பைத்தியக்காரத்தனமாக இருந்ததா?

நான் சிலவற்றை உங்களிடம் சொல்கிறேன். முஸ்லிம் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை எனக்குத் தெரியும். அவர் என்னை அழைத்தார். அவர் என்னிடம், “ஐயா, என்னைக் காப்பாற்றுங்கள், என் வீடு சுற்றிவளைக்கப்பட்டிருக்கிறது’’ என்றார். நான் போலீஸ் கமிஷனரைக் கூப்பிட்டேன். அவர் அந்த அழைப்பை எடுத்தாரா, இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். அடுத்த நாள் அந்த அதிகாரி என்னை அழைத்தார் “ஐயா, எப்படியோ நேற்று நான் காப்பாற்றப்பட்டு விட்டேன். ஆனால் இன்று அநேக மாக முடியாது என்றே தெரிகிறது’’ என்றார். எனவே, நான் போலீஸ் கமிஷனரை மீண்டும் அழைத்தேன். அந்த அதிகாரியைக் காப்பாற்றுங்கள் என்று நான் அவரிடம் கேட்டுக்கொண்டேன். பதி னைந்து நாட்கள் கழித்து, அந்த அதிகாரி என் அறைக்குள் நடந்து வந்தார். “ஐயா, அந்தக் கதைதான். காலனியில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தார்கள். முஸ்லிம்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர் என்னிடம் மேலும் கூறினார். “நீங்கள் போலீசாரை அழைத்தபோது, போலீசார் அங்கே வந்துவிட்டார்கள், ஓர் அமைச்சர் அந்தக் கும்பலுக்கு தலைமை தாங்கி கட்டளையிட்டுக் கொண்டிருந்தார். போலீஸ் அதிகாரி அந்த அமைச்சருக்கு ‘சல்யூட்’ அடித்தார். அவரும் போலீஸ் அதிகாரியைப் பார்த்தார். அவர்களிடம் எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது என்றார். பின்னர் எப்படியோ ஒரு போலீஸ் அதிகாரி என்னை அடையாளம் கண்டுகொண்டு என்னைக் காப்பாற்றினார்.’’

அந்த அமைச்சர் கைது செய்யப்பட்டாரா?

அனைவருமே வெளியேதான் இருக்கிறார்கள். ஆனால் சிலராவது ஏதாவது செய்ய வேண்டும். யாராவது சாட்சி சொல்லவில்லை என்றால், எப்படி நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியும்?

யாருக்கும் அதைச் செய்வதற்கான தைரியம் இல்லையா?

யாருக்கும் அதைச் செய்வதற்கான தைரியம் இல்லை.

அமைச்சர்களுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பது?

நான் ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்லணும். ஒரு தடவை விஜிலன்ஸ் கமிஷனராக இருந்தேன். அது உள்துறை அமைச்சர் பதவிக்கு இணையான பதவிதான். அமைச்சர்களுக்கு எதிராக புகார் வந்தால் விசாரிப்பதற்காக லோக் ஆயுக்தா என்னும் அமைப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கிறது அல்லவா? அதுபோன்ற அமைப்பு. ஆனால் யாரும் அமைச்சர்களுக்கு எதிராக புகார் எதுவும் கொடுக்கவில்லை. லஞ்சம், ஊழல் குறித்தே அமைச்சர்களுக்கு எதிராகபுகார் அளிக்க மக்கள் முன்வராதபோது, கலவரத்தைத் தூண்டும் அமைச்சர்கள் குறித்து புகார் அளிக்க எப்படி அவர்களுக் குத் தைரியம் வரும்? அவர்களாக முன்வந்து சொல்லாதவரை, என்னசெய்ய முடியும்? மேலும் இந்தப் பேர் வழிகள் கலவரத்தைத் தூண்டுவதற்கு என்றுசில சங்கேத பாஷைகளை பயன்படுத்து கிறார்கள். தொலைபேசியில், “அந்தஏரியாவில் கலவரம் எதுவும் நடைபெற வில்லை, பார்த்துக்கொள்ளுங் கள்’’ என்றுவந்தால், “அந்த ஏரியாவில் கலவரத்தைத் தூண்டுங்கள்,’’ என்று அர்த்தம். அவர்கள்தாங்களாகவே எதையும் செய்வது இல்லை, அவர்களுக்குக் கீழ் பல அடுக்குகளில் ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். அடுத்து முதல் தகவல் அறிக்கையே கலவரத்தை நடத்திய கும்பலுக்கு எதிராகத் தான் பதிவு செய்யப்படுகின்றன. ஒரு கும்பலை எப்படிக் கைது செய்ய முடியும்?

கலவரங்களைக் குறித்து விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆணையங்கள் எந்த விதத்திலும் உதவிகரமாக இல்லையா?

நானாவதி கமிஷன் என்ற ஒன்று இருந்தது. அதனால் இதுவரை எவ்விதமான அறிக்கையும் கொடுக்க முடியவில்லை. நான் உள்துறை அமைச்சராக இருந்த போது, எழுத்துப்பூர்வமாக உத்தரவு வந்தாலன்றி எதுவும் நடக்கக்கூடாது என்று கட்டளை பிறப்பித்திருந்தேன். பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது தலைமைச் செயலாளர் சுப்பாராவ் என்னை அழைத்தார். விசுவ இந்து பரிசத்தலைவர் பிரவீண் தொகாடியா ஊர்வலம் நடத்த அனுமதி வேண்டும் என்கிறார், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றார். நான், “அவ்வாறு அனுமதி தரக் கூடாது, ஏனெனில் விஷயங்கள் நம் கையை விட்டுப் போய்விடும்’’ என்றேன். இது குறித்து முதல்வருக்குத் தெரிய வந்திருக்கிறது. அவர், என்னிடம், “எப்படி நீங்கள் இவ்வாறு கூறமுடியும்? அவர்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்,’’ என்றார். அப்போது நான், “ஓ.கே., எனக்கு எழுத்துப்பூர்வமாக கட்டளை பிறப்பியுங்கள்’’ என்றேன். அவர் (மோடி) என்னை முறைத்துப் பார்த்தார்.

எனவே, நீங்கள் அந்தக் கூட்டத்தில் இல்லையா?எந்தக் கூட்டத்தில்?

கலவரங்களைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் மந்தமாக நடவடிக்கை எடுங்கள் என்று முதல்வர் அதிகாரிகள் மத்தியில் கேட்டுக் கொண்டதாக ஒரு பிரச்சனைக்குரிய கூட்டம் நடந்ததாகக் கூறுகிறார்களே, அந்தக்கூட்டத்தில்?ஆம், ஆம். நானும் அந்தக் கூட்டத்தில் இருந்தேன். இதுதொடர்பாக இல்லை என்று முன்பு உங்களிடம் சொன்னேன்.

ஆனால், முதல்வர் ஏன் இப்படி நடந்து கொண்டார்? பாஜகவில் இருப்பதுதான் காரணமா?

கலவரங்களின்போது விசுவ இந்து பரிசத்தை அவர் ஆதரித்ததற்குக் காரணம், இந்து வாக்குகள் தேவை என்பதற்காகவே அவர் இதை செய்தார். அவர் என்ன செய்ய வேண்டும் என்று விரும்பினாரோ அதை அவர் செய்தார். அது நடந்தது.

ஆனால் அவர் மெதுவாகப் போங்கள் என்று கேட்டுக் கொண்டாரே?

கூட்டத்தில் அவர் அப்படி சொல்ல வில்லை. ஆனால் அவருடைய ஆட்களுக்கு சொல்லி இருப்பார். விசுவ இந்து பரிசத் மற்றும் டாண்டன் மற்றும் சில அதிகாரிகளுக்கும் சொல்லி இருப்பார். ஓர் அதிகாரி என்ற முறையில் அவர்கள் கிழித்த கோட்டின்படிதான் செல்ல வேண்டும்.

ஆனால், டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ்-ஆக இருந்த சக்ரவர்த்தி அவர்கள் கிழித்த கோட்டின்படி செல்லவில்லையே?

நாங்கள் இரண்டு பேர் மட்டும் தான் அப்படி இருந்தோம். நாங்கள் எங்கள்கடமையைச் செய்தோம். “நான் வேலை யில் சேர்ந்தபோது, மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டேனே ஒழிய, ஆளும் கட்சிக்கு சேவை செய்ய அல்ல,’’ என்று நான் அவர்களிடம் கூறினேன்.

மற்றவர்கள் ஏன் உங்களைப் போல் நடந்துகொள்ளவில்லை.

ஏனெனில் அவர்கள் எப்படியாவது காலத்தை ஓட்ட வேண்டியிருந்தது. அவர்களுக்கு என்று சில கடமைகள் இருந்தன. அதனால் அவர்கள் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. சக்ரவர்த்தியை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குப்பிறகு அவருக்குப் பதவி உயர்வே கிடையாது. அயல்நாடுகளுக்கு அவர்அனுப்பப்படவில்லை. எனினும் தன் மனசாட்சிப்படி அவர் நடந்து கொண்டார்.

மோடி நடத்திய அந்தப் பிரச்சனைக்குரிய கூட்டம் குறித்து வெளியில் உள்ள மக்களுக்கு எப்படித் தெரிய வந்தது?

ஹரேன் பாண்டியா என்ற ஓர் அமைச்சர். அவர்தான் இது குறித்து பத்திரிகைகளிடம் சொன்ன முதல் ஆள்.

அந்தக் கூட்டத்தில் இருந் தவர்கள் யார், யார்?தலைமை செயலாளர், கூடுதல் தலைமை செயலாளர் ((ACS)), உள்துறை செயலாளர், காவல் துறைத் தலைவர் (DGP)), அதிகாரிகள்.

மோடியின் மதிப்பு அப்போது எப்படி இருந்தது?

அவரைக் கும்பிட்டனர், சனாதன இந்துக்கள் அவர்தான் கொடியைப் பிடித்திருப்பதாக நம்பினார்கள்.

அவர் ஒரு தரப்பினருக்கு மட்டுமே செயல்பட்டதாக அது அமைந்திடவில்லையா?

அவர் கோத்ரா நிகழ்வுகளுக்காக மன்னிப்பு கோரி இருக்க முடியும், கலவரங்கள் நடந்ததற்கு மன்னிப்புக் கோரி இருக்க முடியும்.

கோத்ராவில் இறந்தவர்களின் சடலங்களை தலைநகருக்குக் கொண்டு வந்தது, முடிவுகள் எடுப்பதில் தாமதித்தது போன்ற செயல்களில் ஈடுபட்டு கலவரத்தை அதிகப்படுத்தும் விதத்தில் மக்களைத் தூண்டினார் என்றும் இவ்வாறு மோடி ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டார் என்றும் எனக்குக் கூறப்பட்டிருக்கிறது. அகமதாபாத்திற்கு சடலங்களைக் கொண்டுவர வேண்டும் என்று முடிவு எடுத்தது அவர்தான் என்று நான் ஓர் அறிக்கை கொடுத்திருந்தேன்.

அப்படியானால் ஆட்சியாளர்கள் உங்களுக்கு எதிராக இருந்திருக்க வேண்டுமே?

இதோ பாருங்கள், சடலங்கள் அனைத்தையும் அகமதாபாத்திற்குக் கொண்டுவந்ததுதான் அனைத்துப் பிரச்சனைகளும் கொழுந்துவிட்டெரிய காரணமாகும். இந்த முடிவை எடுத்தது அவர்தான்.

கலவரத்தைத் தூண்டுவதற்கு என்று சில சங்கேத பாஷைகளை பயன்படுத்துகிறார்கள். தொலைபேசியில், ‘அந்த ஏரியாவில் கலவரம் எதுவும் நடைபெறவில்லை, பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று வந்தால் ‘அந்த ஏரியாவில் கலவரத்தைத் தூண்டுங்கள்’ என்று அர்த்தம்.

நன்றி : தீக்கதிர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.