ஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 06
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அழ்ழாஹ்வையும்,  இறுதி நாளையும் நம்பி இருந்தால் அழ்ழாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அழ்ழாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.” (அல்குர்ஆன் 4:59)
மேலே மத்ஹப்வாதிகள் தமது மத்ஹபுக் கருத்துக்களை நியாயப்படுத்த மத்ஹபுகளின் பெயரால் ஹதீஸ்களை இட்டுக்கட்டி கூறியுள்ளனர் என்ற விளக்கத்தைப் பார்த்தோம்.  இனி ஹதீஸ்களுக்கு நேர் மாற்றமாக அமைந்துள்ள   மத்ஹபுச் சட்டங்கள் சிலவற்றை நோக்குவோம்.
இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரமாக  அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸும் அமைந்திருக்கின்றது. இஸ்லாத்தை ஏற்ற ஒவ்வொரு முஸ்லிமும் இவ்விரண்டின் அடிப்படையிலும் தமது வாழ்வின் எல்லா அம்சங்களையும் அமைத்துக்கொள்ள வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கின்றது.
மத்ஹபு நூற்களைப் பொறுத்த மட்டில் அவற்றில் அல்குர்ஆனுக்கு மாற்றமான சட்டங்கள் காணப்படுவது போல் நபிவழிக்கு நேர் முரணான சட்டங்களும் மலிந்து காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை நோக்குவோம்.
01. ஒருவரோ அல்லது பலரோ பள்ளிவாயலுக்கு கூட்டுத்தொழுகைக்காக வந்து இமாமை எந்த நிலையில் கூட்டுத்தொழுகையில் காண்கின்றார்களோ, அவர்கள் அந்த இமாமுடன் சேர்ந்து தொழ வேண்டும்.
இதுதான் நபிவழியும் இஸ்லாத்தின் சட்டமுமாகும். இதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.
‘(கூட்டுத் தொழுகைக்காக) இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்கு நடந்து செல்லுங்கள். அப்போது நிதானத்தையும், கண்ணியத்தையும் கடைப்பிடியுங்கள். அவசரப்பட்டு ஓடிச் செல்லாதீர்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்) தைத் தொழுங்கள், உங்களுக்குத் தவறிப் போனதை (பின்னர்) பூர்த்தி செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-636)
ஆனால் இதற்கு நேர் மாற்றமாக ஷாபி மத்ஹபு நூல் பின்வருமாறு கூறுகிறது.
‘இமாம் கடைசி ரக்அத்தின் ருகூவை முடித்ததன் பின் பள்ளிவாயலுக்கு வரும் கூட்டத்தினர் இமாம் சலாம் கொடுக்கும் வரை (தொழுகையில்) சேராமல் பொறுமையாக இருந்து அவர் சலாம் கொடுத்த பின்பு தனி ஜமாத்தாக தொழ வேண்டும். இதுதான் ஸுன்னத்தாகும். (இக்கருத்து ஷாபி மத்ஹபின் பத்ஹுல் முயீன் எனும் நூலில் பாகம்-02, பக்கம்-06ல் கூறப்பட்டுள்ளது)
‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.’ (அல்குர்ஆன் 4:59)
02. திருமறை குர்ஆனை ஓதுவது இஸ்லாத்தில் வணக்கமாகக் கருதப்படும் ஓர் அம்சமாகும். ஒருவர் திருக்குர்ஆனை மூன்று நாட்களுக்குக் குறைவாக ஓதி முடிப்பதை இஸ்லாம் தடைசெய்துள்ளது.
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று நாட்களுக்குக் குறைவாக ஒரு குர்ஆனை ஓதி முடிப்பதற்குத் தடை விதித்தார்கள். இதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
‘நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! என்று கூறினார்கள். இதைவிட அதிகமாக எனக்குச் சக்தி உள்ளது! என்று நான் கூறினேன். முடிவில், ஒருநாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக!  என்று கூறினார்கள்.
மேலும் ஒவ்வொரு மாதமும் (ஒரு தடவை) குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக! என்றார்கள். இதைவிட அதிகமாக (ஓத) எனக்கு சக்தி உள்ளது! என்று நான் கூறினேன். (நான் கேட்கக் கேட்க) குறைத்துக்கொண்டே வந்து முடிவில் மூன்று நாட்களில் ஒருதடவை குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக! என்று கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அப்துழ்ழாஹ் பின் அம்ர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1978)
ஆனால் இதற்கு நேர் மாற்றமாக ஷாபி மத்ஹபு நூல் பின்வருமாறு கூறுகிறது.
ஒருவர் குர்ஆனை ஒவ்வொரு நாளும் ஒரு தடவை ஓதி முடிக்க வேண்டும். ரமழானில் அறுபது தடவை ஓதி முடிக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் தொழுகையிலேயே ஓதி முடிக்க வேண்டும். (இக்கருத்து ஷாபி மத்ஹபின் இஆனதுத் தாலிபீன் எனும் நூலில் பாகம்-01 பக்கம்-16ல் கூறப்பட்டுள்ளது.)
ஒரு நாளைக்கு இருதடவை குர்ஆனை ஓதிமுடிப்பது சாத்தியமா? என்பது ஒருபுறம் இருக்க, இதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? என்பதைக் கூட இவர்கள் சிந்திக்கவில்லை.
03. ஜும்ஆத் தொழுகையின் நேரம் தொடர்பாக இஸ்லாம் பின்வருமாறு கூறுகிறது. ஜும்ஆவுக்கு இரண்டு நேரங்கள் உள்ளன. ஒன்று ழுஹர் நேரம் மற்றது முற்பகல் நேரம் இதுபற்றி பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகிறது.
‘நாங்கள் வெள்ளிக்கிழமை அன்று (மிகவும்) மகிழ்ச்சியாக இருப்போம் என்று சஹ்ல் பின் சஅத் (ரழி) அவர்கள் கூறினார்கள். நான் ஏன் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் எங்களுக்கு ஒரு மூதாட்டி இருந்தார். அவர் மதீனாவிலுள்ள ‘புளாஆ’ எனும் பேரிச்சந் தோட்டத்திற்கு ஆளனுப்பி (அங்கு பயிராகும்) தண்டுக் கீரையின் தண்டுகளைக் கொண்டுவரச் செய்து, அதை ஒரு பாத்திரத்தில் இடுவார். அத்துடன் சிறிது வாற்கோதுமையை அரைத்து அதில் இடுவார்.
நாங்கள் ஜுமுஆத் தொழுதுவிட்டு திரும்பி வந்து அந்த மூதாட்டிக்கு சலாம் சொல்வோம். அப்போது அவர் அந்த உணவை எங்கள் முன் வைப்பார். அதன் காரணத்தினால் நாங்கள் (வெள்ளிக்கிழமை) மகிழ்ச்சியோடு இருப்போம். ஜுமுஆவிற்குப் பிறகுதான் நாங்கள் மதிய ஓய்வு எடுப்போம், காலை உணவையும் உட்கொள்வோம்.’ (அறிவிப்பவர்: அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்), நூல்: ஸஹீஹுல் புஹாரி-6248)
ஆனால் இதற்கு நேர் மாற்றமாக ஷாபி மத்ஹபு நூல் பின்வருமாறு கூறுகிறது.
ஜும்ஆத் தொழுகை நிறைவேறுவதற்கு முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று அது ழுஹர் நேரத்தில் தொழப்பட வேண்டும் என்பது. அதற்கு முன் தொழப்பட்டால் அந்த ஜும்ஆ செல்லத்தக்கதல்ல.
(இக்கருத்து ஷாபி மத்ஹபின்; பத்ஹுல் முயீன் எனும் நூலில் பாகம்-02, பக்கம்-62ல் குறிப்பிடப்பட்டுள்ளது.)
04. போதைப் பொருள் பாவனையை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. குறைவாகப் பாவித்தாலும், கூடுதலாகப் பாவித்தாலும் போதை ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும் ஹராமேயாகும்.
போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும். இதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது. ‘அழ்ழாஹ்வின் தூதரே! எங்கள் (பிறந்த இடமான) யமன் நாட்டில் தேனில் ‘அல்பித்உ’ எனப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப் படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?) என்று கேட்டேன். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது. (ஹராம்) ஆகும் என்று பதிலளித்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரி (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-6124)
ஆனால் இதற்கு நேர் மாற்றமாக ஷாபி மத்ஹபு நூல் பின்வருமாறு கூறுகிறது.
கொஞ்சம் (போதைப் பொருள் சாப்பிடலாம்) என்பதன் கருத்து என்னவெனில் அது அறிவில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது. அது போதையூட்டக் கூடியதாக இருப்பினும் சரியே. அதிகம் என்பதன் கருத்து அது அவ்வாறு அறிவில் ஒருவிதமான பாதிப்பை ஏற்படுத்துவதாகும்.
எனவே, இது மக்ரூஹ் (வெறுக்கத் தக்கது) என்பதுடன் கொஞ்சம் சாப்பிடுவது கூடும். இது ஹராம் ஆகாது. ஆனால், இதைக் கண்டிப்பாகப் பொது மக்களிடம் மறைத்தாக வேண்டும். இல்லையெனில் அவர்கள் கொஞ்சம் என்று எண்ணிக் கொண்டு அதிகம் சாப்பிட்டு விடுவார்கள். (இக்கருத்து ஷாபி மத்ஹபின்; இஆனதுத் தாலிபீன் எனும் நூலில் பாகம்-4 பக்கம்-156ல் கூறப்பட்டுள்ளது)
05. இஸ்லாத்தில் அடிப்படை மூலாதாரமான அல்குர்ஆன் முஸ்லிம்களிடத்தில் மகத்துவமிக்க வேதமாகும். அதை  ஓதுவதையும் அதன்படி நடப்பதையும் இஸ்லாம் வணக்கமாகக் கருதுகிறது. ஏனெனில் அது இறைவனின் வார்த்தையும் வழிகாட்டலுமாகும். திருக்குர்ஆனில் ஸுரத்துல் பாத்திஹாவுக்கென்று தனிச்சிறப்பு உள்ளது. இதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.
‘நான்(பள்ளிவாசலில்) தொழுதுகொண்டிருந்தபோது என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். (தொழுகையில் இருந்தமையால்) நான் அவர்களுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை. (தொழுதுமுடித்த பிறகு) அழ்ழாஹ்வின் தூதரே நான் தொழுதுகொண்டிருந்தேன்.
(அதனால்தான் உடனடியாக தங்களுக்கு நான் பதிலளிக்க வில்லை) என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் ‘அழ்ழாஹ்’ (இறை நம்பிக்கையாளர்களே) அழ்ழாஹ்வும் (அவனுடைய தூதரும் உங்களை அழைக்கும்போது அவர்களுக்கு பதிலளியுங்கள் என்று 8:24ஆவது வசனத்தில்) சொல்லவில்லையா? என்று கேட்டார்கள்.
பிறகு நீங்கள் பள்ளி வாசலிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக குர்ஆனிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை உங்களுக்கு நான் கற்றுத்தர வேண்டாமா? என்று வினவியபடி எனது கையைப் பிடித்தார்கள்.
நாங்கள் (பள்ளிவாசலிலிருந்து)வெளியேற முனைந்த போது நான் (அவர்கள் வாக்களித்ததை நினைவூட்டி) அழ்ழாஹ்வின் தூதரே தாங்கள் குர்ஆனிலேயே மகத்துவம் பொருந்திய தோர் அத்தியாயத்தை நான் உங்களுக்குக் கற்றுத்தர வேண்டாமா? என்று கேட்டீர்களே! என்று வினவினேன்.
நபி (ஸல்) அவர்கள் (அது) அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (என்று தொடங்கும் அல்பாத்திஹா அத்தியாயமே) ஆகும். அது திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களும் எனக்கு வழங்கப் பெற்றுள்ள மேன்மை மிகு குர்ஆனுமாகும் என்று சொன்னார்கள்.’(அறிவிப்பவர்: அபூசயீத் பின் முஅல்லா (ரழி), நூல்: ஸஹீஹுல் புகாரி-5006)
ஆனால், குர்ஆனை அவமதிக்கும் வகையில் குறிப்பாக ஸூரத்துல் பாத்திஹாவை அவமதிக்கும் வகையில் ஹனபி மத்ஹபு நூல் பின்வருமாறு கூறுகிறது.
சின்னி மூக்கு உடைந்து விட்டால் தன்னுடைய நெற்றியிலும் மூக்கிலும் இரத்தத்தைக் கொண்டு ஸூரத்துல் பாத்திஹா அத்தியாயத்தை எழுதிக் குணமாகும் எனில் அவ்வாறு குணமாவதற்காக எழுதுவது கூடும்.
சிறுநீரில் எழுதினால் குணம் கிடைக்கும் என்றால் பாத்திஹா அத்தியாயத்தை சிறுநீரில் எழுதுவதும் குற்றமில்லை. (இக்கருத்து ஹனபி மத்ஹபின்; ஹாஷியது இப்னு ஆபிதீன் எனும் நூலில் பாகம்-1, பக்கம்-210ல் கூறப்பட்டுள்ளது)
குர்ஆனிலேயே சிறந்த மகத்துவமிக்க அத்தியாயமென்றும் அல்குர்ஆனின் தாயென்றும் போற்றப்படும் அல்ஹம்து அத்தியாயத்தை எந்த அளவு மதித்துள்ளார்கள் பாத்தீர்களா! அழ்ழாஹ்வின் வேதத்தை சிறுநீரில் எழுதச்சொல்லி அல்குர்ஆனை அவமதிக்கும் இந்த மத்ஹபை தூக்கிப் பிடிப்பது அவசியம்தானா? மத்ஹப் வாதிகள் சிந்திக்கட்டும்.
06. இஸ்லாம் தாம்பத்திய உறவின் மூலம் உடலியல் ரீதியான தேவைகளை பூர்த்தி செய்யுமாறு கூறுகிறது. ஒருவன் தனது ஆசையை  மணைவியிடத்தில் எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
திருமறை குர்ஆனில் 2:222ம் வசனத்தில் மாதவிலக்கு ஏற்படும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் எப்போது வேண்டுமானாலும் இல்லறத்தில் ஈடுபடலாம் என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.
ஆனால் இதற்கு நேர் மாற்றமாக ஷாபி மத்ஹபு நூல் பின்வருமாறு கூறுகிறது.
மாதத்தில் முதல் நாள் இரவிலும் கடைசி இரவிலும் மாதத்தின் நடு இரவிலும் உடலுறவு கொள்வது வெறுப்பிற்குறியதாகும். காரணம் இந்நாட்களில் உடலுறவு கொல்லும் போது ஷைத்தான் விஜயம் செய்கிறான். என்று இஹ்யாவில் வருவதாக முக்னி என்ற நூலில் பதிவாகியுள்ளது. (இக்கருத்து ஷாபி மத்ஹபின்; இஆனதுத் தாலிபீன் எனும் நூலில் பாகம்-3 பக்கம்-273ல் குறிப்பிடப்பட்டுள்ளது.)
இவ்வாறாக நேரடியாகவே நபிவழிக்கு முரண்படக்கூடிய மத்ஹபுச் சட்டங்களை இன்னும் நாம் பின்பற்ற வேண்டுமா?
மத்ஹபு நூற்களில் காணப்படும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் தொடர்பாக நோக்குவோம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.