குழந்தைகளும் பாலியலும் (3)




பாலியல் கேள்விகள்
நான் எங்கிருந்து வந்தேன்?
வாப்பா ஏன் குழந்தை பெறுவதில்லை?
ஆண் குழந்தைக்கும் பெண்குழந்தைக்கும் வேறுபாடு காணப்படுவதேன்?
ஆண் பிள்ளை பெண் பிள்ளையை மணமுடிப்பது ஏன்?
இப்படி எண்ணற்ற கேள்விகளை குழந்தை கேட்கின்றது. குழந்தைக்கு வினவுவது அழகாகவும் சுவாரஷ்யமாகவும் இருக்கின்றது. அது கேட்கும் எல்லாக் கேள்விகளும் முக்கியத்துவம் வாய்ந்தவைதான். பாலியல் குறித்த கேள்விகளும் ஏனைய கேள்விகளைவிட எந்தவகையிலும் முக்கியத்துவம் குறைந்தவை அல்ல.
குட்டிக் குட்டிக் குழந்தைகள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன? என்று உங்கள் குழந்தை கேட்கும் போது, "குழந்தைகள் தாயின் வயிற்றில்தான் வளர்கிறார்கள். வளர்ந்து பெரிதானதும் அங்கிருந்து வெளியேறுகிறார்கள்." என்று நீங்கள் பதிலளித்தால் குழந்தை மிகுந்த கவனத்துடன் அதை செவிமடுக்கும். அவ்வாறே மின்விசிறி ஏன் சுழல்கிறது என்று குழந்தை கேட்கும். இதற்கும் முன்னைய கேள்விக்கும் தரத்தில் எந்த வித்தியாசமும் கிடையாது.
முதன் முதலில் பாலியல் தொடர்பான கேள்விகளைக் கேட்கும் போது தாய் அல்லது தந்தை சிரித்துவிட்டால் இரு கேள்விகளுக்குமிடையில் வேறுபாடுண்டு என்பதை குழந்தை உணர்ந்து கொள்கின்றது. அதிலிருந்து பாலியல் குறித்த கேள்விகளை கேட்பதற்கு அது வெட்கமடைகின்றது. அதை மறைத்து உள்ளத்தில் அடக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றது.
முடிந்தளவு அவர்களுக்கு விசுவாசமாக நீங்கள் இருக்க வேண்டும்.
நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் குழந்தைக்கு என்ன சொல்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. எப்படிச் சொல்கிறீர்கள் என்பதுதான் முக்கியமானது.
அதுதான் குழந்தையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.
குழந்தை கேட்கும் கேள்விதான் என்ன பதிலை சொல்ல வேண்டும் என்பதை நோக்கி உங்களை வழிகாட்டுகின்றது. எனவே குழந்தைக்கு நீங்கள் பாலியல் தொடர்பாக வழங்கும் தகவல் அதை குற்றம் இழைக்கும் படி செய்யக்கூடாது. "இதெல்லாம் கக்கா கேள்வி!" அல்லது "உனக்கு வெட்கமில்லையா? வரவர நீ கெட்டுப் போய்விட்டாய். நல்லபிள்ளை என்றல்லவா நினைத்திருந்தேன்? பேசாமல் இரு" என்று நாம் கூறுவோமாக இருந்தால் குறித்த விடயம் தொடர்பாக பிறரிடம் ஆராயத் தொடங்கும்.
நமது விளக்கத்தை அதற்குப் பிறகு நாடி நிற்காது. இது ஒருபுறமிருக்க இன்னொரு விடயத்தையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். அதாவது குழந்தையின் இந்தக் கேள்வியை அதிகம் தூக்கிப்பிடிக்கக் கூடாது. குழந்தை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் அளவுக்கு அதிக விளக்கத்தையும் கொடுக்கத் தேவையில்லை. எளிமையான பதிலே போதுமானது. ஒரு ஐந்து வயதுக் குழந்தை "குழந்தை எங்கிருந்து வருகின்றது?" என்று கேட்டால் "தாயின் வயிற்றிலிருந்து" என்ற பதில் போதுமானது. "கரு முட்டையிலிருந்து அல்லது விந்துவிலிருந்து" என்று பதில் கொடுத்தால் குழந்தை கோழி முட்டையைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்துவிடும். அதாவது குழந்தைக்கு மயக்கமாகவும் பதிலளிக்கத் தேவையில்லை.
குழந்தைகளின் கேள்விக்கு நேரடியான, எளிமையான பதில்கள்தான் குழந்தைக்குச் செய்யும் மிகச்சிறந்த கைமாறாகும். அதுதான் நல்ல விளைவை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் சில பெற்றோர் நோரடியாகப் பதிலளிப்பதற்கு வெட்கப்படுகின்றனர். இது சில குழந்தைகள் நேரடியாகக் கேட்பதற்கு வெட்கப்படுவதைப் போன்றதுதான்.
பாலியல் தொடர்பான விடயங்களை உங்கள் குழந்தைகளுடன் உரையாட, விளக்க உங்களுக்கு சங்கடமாக இருந்தால் அல்லது விடையளிப்பது கஷ்டமாக இருந்தால், உங்கள் மனம் அதற்கு இணங்கவில்லை என்றால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இதுபற்றிய புத்தகங்களைக் கொடுங்கள். அல்லது "உனது கேள்விக்கு பதிலளிக்குமளவுக்கு எனக்கு இதுபற்றி பூரணமாகத் தெரியாது. இதுபற்றி நான் படித்துவிட்டு உனக்குச் சொல்லும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை நீ கேட்கும் போது இதற்கான பதிலைக் கூறுவேன்" என்று சாதாரணமாகப் பதிலளித்துவிடுங்கள். சிரிக்காமல் இந்தப் பதிலை சொல்லும் போது குழந்தையை நம்மை விட்டு விலகிச்செல்லவிடாது தடுக்கும். மாறாக அவசரப்பட்டு "உங்களைப்போல் சின்னப் பிள்ளைகள் இந்தமாதிரி கேள்விகளைக் கேட்கக்கூடாது" என்று சொல்லிவிடாதீர்கள்.
எல்லாக் கேள்விகளுக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நீங்கள் பதிலளிக்கக்கூடிய தயார்நிலையில் இருக்க வேண்டும் என்பது முக்கியமல்ல. ஆனால் குறிப்பிட்ட விடயம் தொடர்பான நமது நிலைப்பாடு என்பது முக்கியமாகும். அதாவது குழந்தை கேட்கும் கேள்விகள் தாய் அல்லது தந்தை உண்மையாக, சீரியஸாக பதிலளிப்பார்கள் என்ற நம்பிக்கையை குழந்தைக்கு ஊட்டினால் போதுமானது. இதன் மூலம் பாலியல் கேள்விகளுக்கு முன்னால் மௌனம் என்ற மாபெரும் இரும்புத் திரையை நாம் போடக்கூடாது.
பாலியல் விடயம் குறித்து குழந்தை தனிமையில் உளச்சிக்கலுக்குள்ளாகும் நிலையையும் ஏற்படுத்தக் கூடாது. அது பற்றி அடிப்படைத் தகவலை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதேநேரம் அதுபற்றி மிகச்சரியான முறையிலும் கற்றுக் கொள்ள வேண்டும். தெளிவற்ற தன்வயதையெத்த சிறுசிசுகளிடமிருந்து கிசுகிசுச் செய்திகள் ஊடாகவும் அறிவதற்கு முன்னால் முந்திக் கொள்ள வேண்டும். எனவே ஆரம்பத்திலிருந்து உடல் உறுப்புகளின் பெயர்கள் குழந்தைக்கு அறிமுகப்படுத்துவது முக்கியமாகும். விஞ்ஞானபூர்வமான பெயர்களால் அவற்றை அறிமுகப்படுத்துவதும் எதிர்காலத்தில் பயனளிக்கும்.
இறுதியாக ஒன்றைக் கூறவிரும்புகிறேன்.
குழந்தைக்கு பாலியல் பற்றிய குறைந்தபட்சத் தகவல் வழங்கினால் கடைசிவரைக்கும் அது போதும் என்று நினைத்துவிடாதீர்கள்.
குழந்தை ஒரே கேள்வியை பலமுறை திரும்பத்திரும்பக் கேட்கும். எனவே நீங்களும் திரும்பத்திரும்ப பதிலளிக்க வேண்டும்.
குழந்தை வளரவளர உங்கள் பதிலும் வளரவேண்டும்.
குழந்தை முதிர்ச்சியடைய அடைய உங்கள் பதிலும் முதிர்ச்சியடைய வேண்டும்.
ஒரேநேரத்தில் குழந்தையின் உள்ளத்தில் இந்தக் கேள்விகள் ஒன்று போல் வருவதில்லை.
முன்னைய கேள்வியைப் போல் அதற்களித்த பதிலையும் குழந்தை மறந்துவிடுகின்றது.
இதன் கருத்து முன்னர் நீங்கள் கூறிய அனைத்தையும் குழந்தை மறந்துவிடுகின்றது என்பதல்ல.
அதே கேள்வி அதே பதில் குழந்தை முதிர்ச்சியடைய அடைய வித்தியாசமாகத் தெரிகின்றது.
ஒரே ஆற்றில் நாம் இரண்டுமுறை குளிக்க முடியாது.பருவ ஆறும் அப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. நான்கு வயதுக் குழந்தைக்கு நீங்கள் கொடுத்த தகவல்கள் ஐந்து வயதுக் குழந்தைக்கு விளங்கக் கூடியதாக இருக்கலாம். ஒரு குழந்தைக்கு குறிப்பிட்ட வயதில் நீங்கள் வழங்கும் குறிப்பிட்ட தகவலை உங்கள் பட்டியலிருந்து நீக்கத் தேவையில்லை. அதை அப்படியே மீண்டும் ஒப்புவிக்கத் தேவையுமில்லை. அதே விடயத்தை ஒவ்வொரு முறை கூறும் போதும் புதுமையாக்கி, மெருகூட்டி இன்னும் இரண்டொரு தகவலைக் கூட்டிச் சொன்னால் போதும்.
இன்ஷா அல்லாஹ் கட்டுரை தொடரும்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.