அந்த 72 கூட்டத்தினர் யார்?
தொடர் -1.  அன்புடையர்: அஸ்ஸலாமு அலைக்கும்! வரஹ்மத்துல்லாஹி, வபரக்காத்துஹு! அன்பிற்கினிய கொள்கைச் சொந்தங்களே!...
கி.பி 7ம் நுாற்றாண்டு இருளில் மூழ்கி இருந்த அரேபியாவையும் அதனை சூழ இருந்த உலகையும் இஸ்லாம் எனும் ஒளிக்கதிர்கள் மூலம் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அரவணைத்தார்கள். 23 ஆண்டுகள் உலகம் வியக்கும் வண்ணம் இஸ்லாமியப் பிரசாரத்தை மேற்கொண்டு அதில் 10 ஆண்டுகள் செங்கோல் ஆட்சி செலுத்தினார்கள். அந்த ஆட்சி போன்றதொரு ஆட்சியை வரலாறு ஒரு போதும் கண்டதில்லை. அவர்களின் மரணத்தின் பின்னர் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. எனினும், இஸ்லாம் வாழ்கிறது. இஸ்லாத்தை அழிக்க எடுத்த எத்தனங்கள் எல்லாம் தகர்க்கப்பட்டது. நெடிய அதன் வரலாற்றில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. சுமார் 150 ஹிஜ்ரி ஆண்டுகால வரலாற்றை உணர்வு பூர்வமாக அறிஞர் பீ. ஷைனுல் ஆபிதீன் அவர்கள் மக்கள் மத்தியில் ஒரு ரமழான் தொடரில் ஜனரஞ்சகப்படுத்தினார்கள். சர்ச்சைகளும் சிக்கல்களும் நிறைந்த வரலாற்றை எளிமையான தமிழில் இனிய முறையில் ஒரு வரலாற்று அசானுக்குரிய மிடுக்கோடு அவர் தமிழ் உலகிற்கு முன்வைத்த பாங்கு ஏகத்துவ எதிர் முகாம்களைக் கூட கொஞ்சம் உசுப்பியது. அதனால், அவர்கள் சில சொல்லாடல்கள் பற்றி சில்லறைத்தனமான விமர்சினங்களையும் முன்வைத்தனர். அந்த விதண்டாவாதங்களின் தாண்டவ ஆட்டம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இத்தனைக்கும் மத்தியில் இத்தொடர் உரையின் முக்கியத்துவம் கருதி சேலம் தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லுாரியின் ஆசிரியராக இருந்து தற்போது கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் பிரசாரகராக உள்ள சகோ. மனாஸ் பயானி அவர்கள் தொகுத்தளித்திருக்கின்றார்கள். அதை சில திருத்தங்களுடன் அதிர்வுகளிலிருந்து நன்றியோடு எமது தளத்திலும் வெளியிடுகின்றோம்.
அறிமுகம்! -------------- நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் இந்த சமுதாயத்தில் ஏராளமான கருத்து வேறுபாடுகளும் கொள்கைக் குழப்பங்களும் இடம்பெற்றன. அவர்களின் காலத்தில் இருந்து இன்று வரை இஸ்லாத்தின் பெயரால் முஸ்லீம்கள் பல கூறுகளாக பிரிந்து நிற்கின்றனர். இந்த சமுதாயத்தை வழிநடத்தக் கூடிய மார்க்க அறிஞர்கள் இந்தக் கருத்து வேறுபாடுகள் அனைத்தும் இந்த சமுதாயத்திற்கு கிடைத்த அல்லாஹ்வின் மிகப்பெரிய அருட்கொடை என்ற தவறான செய்தியுடன் இதை நியாயப்படுத்தி வருகின்றனர். அவரவருக்கு எந்தக் கொள்கை சரியாகத் தென்படுகிறதோ அதைப் பின்பற்றலாம். அது மக்களுக்கும் சமுதாயத்திற்கும சிறந்தது என்று தவறான நச்சுக் கருத்தையும் மக்கள் மத்தியில் விதைத்துள்ளனர். நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் இன்று வரை ஏற்பட்டிருக்கக்கூடிய பிளவுகள் மார்க்க அடிப்படையில் சரியானதா?எல்லாம் சரிதான் என்ற நிலையில் நடந்து கொள்வதா? அல்லது இருக்கின்ற இந்த கூட்டங்களில் எது சரியானது என்று ஆய்வு செய்து அதில் நல்லதை தேர்வு செய்து கொள்வதா? என்ற அடிப்படையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் திருமறைக்குர்ஆனில் இந்த சமுதாயம் பல கூறுகளாக கொள்கையிலும் கோட்பாடுகளிலும் சட்டதிட்டங்களிலும் பிளவு பட்டு பிரிந்து செல்லும் என திருமறைக்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் கூறுகிறான். "அல்லாஹ் நினைத்திருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக்கியிருப்பான். எனினும் உங்களுக்கு அவன் வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக (அவ்வாறு ஆக்கிடவில்லை.) எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான் (5:48) நான் நினைத்திருந்தால் உங்களை எழுபத்தி இரண்டு கூட்டமாகவோ ஐம்பத்தி இரண்டு கூட்டமாகவோ பிரித்திருக்க மாட்டேன். மாறாக நான் உங்களை ஒரே ஒரு சமுதாயமாக ஆக்கியிருப்பேன் என்றாலும் உங்களை நான் சோதிப்பதற்குதான் இவ்வாறு பிரித்துள்ளேன் என்று அல்லாஹ் கூறுகிறான். நீங்கள் எதில் முரண்பட்டு இருந்தீர்களோ அதில் சரியானது எது என்று உங்களுக்கு நான் மறுமையில் தீர்ப்பளிப்பேன். எல்லாம் சரியென்று அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவில்லை நீங்கள் பல கூறுகளாக பிரிந்துள்ளீர்கள் அதில் எது சரியானது என்று நான் உங்களுக்குத் தீர்ப்பு சொல்வேன். இப்படிப் நீங்கள் பிளவு பட்டுச் செல்வது எனக்கு விருப்பம் இல்லை அதை நான் உங்களுக்கு விளக்குவேன். அதில் தவறிழைத்தவர்களை நான் தண்டிப்பேன். மற்றொரு வசனத்தில் இந்த சமுதாயம் பிளவு படும் அவ்வாறு பிளவு படுவது கொள்கை அளவில் சரியானது இல்லை என்று கீழ்க் காணும் வசனத்தில் தெளிவு படுத்துகிறான். "அல்லாஹ் அல்லாதவர்களையா இறைவனாகக் கருதுவேன்? அவனே அனைத்துப் பொருட்களின் இறைவன். (பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதிக்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். பின்னர் உங்கள் இறைவனிடமே உங்கள் மீளுதல் உள்ளது. நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்'' என்றும் கூறுவீராக! (6:164) நீங்கள் முரண்பட்டது பற்றி கியாமத் நாளில் அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துவான் (16:92) நீங்கள் முரண்பட்ட விஷயத்தில் அல்லாஹ் உங்களுக்கிடையே கியாமத் நாளில் தீர்ப்பளிப்பான்.(22:69) நீங்கள் முரண்பட்டு அதுவும் சரி இதுவும் சரியென்று நிற்பதற்கு நான் உங்களுக்கு மறுமை நாளில் தீர்ப்பளிப்பேன். இதில் இருந்து அல்லாஹ் பிளவுபட்டு இருப்பது சிறந்தது இல்லை அதையும் விசாரித்து நான் தீர்ப்பளிப்பேன் என்று எச்சரிக்கை செய்வதுடன் இந்த சமுதாயம் பிளவு படும் என்பதையும் அந்தப் பிளவு சிறந்தது இல்லை என்பதையும் சொல்லிக் காட்டுகிறான். இன்று இஸ்லாம் என்ற போர்வையில் எத்தனையோ இயக்கங்களும் பிரிவுகளும் இஸ்லாத்தின் பெயரால் இருந்தாலும் இவைகளில் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் கட்டுப்பட்டு அவர்கள் காட்டித்தந்த நேரான வழியை விட்டும் பிரிந்து திசைமாறிச் சென்று கொண்டிருக்கின்றது. இப்படி இரண்டும் கெட்ட நிலையில் எல்லாம் சரிதான் என்ற போர்வையில் செயல் பட்டால் எது சரியான வழி என்று அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித்தந்தார்களோ அந்த நேரான வழியை விட்டும் இவர்களை வழிதவறச் செய்துவிடும். இதை பின்வரும் வசனத்தில் தெளிவு படுத்துகிறான். "இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.(6:153) இந்த வசனத்தில் மார்கத்தின் பெயரால் ஹலாலை ஹராமென்றும் கடமையானது கடமையற்றது என்றும் சுன்னத்தை பித்அத் என்றும் பல கூறுகளாக பிரித்தால் எது நேரான வழியாக இருக்கிறதோ அந்த வழியை விட்டும் வழி தவறச் செய்து விடும். "தமது மார்க்கத்தைப் பிரித்து, பல பிரிவுகளானோரின் எந்தக் காரியத்திலும் (முஹம்மதே!) உமக்குச் சம்மந்தம் இல்லை. அவர்களின் விஷயம் அல்லாஹ்விடமே உள்ளது. பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.(6:159) 9:42 மார்க்கத்தை பிரிக்கக் கூடாது என்று அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் கட்டளையிடவில்லை அனைத்து இறைத் தூதர்களுக்கும் இதைத்தான் தாரக மந்திரமாகக் கூறியுள்ளான். ஒவ்வொரு இறைத் தூதர்களை அனுப்பும் போது நபி கொண்டு வந்த மார்க்கத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் அதன் பிறகு மக்களாகிய நீங்கள் மார்க்கத்தை பல கூறாகப் பிரித்து விடாதீர்கள். பின்வரும் வசனத்தில் கூறுகிறான். "நூஹுக்கு எதை அவன் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக்கினான். (முஹம்மதே!) உமக்கு நாம் அறிவித்ததும் இப்ராஹீம், மூஸா மற்றும் ஈஸாவுக்கு நாம் வலியுறுத்தியதும், "மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்! அதில் பிரிந்துவிடாதீர்கள்!'' என்பதே. நீர் எதை நோக்கி அழைக்கிறீரோ அது இணை கற்பிப்போருக்குப் பெரிதாக உள்ளது. அல்லாஹ், தான் நாடியோரைத் தனக்காகத் தேர்வு செய்கிறான். திருந்துவோருக்குத் தன்னைநோக்கி வழி காட்டுகிறான். அல்குர்ஆன் (42:13) இறைத் தூதர்களான நூஹ், முஸா, ஈஸா, இப்றாகீம் (அலை) ஆகியோருக்கு எந்தக்கட்டளையை செயல்படுத்தும்படி உத்தர பிறப்பித்தானோ அதையே இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் தனியான ஒரு மார்க்கத்தை தேர்வு செய்து கொடுக்கவில்லை அவ்வாறு அவன் அவர்களுக்கு கட்டளையிடவும் இல்லை. எல்லா இறைத் தூதர்களுக்கும் எதை தாரக மந்திரமாக சொன்னானோ அந்த தாரக மந்திரத்தையே அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கும் செயல்படுத்துமாறும் அந்த மார்க்கத்தை நிலை நாட்டுங்கள் என்றும் அதில் பிரிந்து விடாதீர்கள் என்றும் கூறியுள்ளான். அல்லாஹ் இந்த சமுதாய மக்களை எவ்வளவுதான் எச்சரிக்கை செய்தாலும் முந்தைய சமுதாயம் எப்படி பல கூறுகளாக மார்க்கத்தில் பிளவு பட்டு பிரிந்துள்ளார்களோ அதே போன்று ஒரு இறைவனை வணங்கக்கூடிய, ஒரு குர்ஆனை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய, ஒரு தூதரை பின்னற்றக்கூடிய இந்த சமுதாயமும் இன்று மார்க்கத்தின் பெயரால் பல கூறாக பிரிந்து நிற்கிறது. இது பற்றி நபி (ஸல்) அவர்கள் தெளிவாக நமக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். முன்சென்ற சமுதாயத்தவர்களான முஸா (அலை) அவர்களைப் பின்பற்றக் கூடிய யூதர்களும் ஈஸா (அலை) அவர்களைப் பின்பற்றக் கூடிய கிறித்தவர்களும் எப்படி அவர்களின் மார்க்கத்தில் எழுபத்தி இரண்டு கூட்டங்களாக பிரிந்து சென்றார்களோ அப்படி இந்த சமுதாயம் அவர்களை விடவும் ஒரு படி மேல் சென்று பிரிந்து செல்லும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களுக்கும் ஈஸா அலை அவர்களுக்கும் இடைப்பட்ட காலம் சுமார் ஆறு நூற்றாண்டுகள் இருக்கும். இந்த குறுகிய கால இடைவெளியில் கிறிஸ்தவர்கள் எப்படி எழுபத்தி இரண்டு கூட்டங்களாக பிரிந்து சென்ற ஆண்டு நாம் நினைப்பது போல் பத்தாயிரம் ஆண்டுகளோ அதற்குக் குறைவான ஆண்டுகளோ இல்லை மாறாக நபி (ஸல்) அவர்களுக்கும் ஈஸா (அலை) அவர்களுக்கும் உள்ள இடைவெளி மிகவும் குறைவானது. அக்குறைந்த இடைவெளியில் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் 72 கூட்டமாகப் பிரிந்து நிற்கும் காட்சியைப் பார்க்கிறார்கள். அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் இந்த சமுதாயத்திற்கு ஒரு எச்சரிக்கையைச் செய்தார்கள். عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ بَنِي إِسْرَائِيلَ افْتَرَقُوا عَلَى إِحْدَى وَسَبْعِينَ مِلَّةً ، وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلاَثٍ وَسَبْعِينَ مِلَّةً كُلُّهَا فِي النَّارِ إِلاَّ مِلَّةً وَاحِدَةً فَقِيلَ لَهُ : مَا الْوَاحِدَةُ ؟ قَالَ : مَا أَنَا عَلَيْهِ الْيَوْمَ وَأَصْحَابِي நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ரவேலர்கள் எழுபத்தி ஒரு பிரிந்தார்கள் என்னுடைய சமுதாயம் எழுபத்தி மூன்று கூட்டமாக பிரிவார்கள் ஒரு கூட்டத்தைத் தவிர அந்த ஒரு கூட்டம் யார் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது? நானும் என்னுடைய தோழர்களும் இன்றைய தினம் எப்படி இருக்கிறோமோ அப்படி இருக்கக் கூடியவர்கள் தான் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (ஆதாரம்: முஸ்தத்ரக் அஸ்ஸஹிஹைன்: 444) இந்த சமுதாயத்தில் ஏற்பட்ட பிளவுகள், முரண்பாடுகள், மார்க்கம் துண்டாக்கப்படும். இவைகள் அனைத்திற்கும் மறுமையில் கேள்வி கணக்கு உள்ளது என்று அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான். நபி (ஸல்) அவர்கள் ஹதீஸ்களில் கூறுகின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் இவர்களைப் பட்டியல் போட்டு எச்சரித்தார்கள். நீங்கள் யூத கிறிஸ்தவர்கள் பிரிந்து சென்றதை விடவும் ஒரு படி மேல் சென்று 73கூட்டத்தினராக பிரிந்து செல்வீர்கள். பிரிந்து நிற்கும் எழுபத்தி மூன்று கூட்டங்களில் அனைத்துக் கூட்டமும் நரகத்திற்குச் செல்லும். ஒரே ஒரு கூட்டத்தைத் தவிர என்ற இந்த ஹதீஸை வைத்துக் கொண்டு இந்த சமுதாயத்தை பல வழிகளிலும் வழிநடத்தக் கூடிய அனைத்து அறிஞர்கள் இந்த நபிமொழியை மக்கள் மத்தியில் கூறி நாம் தான் அந்தக் கூட்டத்தினர் என்று ஒவ்வொரு கூட்டத்தாரும் கூறி பெருமைப்பட்டுக் கொள்வார்கள். இவ்வாறு ஒவ்வெருவரும் பெருமைப் பட்டுக் கொள்வதற்குக் காரணம் இந்த ஹதீஸில் கூறப்பட்ட நானும் என்னுடைய தோழர்களும் இன்று எவ்வாறு இருக்கிறோமோ அவ்வாறு இருக்கக் கூடியவர்கள் என்ற செய்தியினை மக்கள் மத்தியில் மறைத்துக் கூறுவார்கள். இந்த நபி மொழியில் கூறப்பட்டுள்ளதை நன்கு கவனித்தால் இன்று என்ற ஒரு வாசம் இடம் பெற்றுள்ளது. இதை அவர்கள் கவனிக்கத் தவறி விட்டார்கள்.இன்று என்ற வாசகத்தை யார் ஒருவர் கூறுகிறாரோ அவர் வாழும் காலத்தைத் தான் குறிக்கும். நான் கூறினால் நான் வாழ்கிற காலத்தைத்தான் குறிக்கும் நீங்கள் இன்று என்று கூறினால் நீங்கள் வாழும் காலத்தைக் குறிக்கும். இன்று,இப்போது, இந்தக் காலம் என்பதை யார் இந்த வார்த்தையைக் கூறினாலும் அவருடைய வாழ் நாளைத் தான் குறிக்கும். இன்று என்ற வார்த்தையை நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பது அவர்கள் காலத்தில் வாழும் நபித் தோழர்களையும் இணைத்துக் கூறுவதனால் அவர்களுக்குப் பிறகு நபித் தோழர்கள் எதையேனும் ஒன்றைச் செய்தாலோ அல்லது நாம் அதை மார்க்கம் என்று எண்ணிக் கொண்டு செய்தாலும் அது தவறுதான். எனவே யார் அந்த ஒரு கூட்டத்தில் இருக்க ஆசைப்படுகிறாறோ அவர் நபி (ஸல்) அவர்கள் கூறுவது போல் நானும் என்னுடைய தோழர்களும் இன்றைய தினத்தில் எப்படி நடக்கிறோமோ அப்படி நடக்கக் கூடியவர்கள்தான். அந்த ஒரு கூட்டம் தான் வெற்றி பெற்ற கூட்டம் என்று மிகத் தெளிவாக இருக்கிறது. "நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டம் சுவனம் செல்லும் என்று கூறிய போது நபித் தோழர்களால் நபி (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்டக்கப்பட்டது? அந்த ஒரு கூட்டத்தினர் யார்? (எழுபத்தி இரண்டு கூட்டம் எங்களுக்கு தேவையில்லை) என்று அந்த ஒரு கூட்டத்தை எங்களுக்கு கூறுங்கள் நாங்கள் அதில் இருப்போம் என்று அவர்கள் கூறியபோது நபியவர்கள் நானும் என்னுடைய தோழர்களும் இன்றைய தினம் எப்படி இருக்கிறோமோ அவ்வாறு இருக்கக் கூடியவர்கள் தான் அந்த ஒரு கூட்டம் என்று பதிலளித்தார்கள்". இன்று இந்த நபி மொழியை மக்களுக்கு கூறும் அறிஞர்கள் நானும் என்னுடைய தோழர்களும் இன்று எவ்வாறு இருக்கின்றோமோ அவ்வாறு இருக்கக் கூடியவர்கள்தான் வெற்றிபெற்ற அந்த ஒரு கூட்டம் என்று வரும் கேள்வியை மறைத்து இருட்டடிப்புச் செய்து விடுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதையும் மார்க்கத்தில் மறைக்க வில்லை அவர்கள் நமக்கு போதித்தது தெளிவான மார்க்கம். இந்த மார்க்கத்தை ஆளாளுக்கு வளைக்கும் விதமாக விட்டுச் செல்லவில்லை அவர்கள் இந்த சமுதயாத்திற்கு எதையும் விளக்காமலும் மரணிக்க வில்லை இந்த ஹதீஸை கூறிய அல்லாஹ்வின் தூதர் இதன் மூலம் வெற்றி பெற்ற கூட்டத்தை விளக்காமல் சென்றிருந்தால் இதனால் சமுதாயத்துக் என்ன பயன் கிடைக்கும்? இதன் மூலம் இந்த சமுதாயத்திற்கு என்ன நன்மை? யாருக்கு இந்தப் போதனை பயனளிக்கும்? இதன் மூலம் யார் திருந்துவார்கள்? என்று சிந்தித்துப் பார்த்தால் கண்டிப்பாக அவர்கள் மக்களுக்கு இது பற்றி விளக்கமால் சென்றிக்க மாட்டார்கள் என்று உறுதியக் கூற முடியும். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஆழமான பொருளை (விளக்கம் அதிகமாக தேவை) உடைய வார்த்தைகளை இரத்தினச் சுறுக்கமாக பேசக் கூடியவர்கள். அதனால் அவர்கள் மக்களுக்கு எதையும் தெளிவாக விளக்கும் ஆற்றலும் உடையவர்களாக இருந்தார்கள். உதாரணமாக ஒரு சபையில் இருக்கும் நூறு பேர்களைப் பார்த்து இதில் உள்ள இருபத்தி ஐந்து பேர்கள் நல்லவர்கள் எழுபத்தி ஐந்து பேர்கள் கெட்டவர்கள். என்று கூறினால் அதில் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை எந்த இருபத்தி ஐந்து நல்லது எந்த எழுபத்தி ஐந்து கெட்டது என்பதை கூறினால் அதற்குத் தகுந்தாற் போல் நம்மை மாற்றிக் கொள்ளவோ திருத்திக் கொள்ளவோ முடியும். நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறிய பிறகு அந்த ஒரு கூட்டம் யார்? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நானும் என்னுடைய தோழர்களும் இன்றைய தினம் எப்படி இருக்கிறோமோ அப்படி இருக்கக் கூடியவர்கள் தான் என்று பதிலளித்தார்கள். மிகவும் அற்புதமான ஒரு பதிலைச் சொன்னார்கள். 72 கூட்டத்தை விளங்குவதற்கு முடியாவிட்டாலும் ஒரு கூட்டத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். இதில் அந்த எழுபத்தி இரண்டு கூட்டத்தாரை கண்டு கொள்வதற்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் கூறிய அந்த ஒரு கூட்டத்தாரில் நாம் இருக்கிறோமா? இல்லையா? என்பதை முதலில் பார்க்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் அதை தொடர்2ல் பார்ப்போம்....!!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.